Saturday, May 19, 2012

தொலைக்காட்சிப்பெட்டி


பெரும்பாலும் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் காரணமாகவே
நான் தொலைக்காட்சிப்பெட்டியை வெறுப்பதுண்டு. அதன் நிகழ்ச்சி
நிரல்களில்   மறுஒளிபரப்பு என்ற ஒரு விஷேசத் தன்மை வேறு உண்டு.           ஒரு முறைகூட காண இயலாத நிகழ்ச்சிகளை மறுபடியும் ஒளிபரப்பும்போது அணைத்து விடுவதை விட எதையும் செய்வதற்குப் பிடிப்பதில்லை. இதன் காரணம்,   நடுவர் நிகழ்வின் நடுவில் கோபித்துக்கொண்டு எழுந்து
செல்வது,  வெளியில் தள்ளப்பட்ட போட்டியாளரை மீண்டும் மேடைக்கு அழைத்து வாய்ப்பு தருவது,  சண்டைபோடுவது போல் எதையாவது
செய்ய வந்து மீண்டும் கட்டியணைத்து ஏதோ பல நாள் நட்பு திரும்ப சேர்ந்ததுபோன்று செய்து காட்டுவது (அப்போது கவனித்தீர்களானால்,  கேமராவை ஸ்லோமோசனில் இயக்கி, பின்னணி இசையை இயக்குவார்கள்), மார்கெட் இல்லாத நட்சத்திரப்பட்டாளங்களைப் பயன்படுத்திக்கொண்டு (ஏதாவது பெரிய டைரக்டர் நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் இவர்களின் திறமையைப்(?) பார்த்து அடுத்த படத்தில் வாய்ப்பு தந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில்) நிகழ்ச்சியினை (சூடேற்றுவது) நடத்தி முடிப்பது, வெறுமனே பொழுதைக் கழிக்க வைக்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளும், பொது அறிவு(!) நிகழ்ச்சிகளும் (பொது அறிவு வர வேண்டுமென்றால் நிகழ்ச்சியில் வருவது போல் மாடல் அழகிகள் உடனிருக்க வேண்டும்,      அது நிகழ்ச்சி மக்களிடம் கவனம் பெற ஒரு வழி என்பார்கள்), ஏற்கனவே கூடிப்பேசி மேடையேறும் குஸ்தி நிகழ்ச்சிகள்,உங்க ட்ரெஸ்ஸு நல்லா இருக்கு,நீங்க அழகா சிரிக்கறீங்க,  ஏன் ரொம்ப நாளா போன் பண்ணல ?  என்று கேமராவைப் பார்த்து பந்தா பண்ணும் கேம்பையரிகளும்,   மன்மதக்குஞ்சுகளும் கொஞ்சிக்கொள்ளும் நிகழ்ச்சிகள்,  தொழிலாளர்களை வரவழைத்து போலி யார் என்று கண்டறிய அவர்களை நிற்க வைத்து சிரிப்பது,காலை ஆரம்பித்தால் மாலை வரை மன்னிக்கவும் இரவு வரை நாடகங்கள் (வரிசையாக குடும்பம்,காதல்,பெண்போலீஸ் முன்னிலை நாடகம், பள்ளிப்பிள்ளைகளின் காதல்,....),  பேய் இருக்கா, இல்லையா போன்ற நிகழ்ச்சிகள்,சரி பிடித்த படம்,  பார்க்கலாம் என்று அமர்ந்தால், வணிகம், காசு,தவிர்க்க முடியாது என்பதற்கு சாட்சியாக பதினைந்து நிமிடம் படம்,  இருபது நிமிடம் விளம்பரம் (அதையும் பொறுத்துப் பார்த்தால் படம் ஒன்றும்பிடிபடப்போவதில்லை), இப்படி இன்ன பிற இத்யாதி
-களைக் கொண்டு வலம்வரும் சிறுபிள்ளைத்தனமான,  மிகைப்படுத்துதல் என்ற பாசாங்குப்பொட்டலமாக நிகழ்ச்சிகள் இருக்கின்றன. இதற்கெல்லாம்
நேரத்தை வீணடிக்கும் பட்சத்தில் ஒரு நாவலின் பதினைந்து பக்கங்களையோ அல்லது இரண்டு சிறுகதைகளையோ வாசித்து விடலாம்.

மேற்குறிப்பிட்டவை அனைத்தும் பெரும்பான்மையாக நாட்களை தொலைக்-
காட்சிப்பெட்டியினை ஆக்கிரமித்துள்ள நிகழ்ச்சிகள். இதைப் பெரும்பான்மை
-யினர் பார்ப்பதால் பொழுதுபோக்கு அல்லது வேலை செய்துகளைத்து வருகிறோம் மன அழுத்தத்தைக் குறைக்க அல்லது கவலையை மறக்க இத்தகைய திறப்புகள் தேவைப்படுகின்றன,குறிப்பாக கல்யாணமாகி வீடே நிலை என்று இருக்கும் பெண்களுக்கு தொலைக்காட்சி ஒரு நண்பன்
ஆகிய பதிலை ஏற்றுக்கொள்வது மட்டுமே நல்லது. ஒரு வேளை எனக்கு ரசனை குறைவு என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர கருத்தைத் திணிப்பது மூடத்தனம்.இதற்கு விதிவிலக்காக வேறு பல தொலைக்காட்சிகள் பல நல்ல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.தமிழில் மட்டுமின்றி மற்ற பல மொழிகளிலும் அவ்வகை நிகழ்ச்சிகள் உண்டு. அறிவியல் சம்பத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் காட்சியின் அருகில் இருந்து பார்ப்பதுபோன்ற உணர்வினைத் தரும் நிகழ்ச்சிகள், பழைய அரசுத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள்,வேற்று மொழித் திரைப்படங்கள் மேலும் மிகையில்லாத பல நல்ல
நிகழ்ச்சிகள் உண்டு. தனியார் தொலைக்காட்சிகளில் சிலவற்றையும்,
சில நிகழ்ச்சிகளையும் இதன் பட்டியலில் சேர்க்கலாம்.  உதாரணத்திற்கு
ஒரு நிகழ்ச்சியில் திருநெல்வேலிக்காரர் ஒருவர் பொதுஅறிவுக்-
கேள்விகளை நகைச்சுவையுடன் தெருவில் மக்களிடம் கேட்பதும்,
அதற்கு அவர்கள் சொல்லும் பதிலுக்கு இவர் திருநெல்வேலித் தமிழில் எக்களிப்பதையும் ஒருமுறை காணநேர்ந்தது, சரி வித்தியாசமாக
இருக்கிறதே என்று நினைத்து நிகழ்ச்சி முழுவதையும் பார்த்தேன். அது
ஒரு தரமான நிகழ்ச்சி என்று சொல்லிவிடமுடியாது.  ஆனால்,அதன் இன்னொரு முகத்தை அணுகினால் ஒரு வேதனை கலந்த ஆச்சரியம் தெரிந்தது.படிக்காதவர்களை விட்டுவிடலாம், படிக்கும், படித்து வேலையில் இருப்பவர்களும் கூட கேள்விகளுக்கு கேனத்தனமாக விடையளிப்பதை நினைத்து நகைப்பும், கவலையும் ஒரு சேர வந்தது. நினைவிலுள்ள கேள்விகளையும் , அதற்கு நமது மக்களின் விடையையும் அளிக்கிறேன்.

1) எள்ளில் இருந்து என்ன கிடைக்கும்?

பதில்: இஞ்சின் ஆயில் ( இது ஒரு கல்லூரிப் பெண் சொன்ன பதில்).

2) வெள்ளி எப்படி கிடைக்கிறது?

பதில்: மரத்திலிருந்து (ஒரு படித்த இளைஞனின் பதில் இது).

3) டால்டாவின் மறுபெயர் என்ன?

பதில்: மண்ணென்ணெய் (குடும்பப்பெண்)

4) Singular,Plural தமிழில் இதற்கு என்ன பெயர்?

பதில்: பெயர்ச்சொல்,வினைச்சொல் ( வேலையிலிருக்கும் பெண்மணி)

5) தலையிலிருக்கும் பேன் எப்படி உருவாகிறது?

பதில்: அது குஞ்சு போட்டு குட்டி பறிக்கும். (ஆசிரியர்)

6) ஓசோன் லேயர் என்றால் என்ன?

பதில்: அது மேல இருக்கு. ( பள்ளி செல்லும் மாணவி)

7) கொத்தமல்லி என்பது செடிவகையா? கொடிவகையா?

பதில்: முதலில் கொடி, அப்புறம் கொடியிலிருந்து செடி. (படித்த பெண்)

இப்படி ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி நிகழ்ச்சியினை கலகலப்பாக்கு-
வதற்கு முயற்சிப்பது போன்ற அறிவுப்பூர்வமான(?) பதிலளித்தார்களே
ஒழிய ,           யாரும் நேர்மையாக 'தெரியவில்லை' என்று சொல்வதையே என்னால் பார்க்க முடியவில்லை.              அவ்வளவு ஏகாந்தமாக அப்போது வாயில் வருவதை எடுத்துவிட்டு அவர்களும் சிரிக்கிறார்கள்.              இதில்
பயனளித்த ஒன்று,சிறு சிறு தகவல்கள்கூட அறியாமல் நாம் இருக்கிறோம் என்பதுதான்.            மக்களிடம் வாசிப்பு குறைந்திருந்தாலும், சமாளித்தலும் மழுப்பலும் நம்மிடையே இன்றும் ஒரு நோயாகவே இருக்கிறது. தெரியாது என்பதே கிடையாது,       அப்படி சொல்வது கௌரவப்பிரச்சினை ஆகிவிடும்.    இவ்வளவில் நம்மிடையே உண்மைத்தனம் எப்படி ஈரிளிக்கிறது என்பது இந்நிகழ்ச்சியைப் பார்த்தபோது தெரிந்தது.

இதெல்லாம் சும்மா ஜாலிக்குத்தானே,   எதுக்கு இவ்வளவு சீரியசா எடுத்துக்கணும் என்று சொன்னாலும் தவறில்லை.கடைசியில்
இதுவும் ஒரு யதார்த்தமில்லாத பாசாங்குத்தனமான நிகழ்ச்சியாக இருந்திருந்தாலும், ஒரு வகையில் சிரித்துக்கொண்டே வாழைப்பழத்தில் ஊசியை வைக்கும் பாணியாக இருந்தது.

ஜன ரஞ்சகப் பத்திரிகைகள்,  வார இதழ்களை விட்டு மக்கள் இலக்கியம் படித்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்திற்கு நிகரானது தொலைக்-
காட்சிப்பெட்டியில் தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளை அனைவரும் பார்க்க-
வேண்டும் என்பது.

தொலைக்காட்சிப்பெட்டி ஒரு அத்தியாவசியமான,         நமது வீட்டில் மின் இறைச்சியைத் தின்று வளரும் வாயில்லாத ஜீவன்.         அதை நாராசமாக
வைத்து தொல்லைக்காட்சிப்பெட்டி என்று பெயர் தராமல்,   நமக்குப் பயன் தரும் வழியில் வளர்ப்பது நல்லது.

Monday, May 7, 2012

Kharij(1982)




ஓசூரில் குறிஞ்சி அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த திரையாடல்
நிகழ்ச்சிக்கு கடந்த ஞாயிறு அன்று (06/02/2012) சென்றிருந்தேன்.

வங்காள மொழியில் 1982 -ல் வெளியான 'காரிஜ்' என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. மிகவும் புதிய அனுபவமாக இருந்தது.
பிசிறில்லாத நீரோடையின் ஒலியை ஒத்த மனக் காட்சிகளால்
உருவாக்கப்பட்ட சிறந்த சித்திரம்.

முதலில், இத்திரைப்படத்தை காண வாய்ப்பளித்த நண்பர் சிவகுமாருக்கும்,பெரியசாமிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிறுவயதில் சத்யஜித்ரே-வின் படங்களை இந்தி தூர்தர்சன் சேனல்களில் பார்த்ததுண்டு. அப்போது அதை பார்க்கும் அளவுக்கு பொறுமையோ,
ரசிக்கும் அளவுக்கு பக்குவமோ இருந்ததில்லை. எனக்குப் பிடித்ததாக
ஜங்கிள் புக்கையும், சூப்பர்மேனையும் மட்டுமே கொண்டிருந்தேன்.
ஏதோ தலையில் சக்கரம் சுற்ற விண்ணில் அமர்ந்து அமானுஷ்யக்
கதை சொல்வதுபோன்ற கதாப்பாத்திரத்திற்காக மஹாபாரதத்தின்
முதல் பத்து நிமிடங்களும் அதன் ஆரம்பப் பாடலும் பிடிக்கும்.
அந்த சமயத்தில் சினிமா என்று சொல்ல வருகையில், அதுவும் ஒரு
தமிழ் நாட்டு சிறுவனுக்கு ஆதர்ச நாயகனாக சூப்பர் ஸ்டாரின்
படங்களைத் தவிர வேறு எது இருந்திருக்க முடியும்! (........சின்னக்கொழந்தையும் சொல்லும் கண்ணே என்று பாடல் வேறு வந்திருந்த காலம்.) இதனால் திரைப்படம் காண்பது என்பது நமது
தளபதியின் படங்களுடன் ஒன்றிப்போனதாக இருந்தது.

மேல்நிலைப்பள்ளிப்பருவமும், கல்லூரிப்பருவமும் உலகநாயகனை நாடியது.பிறகு உலக சினிமா என்று கண்டது கல்லூரிப்பருவத்தில்
கிடைத்த நட்பின் மூலம்தான். அதிலும் வேற்றுமொழிப்படங்கள் மிகக்குறைவு. உலகத்திரைப்படங்கள் என்று தனியார் தொலைக்காட்சியில் வருவதை பார்த்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக பார்த்ததுண்டு. ஆனால் கடைசியில் "என்ன சொல்ல வர்றாங்க இவங்க" என்று மனதில்
ஒரு கேள்வி எழும். அது ஒரு தரமான சினிமாவை புரிந்து கொள்ள
இயலாமல் அதற்கு முயலும் கட்டத்தில் இருந்த காலம். அப்போது
வெறுமனே பொதுவான கருத்தின்படி நல்ல சினிமா என்றால் அண்டை நாடுகளின் திரைப்படங்களை நாடுவது வழக்கம். நான் எனது நண்பர்களுடன் இணைந்து கல்லூரி நாட்களில் பல ஆங்கிலத் திரைப்படங்களைப்
( நல்ல படம்தாங்க:) ) பார்த்திருக்கிறேன். நமது இந்தியாவில் பல அரிய திரைப்படங்களைப் பற்றி கேள்விப்பட்டதுண்டு.வங்காள, இந்தி மொழிப்படங்கள் மலையாள மொழிப்படங்கள், நமது தமிழ்ப்படங்கள் மற்ற அனைத்து மொழியிலும் வெளிவந்த திரைப்படங்கள்ஆகியவற்றைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் அதை பார்க்கும் ஆர்வம் இருந்ததில்லை.

இப்போது முனைந்து சென்று தேடி நமது மொழிப்படங்களை
ஒவ்வொன்றாக பார்க்க வேண்டும் என்று நாட்டம் உள்ளது. அதற்கு ஒரு உதாரணமாக அமைந்த திரைப்படம் "காரிஜ்". நமது நாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்று நினைக்கும்போது கொஞ்சம் பெருமையாகவும் இருக்கிறது.


படத்தின் கதை ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருந்ததை கருத்தில் கொண்டு அந்நாவலைப் படித்தவர்கள் சில குறைகளை முன் வைத்தாலும் அதை அகற்றி பார்வையாளனை முற்றிலும் இத்திரைப்படம் ஆட்கொள்ளச்-
செய்துவிடும் என்பது உறுதியான விஷயம்.

இயற்கையின் கொடுமையை மனித உறவுகளுக்குள் புகுத்தி அதன் விளைவுகளை மிகத் துல்லியமாக படமாக்கியிருக்கிறார்கள்.

மத்திய தர குடும்பத்தில் பணியில் சேரும் ஒரு ஏழைச்சிறுவன் கடும் பனிப்புயலால் குளிர் தாளமல் அவர்களது வீட்டிலேயே இறக்கிறான். அதன் பின், சம்பந்தப்பட்ட முதலாளிக் குடும்பம் என்ன செய்கிறது, வேறு வழியின்றி வேலைக்கு சேர்த்துவிட்டு சொந்த ஊர் திரும்பும் திடீரென்று இறப்பை சந்தித்த அவனது அப்பா அவன் உயிர்பிரிவுக்குப் பிறகு எப்படி பாதிப்படைகிறார் என்பது படத்தின் முதன்மைக் கரு.

ஒரு படத்திற்கு திரைக்கதை முதுகெழும்பு போல. அது இத்திரைப்படத்தில் ஸ்திரமாக அசைத்து ஒடிக்கவியலாது அமைத்திருப்பது முக்கியமான,
கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஒரு உதாரணத்திற்கு, படம் ஆரம்பித்த சில நேரங்களில் எதிர்கால நிகழ்வின் முக்கியமான காட்சிக்கு செல்வது என்பது தேர்ந்த கலையாளுமையைத் தவிர பிறர் கண்டிப்பாக அவ்வளவு சுலபத்தில்
கையாண்டுவிடமுடியாது. இது மிரினல் சென்-னின் திறமைக்கான சான்று என்றே சொல்லலாம்.

அதாவது இடைவேளை விடும் முன் நாம் சினிமாக்களில் காணும் ஒரு முக்கியக் காட்சி(Inciting Incident). இதை படம் ஆரம்பமான முதல் பத்து நிமிடங்களில் வைத்தது திரைக்கதையின் உட்சபட்ச சாமர்த்தியம் ஆகும்.

இப்படி இறங்கி எடுப்பதற்கு அதீத திறமையும், தைர்யமும் வேண்டும்.
ஏனென்றால் அதற்கு மேல் சரக்கு இல்லாமல் படம் குழம்பி, படுத்துவிடும்.

இப்படத்தைப் பொறுத்தவரையில் அதை இறுதி வரை வலு குறையாமல் கொண்டுபோனது ஆச்சர்யப்படுத்தியது. இது படத்தின் கலை வடிவத்தில்
ஏற்படுத்தப்பட்ட ஒரு புதிய மாற்றம் என்றுகூட சொல்லலாம்.
முப்பது வருடங்களுக்கு முன்பு இத்தகைய திரைக்கதையமைப்புடன்
ஒரு படைப்பை உருவாக்கியிருப்பதே அசாதாரணமானது.
அதைப் பார்த்தபோது வியப்பதைத் தவிர்த்து வேறு வழியில்லை.

'பேசும் படம்' என்றால் படம் பார்வையாளனுடன் பேசும் என்பார்கள்.
இதிலும் ஒரு வகையில் பலமான வசனங்கள் இருந்தாலும் பேசும் படத்திற்குரிய அம்சங்களைத் தன்னுடன் கொண்டுள்ளது. உதாரணமாக, அங்கு வேலை செய்யும் ஒரு சிறுவனை அவன் எதிர்காலத்தை பயத்தின் காட்சிகளாக பேச வைத்திருப்பது, மகனை இழந்த தகப்பனின் முகத்தில் உலகத்தை இழந்த துக்கத்தின் காட்சிகளாக நம்முடன் பேச வைத்திருப்பது என்று பல உண்டு.

இத்திரைப்படம் திரையிடப்பட்டு முடிந்தவுடன், படத்தைப் பற்றிய ஒரு சிறிய கருத்துரையாடல் நடந்தது. அதில் நண்பர்களின் அவதானிப்பு என்பது அற்புதமாக இருந்தது. படத்தைக் கண்ணுற்ற வகைகள் பிரமிக்க வைத்தது. ஒவ்வொருவரின் கருத்துக்கு முன்பும் எனது அனுபவமும், நிச்சயித்தலும் அவ்வளவு பெரிதாகத் தோன்றவில்லை. இங்கு குறிப்பிட்டவற்றை
தடையில்லாமல் சொல்வதற்கும் ஒரு பயம் இருந்தது என்ற காரணத்தினால்
ஒரு பதிவாக எழுதுகிறேன் என்று நண்பர் சிவகுமாரிடம் சொல்லியிருந்தேன்.
இதை எழுதி முடிக்கையில் சந்தோசம் அடைந்ததை அனைவருடனும்
இப்போது பகிர்ந்துகொள்கையில் திருத்திகரமாக உள்ளது.

இப்படத்தைப் பற்றி சொல்வதற்கென்றால் பல பத்திகள் எழுதலாம். மரணம் தரும் விளைவுகளின் நீட்சியை, அதனால் சலனமடையும் குடும்பத்தின், ஊரின் துல்லியமான உணர்வுகளை ஆடம்பரமே சிறிதுமில்லாமல் ஒன்றரை மணி நேரத்தில் சொல்லியிருப்பது அப்படத்தின் தரத்தை மேலும் உயர்த்துகிறது. ஆகவே இத்திரைப்படம் பார்வையாளனின் திறமையை சற்றும் குறைத்து எடைபோடாமல் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் சேர்க்கப்பட்ட ஒரு முக்கியப்படைப்பு.

Friday, May 4, 2012

சிறுகதைகள்


தமிழ் சிறுகதைகளுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள ஒரு தளம்.

பழைய எழுத்தாளர்கள் தொடங்கி இன்று எழுதிக்கொண்டிருக்கும் படைப்பாளிகளின் சிறுகதைகள் வரை இதில் வலையேற்றப்பட்டுள்ளது.

சிறுகதைகளுக்கான மற்றொரு முக்கியமான தளம்.

http://www.sirukathaigal.com/

Wednesday, April 25, 2012

பருவத்து திருமடைப்பள்ளியில் புகாத கலைச்சொல்காரன்

பல்லுருவன் வந்திருந்தபோது
வெறும் கைகளோடு, காற்றசைவினால் வராமல்
சொற்களை தன் கைப்பைக்குள் அடக்கி எடுத்து வந்திருந்தான்
அதை தலைக்குப்புற கவிழ்த்தபோது
ஒரு சொல் அது உணர்த்தும் காலம் நிறுத்தும் காட்சி
மொத்தப்பிரதியாய் உருவான சமயம், ஐந்திலக்கத்து கைகள்
நீட்டியும் எட்டாத பொறுமை ஆகாச வெளியிலும்
நாட்டம் அதனின்று ஒரு பிரபஞ்ச தூரமும் இருந்தன
அப்பிரதியின் சுவையை அறியாதவன்
இறுதியில் வானம்வரை பார்த்தான்  
அது சொட சொட வென்று பேசியது கண்டு வியந்தபடி
பிரவசம் சுகமடைந்த சேயைப் பார்த்து
பின்பு கூறினான்
அற்புதமான படைப்பென்று
ஆனால் அதன் பொழிதலில்
நீர் கண்ட புல்லையும் அதன் முனையளவையும்
தனது சிறுகைகளால் முந்தைய பகுதியில் 
நாக்கில்லாமல் சுவைத்து கடந்து சென்றுகொண்டிருந்தான்
கலைக்கப்படாத அவளின் அழகையும் பொழியப்பட்டதின் வலியும்
அறிந்த இளம்பிராயத்துக்காரன்.


Sunday, April 15, 2012

செம்பினாலியன்ற பாவை

                                                                                 
                                                                                                                                                     1


கதவு சாற்றப்பட்ட அறையிலிருந்து வெளுத்துப்போய் வெளியில்
வந்தான். சளித்துசளித்து விரயமாக்கிய எதிர்காலத்தை அங்கே
ஒரு குறிப்பிட்ட இடத்தில் விட்டுவிட்டு வெதும்பி சிறிய துக்கத்துடன்
உடல் சந்தோசத்துடன் தன்னை ஆக்கிரமணம் செய்த ப்ரக்ருதியை நினைத்தவாறு தன் நோயினறிவையும் எண்ணிக்கொண்டே தனது
மனையை நோக்கி விரைந்தான்.

அதற்கு முந்தைய நாள் இரவின் விளிம்பில் மாலையில் துளிரிய
புஷ்பத்தை மோந்த தருணத்தில் திரியொளியும் ஓரணுவும் தானும்
ப்ராணத்தியாகிக்க ஆயத்தப்பட்டதை அவ்விரவு முழுதும் சப்தமித்த முனகலினொலி வரிந்துகொண்டு காட்டியது. அது நிசப்தம் களைந்த
முழு இரவு.

அவன் பெயர் தயாள சாந்தன். நற்பேறுடைய தெய்வாங்கதனுடைய
சச்சரவுக்கு வேறொன்றில்லாத ஒரே மகன். சிறுவயதில் தாயை
இழந்தவன் என்பதால் தந்தையிடம் அதீத பாசத்தைக் கொணர்ந்தவன்.
தெய்வாங்கதன் மொகல் சாம்ராஜ்யம் உருவாக காரணமான தைமூர் தன் பரிவாரங்களை நிலை நிறுத்தி காலூன்றிய வலிமையான காலத்தில்
தெற்கே செங்கோல் கிழித்த கோடு தாண்ட இயலாது பேரணை கட்டி தடுத்தாண்ட சோழர்கள் இருந்த இடத்தில் வாழ்ந்தவர். அப்போது சோழ அரசவையில் மூல மருத்துவர் தன்வந்திரியின் வழி வந்த பெருமக்களிடம் கற்றுத் தேர்ந்த வைத்தியர். அரசவம்சத்து சீக்காளிகளை தனது கைகளால் பிழிந்தெடுத்த மருந்து வகைகளாலும், மன சௌந்தர்யத்தாலும் நோய் நீக்கிவிடுவார். வயிற்றுலுள்ள சேய் முதல் சரம தசையிலிருக்கும் வயோதிகன் வரை அனைவருக்குள்ளும் இருக்கும் பிணியை விரட்டிவிடுவார். மற்ற பல காரணங்களினால் இதையும் சேர்த்து மன்னருக்கும், மக்களுக்கும் அவர் மீது தனித்த ஈடுபாடும் அன்பும் உண்டு. பொற்காசென்று குறைத்துவிடாமல் நிலபுலன்களை அவருக்கு மூன்றாம் ராஜேந்திரசோழன் பரிசளித்தான்.

கடைசியில் இவ்வத்தனையும் யாருக்கு சென்றுசேரும், அவர் புதல்வனுக்கு.
இவ்வைத்தியருக்கென்று வந்து பிறந்த எவரையும் விட்டுவைக்காத
தயாளசாந்தனுக்கு. தகப்பனிடம் மகனைப்பற்றி விசாரித்தால்
"குலத்தை கெடுக்க வந்த கோடரிக்காம்பு" என்று வருத்தத்துடன்
ஆத்திரத்தை வெளிப்படுத்துவார். ஆனால் அதற்கான காரணத்தைத்
தெரிவிக்கமாட்டார்.

மாவணங்கு. தயாளனின் பால்ய நண்பன். அருகிலுள்ள கோவிலில் மலர் பறித்து உதவுவது அவனது நித்யப் பணி.அவன் தயாளசாந்தனை திருத்துவதற்காக அவன் தந்தை கூறும் கருத்தினை சொல்லிக்காட்டுவான்.

"இப்படி சொல்வதிலென்ன தவறாகிவிட்டது,வம்சத்தை சீரழிக்க வந்த கோடரிக்காம்பு தான் நீ."

"நான் செய்வது தவறாகவே எனக்கு பட்டதில்லை.மன்னர்கள் மட்டும் ராமபுத்திரர்களா என்ன? என்னிடம் கேள் பட்டியலிடுகிறேன்.நண்பனிடம் சொல்லி வைக்கலாம் என்றால் இங்கும் அதே நிலைமை தான். இதற்கு பதில் அதோ உன் கோவிலில் காலடக்கி அமர்ந்துள்ளதே நந்தி அதனிடம் சொல்லிவிடலாம்"

"இதோ பார் தயாளா, நீ செயல்படுவது உன் மனதுகந்த
காரியமாகவிருக்கலாம். ஆனால் உன் தந்தையின் மேன்மைக்கு இச்சிறுமைத்தன்மையை கொடுக்கும் செயல் கொஞ்சமும் சரிப்பட்டதல்ல. மேலும், அன்று நீ உழுத பாழ்நிலம்பற்றி என்னிடம் சிலாகிக்கும்பொழுதே உன்னை கழுவிலிறக்கி வேடிக்கைப் பார்த்திருக்க வேண்டும், ஹ்ம். வெட்கிக்கிறாளோ!!, மனத்துரோகமிழைக்கும் ஈனத்தேவரடியாளுக்கு
நாணம் என்ன வேண்டிக்கிடக்கிறது, உன் தன்மானத்தை இம்மியும் கூசாது என்னிடத்தில் வந்து இளிக்கவிடுகிறாய்" என மாவணங்கு கடிந்துகொண்டான்.

இது எப்பொழுதும் நடப்பதுதான், அனுபவமுரைப்பதும் அதற்கு
இவன் வசை பாடுவதும் வழக்கமான, தான் எதிர்பார்த்த ஒன்றுதான்
என்பதுபோல் முகமிறுகாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான்.

                                                                                                                                                    2


மாவணங்கின் கோபம் நியாயத்திற்குரியதே. நிசுளாபுரியை சிற்றரசர்கள் ஆண்டுவந்தபோது, அங்கிருந்து ஏழு யோஜனை தூரமிருக்கும் ஊரின்
பெயர் விராலகிரி. அங்கு நாட்டிய சாஸ்திரத்தினைப் பயின்றுகொள்ளும் மங்கையினம் உண்டு.அவர்களின் பணி பகலில் நாட்டியக்காரியாகவும்,
இரவில் வேசியாகவும் இருப்பது. இதனாலேயே பல தேசத்திலிருந்தும்
பெருந்தனக்காரர்களும், பிற மொழியினத்தவரும் வந்து உடலின்பம் கழித்து செல்வார்கள். ஏனென்றால் பிறதேசத்து மங்கையரும் அங்கு பிழைப்புக்காக வந்து இதை குலத்தொழிலாக ஏற்றுக்கொள்வார்கள். அங்கு சென்றவுடன் பட்டியலிடா உபசரிப்புடன், சகல வசதிகள் கொண்ட அறையில் நாட்டியமரங்கேற அதை பலவான் தனவான் கனவான் அடலேறு ரசிக்க நடக்கும். முடிந்தவுடன் எல்லாவகை தானியங்களும், முழங்கை வழிவரும் நெய்பாண்டங்களும்,பட்ச மாம்ச வகைகளும், இலை விழுங்க பரிமாறப்படும். ஜீரண எல்லையைக் கடந்த வாடிக்கையாளனின் மனம் கூனாமல் இசைந்துகொள்ள பயிற்சியளிக்கப்பட்ட பெண்கள் கூட்டம்
வயதினடிப்படையில் வரிசைப்படுத்தப்படுவார்கள். அதில் நாட்டியமாடியவளைத் தவிர பிறருமிருப்பார்கள். அவர்களிலொருவரை சுயம்பு எடுத்து தனியறைக்குள் கும் கும் வாசனைதிரவிய, மங்கின ஒருமுக விளக்கொளி பிற இத்யாதிகளுடன் அனுப்பப்படுவாள். அதி சூரிய கிரணங்கள் விராலகிரியின் மேல்மண்ணைத் தொடும் வரை கால நிர்ணயம் உண்டு. அதுவே விருந்தாளிக்குரிய கால எல்லையாகும். அதை மீறி நாழிகையளவு கூட அவனுக்கு உரிமை கிடையாது. முரண் செய்தானோவனில் பீம சரீரத்தவர்களால் புடைக்கப்பட்டு வெளித்தள்ளப்படுவான்.

தயாளசாந்தன் இத்தகைய நிசுளாபுரியிலிருக்கும் விராலகிரியை தன் அபிமானஸ்தலமாக ஆக்கிக்கொண்டு ஒரு மண்டலத்துக்கு மும்முறையாக சென்றுவருவான். அவன் பார்ப்பதற்கு மார்விடைத்து, புஜம் தெறிக்க ஒரு பூரண ஆண்மகனாக இருப்பான். அதுமட்டுமின்றி சுயமாக அங்கு செயல்படும்படி மிக சுதந்திரமானவனாகவும், அக்கூட்டத்தினுடைய தலைவி கூட அவனை மரியாதை செய்யும்படி அவன் அவர்களுடன் ஒருவரோடொருவனாக பழகியதும் தயாளனை அவர்களிடத்திலிருந்து பிரிப்பது சுலபமல்ல என்பது உறுதியானது. பிறரை விட இவனொருவனுக்கு கிடைக்கும் உபசரிப்பு அளவில்லாதது. புதிதாக வரும் கன்னிப்பருவம் இவனிடம் புகலிடம் தேடும்படி தயாளன் அங்கு உயர்ந்துவிட்டான். பிணியும் மருந்தும் ஒருசேர முகரும் வைத்தியருக்கு சுரையும் பெண்ணின் மனமும் தெரியாமலா இருக்கப்போகிறது. அன்று சோமபானத்தின் வீச்சமடித்த உடம்பில் கூகையின் நறுமணமும் இணைந்துகொள்ள தள்ளாடியதொரு மனக்குளறலில் தெய்வாங்கதனுக்கு அனைத்தும் தெரிய வந்தது. மணமுடிக்க
முயற்சித்தும் தயாளன் ஒத்துழைக்காததால் அதிலும் தோல்வியடைந்து
அவனது தீய நடத்தையை எண்ணி பந்தத்திற்கு அடிமையுற்ற
வயோதிக தந்தையாக அனைத்தையும் சகித்துக்கொண்டார்.

அத்தகைய மாபெரும் ஸ்த்ரீலோலனாகிய அவனுக்கு எதிர்மறையானவன்
அவனது நண்பன் மாவணங்கு. அவர் தகப்பானார் மாவணங்கிடம் மன்னர் மக்களது காதில் விழாதவாறு அவனை மாற்றி ஆட்கொள்ளவேண்டும் என்று
சாஸ்டாங்கிக்காத படி கேட்டுக்கொண்டார்.

மாவணங்கும் இயன்ற வரையில் அவன் விஷயத்தில் தீவிரமாக இருப்பேன்
என்று காளிசத்தியம் செய்துகொடுத்தான். மேலும் நிசுளாபுரியிலே தோழன் காய்ச்சினவேந்தன் இருப்பதைப்பற்றியும், அவன் பிராபல்யமான அர்ச்சகனென்றும், வேதார்த்தங்களைக் கற்று அதன் படி வாழும் ஒரு இளைஞன் என்றும் அவனிடத்தில் தயாளனை அழைத்து சென்றால் ஏதேனும் சகாயம் கிடைக்குமென்றும் தெய்வாங்கதனிடத்தில் கூறினான்.

அவர் அதற்கு ஒப்புக்கொண்டு, செய்தியை பத்திரப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால் மாவணங்கோ முதலிலேயே ஒருமுறை தயாளனை அவன் தகப்பனாராகிய தெய்வாங்கதனறியாமல் இரண்டு இரவுகளில் விற்பயில பரதேச குருவை அணுகுவதாக கூறிவிட்டு காய்ச்சினவேந்தனிடத்தில் அழைத்துச்சென்றிருக்கிறான். அம்முறை தயாளன் புலாலுண்பதையும் சேர்த்து ஒரு குற்றமாக அவனிடம் சொல்லிவைத்தபோது அவனும் இது அவரவர் விருப்பம் இருந்தாலும் ஸ்த்ரீ சம்பந்தம் நல்லதல்ல என்று ஒரே வார்த்தையில் முடித்தாலும் சில ப்ரமாணங்களையும் தயாளனுக்கு எடுத்துக்காட்டினான். அதில் பிரயோஜனமே இருக்கவில்லை. தயாளன் மாவணங்கிடம் பேசுவதுபோலவே அவனிடத்திலும் பரிகசித்தும், அவனது கூற்றுகளை பகடி செய்தும் உலகறிய சிரித்தும் அவன் சந்திப்பை நிராகரித்து ஊர் திரும்ப மாவணங்கை எச்சரித்தான். இருந்தாலும், ஒவ்வொரு முறையும் மாவணங்கு அவனது தகப்பனாரை சந்திக்கும்போது அவர் தயாளனைப் பற்றிய விசாரத்தை அவனிடம் சொல்லி பிறரறியாமல் உதவும்படி கேட்டுக்கொள்வார்.இம்முறை அவரை சமாளிக்கவாவது பலன் தராத இக்காரணத்தை அவரிடம் சொல்ல வேண்டியதாயிற்று. மேலும் இவரிடம் முன்னொருமுறை சொல்லாமலிருந்ததும் தற்போது இதை
பிரயோகிக்க வழி இருந்ததும் அவனுக்கு சமயமாய் ஆனது.

                                                                                                                                                    3


தற்போது மண்டலத்தின் இறுதிச்சுற்றில் தயாளனின் இருப்பின்மையை அறிந்த தெய்வாங்கதன் அவனுக்காக கடவுளிடம் வேண்டுவதை தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அவனோ....!

மாளிகையமப்புடைய கட்டுமானத்தில் அவன் லகுவாக ஒவ்வொருவரையும் எதிர் நோக்கிக்கொண்டிருந்தான். அப்பொழுது குழுத்தலைவியிடமிருந்து ஒரு
சேதி வந்தது. மேற்கத்திக்காரி ஒருத்தி வந்திருப்பதாகவும், மினுமினுத்த ஸ்பரிசங்கொண்டவளென்றும் இதுவரை ஆடவனறியாதவளென்றும் வந்த சேதியைக்கேட்டு அவனுடம்பின் ரோமக்கண்களனைத்தும் துடித்தன.
அவனுக்குள்ளிருந்த மன்மதன் ரதியை நினைக்க ஆரம்பித்தது. சடுதியில் ஒப்புக்கொண்டவன் அவளை அழைத்துவருமாறும், மேற்படிக்கு பலவற்றை மனதில் வைத்திருப்பதாகவும் கூறினான். அடுத்த சில கால இடைவெளியில் அவள் அங்கு வந்து பூமாதேவியைத்தவிர வேறொன்றுமறியாதவளாக நாணத்தால் நனைந்து நின்றுகொண்டிருந்தாள். அம்மேற்கத்தி அவனுக்கு அவன் மனதில் உருவகித்த தோற்றம் சற்றும் மாறாமல் அதைவிட மேலாக இருந்தாள். அவன் நினைத்தும் பார்த்திராத இரவாக அமைந்தது அது.

சூரியனின் கிரணங்கள் விராலகிரியைத் தொடும் விதிக்கு தயாளனுக்கு மட்டும் விலக்குள்ளதாகையால் அவன் அஸ்தமித்த நேரத்தில் தன் கௌபீனத்தை சரி செய்துகொண்டு அடுத்த மண்டலத்தை நோக்கி
தன் நடையை புது உடல் சேர கற்பனை செய்துகொண்டே பிற்காலையில் ஊரையடைந்தவன் எதிரில் நதி நீராடிய மாவணங்கைப் பார்த்து அவ்வனுபவத்தை சொல்லும்போது கொஞ்சமும் மதிக்காமல் அம்மேற்கத்திக்காரியையும் அவனையும் வைதெறிந்தான்.

இவ்வாறு சென்றுகொண்டிருந்த நேரத்தில் தெய்வாங்கனுடைய கவலையை சிரமேற்றியபடி அவனை வழிக்குவரச்செய்து காய்ச்சினவேந்தனை இரண்டாவது முறை காண்பதற்கு மாவணங்கும், தயாளனும் சென்றார்கள். அன்றைய பூஜா கைங்கர்யத்தை முடித்தபடி வந்த காய்ச்சினவேந்தனிடத்தில்
கோவிலின் மரநிழலொன்றிலிருந்தபடி தான் வந்த காரியத்தை சுருக்கென சொல்லிவைத்தான் மாவணங்கு. தயாளன் அனைத்தையும் வானத்தினிடம் சொல்லியபடி வெறித்துக்கொண்டிருந்தான்.

சிறிது யோசித்த பிறகு பேச ஆரம்பித்தான் காய்ச்சினவேந்தன்.

"இருதயத்துள் வசித்துக்கொள்வாய் என்ற நம்பிக்கையில் அடியேன் இதை
தெரிவிக்கிறேன். தயாளா, ஓருடலுடன்படிக்கையில் இக்காலத்துள்
மட்டுமல்ல எக்காலத்துக்கும் அசௌகரியமோ தேகரோகமோ உன்னை அண்டாது. மேலுள்ளவனோட வாக்குறுதியிது."

"உன்னிடத்தில் சாஸ்திரார்த்தமெல்லாம் உரைப்பித்து கற்பக்கிருக விளக்குக்கு பிசுபிசுப்பு இல்லாமலானதொரு அசௌகர்யமே அடியேன் கண்டது. இருந்தாலும் உள்ளமடங்க கொணர்ந்த பாக்களினுடைய சுரத்தை சொல்கிறேன், கேட்டுக்கொள்வாயாக.
'செம்பினாலியன்ற பாவையை பாவி நீ தழுவென மொழிவதற்கஞ்சி நம்பினான் உன் சரணடைந்தேன் நைமிசாரண்யத்துள்ளானே'-னு
திருமங்கை மன்னன் பாடினது."

"பேராத்மாவுக்கே அந்த சிந்தனையிருக்கும்போது நாமெல்லாம் அதை நினைத்துப்பார்ப்போமா? சொல். அப்படி செம்புருக்கின அனல் தகிக்கிற ஒரு பெண்ணோட உடம்பை யம கிங்கராதிகள் வலுத்து தேவரீரோட ஆலிங்கனம் செய்விக்க விரும்புவீரோ! அடியேனறியாதது."

"அடியேனாக சொல்வதாகவிருந்தால் இத்தூரம் தாண்ட முடியாது. மீதம் தயாளனே தெரிந்ததுதான்." என்று காய்ச்சினவேந்தன் தயாளனிடம் உரைத்தான். அவனோ மாமத யானையொன்றின் கர்வத்துடன் மடுவை
மலை நோக்குவதுபோல் அவனைப் பார்த்தான்.

மாவணங்கு காய்ச்சினவேந்தனுக்கு நன்றியையும்,தெய்வசேவையையும்
அவனுக்கு செய்வித்து இருவரும் ஊர் திரும்பினார்கள். வரும் தடமெங்கும் தயாளன் காய்ச்சினவேந்தனின் கருத்தினை நினைத்து மாவணங்கிடம் அங்கலாய்க்க ஆரம்பித்தான். கொதிக்கும் செம்புப்பாவையாம், கிங்கரனாம், நரகமாம்.. எக்காளமிட்டுக்கொண்டே அவன் வந்ததை மாவணங்கு ஏற்கனவே எதிர்பார்த்தவனாக எதுவும் பதிலுரைக்காமல் வந்தான்.

                                                                                                                                                     4


மாதங்கள் பல ஓடின. தயாளனுக்கு அவன் தூக்கத்தில் பல துர்சொப்பனங்கள் காண நேர்ந்தான். ஒரு முறை வியர்த்தம் தீராமல் திருவாலவட்டம் பிய்ந்துபோகும்படி வேகவேகமாக அசைத்தான். ஜன்னல்கதவுகளை எப்போதும் திறந்தே வைத்தான். மேலும், வேளைக்குத் தவறாமல் வரும் பசி அவனுள் காணாமல் போனது. இவ்வுடல் மாற்றங்களை அவன் முன்னெப்போதுமில்லாமல் இப்போது புதிதாக உணர்ந்தான். இதை யாரிடம் சொல்வது. தந்தையைத் தவிர சிறந்த மருத்துவர் வேறு யாரிருக்க முடியும்.
மாவணங்கைத் தவிர்த்து ஒரு நண்பன் இருக்கிறானா அவனுக்கு. இதை ஆழ யோசித்த பின் மெல்ல தந்தையிடம் கூறினான், பிறகு தன் சகாவிடம். தன் தந்தையிடம் தவிர்த்த ஒரு தகவலை இவனிடம் கூறினான். பல முறை உடற்தாகம் செய்தபோது இல்லாத ஒரு மாறுபட்ட தாக்கம், அம்மேற்கத்திய தேசக்காரியிடம் உடலிச்சையடைந்த பின் வந்ததாகவும் அவளது பூர்விகத்தையும் அவளைப்பற்றியும் தகவல் திரட்டும் படியும் நண்பனிடம் சொல்லிவைத்தான். தந்தையார் தன் மருந்தேடுகளுடன் தூரதேச மருத்துவர்களைத் தொடர்புகொள்ள விரைந்தார். அவருக்கு முழுவதும் இவனுக்கு வந்திருக்கும் இயல்பற்ற மாற்றத்தைப்பற்றின தெளிவு இல்லை.
எனவே கடற்பயணம் மேற்கொண்டு விசாரித்துவர சென்றார். அதுவரை மகனை தனது தமக்கையினில்லத்தில் அவனைப்பார்த்துக்கொள்ளும்படி விட்டுச்சென்றார். மாவணங்கு வேறு ஏதாவது வழிகளில் இந்நோயைத் தீர்க்க இயலுமா என்று பார்க்க பல்லூர்ப்பயணம் செல்வதாக இமையளித்துவிட்டு
அப்பரத்தையைப் பற்றி அறிய விராலகிரிக்கு புரவியேறி விரைந்தான்.

அன்று தமக்கையின் இல்லத்திலிருந்த தயாளனுக்கு தனக்கு நோய்மை பீடித்திருப்பதையும், அதுவும் மருந்தில்லா ஒரு உடல் நோய் எனவும்
அழுதுகொண்டிருந்தான். குமட்டி குமட்டி வயிற்றைப் பிசைந்து பெருஞ்சத்தத்துடன் வெளியிலெடுத்தான்.ஆகாரமில்லாத அவனுடல்
மெல்ல மெல்ல மெலிய ஆரம்பித்தது. குறையிருமல் வேறு பற்றிக்கொண்டது. அதில் குருதி தோய்ந்து வந்தது. தகித்துக் கொதித்தது உடல். தீராத பயத்திலாழ்ந்தான்.

மாவணங்கு முதல் நாள் அம்மாளிகைக்கு சென்று விசாரித்தபோது அக்கன்னிகை அவள் சொந்த ஊருக்கே திரும்பிவிட்டதாகவும், இனி எப்பொழுதும் அவளைக்காண முடியாது என்ற படியும் அவர்களின் தலைவி
கூறினாள். மேலும் இங்கு நின்றமர நேர்ந்தால் விலாஒடிக்கப்படுமென்பது -போலவும் அவளின் குரல் தொனித்தது. மிகவும் சோர்ந்து கானகம் தாண்டி வந்துகொண்டிருந்தவனுக்கு அன்று தொடங்கி மூன்றாவது நாள் அவனுக்குரிய தகவலை விராலகிரிக்கு வந்த பெருவணிகரிடம் பெற்றான். இந்நோய் மேற்கத்தியதேசத்தில் பரவுவதாகவும் அவனிடத்திலிருந்து அறிந்துகொண்டான்.

அவள் ஆடவரறியாத விலங்கினங்களறிந்த ஒருத்தி எனவும், அந்யோன்மாக வானராதிகளிடம் பழகி அவற்றை புணரும் ஒரு காட்டழகி என்றும் அப்பெருவணிகன் சொல்லி முடித்தான்.மேலும் அவளைப் புணரும் ஆடவனுக்கு வழியறியாத நோயொன்றுபற்றி சம்பந்தப்பட்டவனை இரையாக்கிவிடும் என்றும் சொல்லிமுடித்தான்.

தான் மேற்கிலிருந்து வருவதாகவும், இத்தகவலை அங்கு
கேள்வியுற்றதாகவும் கூறினான். மேலும் இப்பேராபத்தைப் பற்றின விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது தன் கடமையென்றும் கூறிச்சென்றான்.

இத்தகவலையடுத்து உடனடியாக மாவணங்கு சோழதேசம் நோக்கி தன்
பயணத்தைத் தொடர்ந்தான்.

இந்தப்பக்கம் பெரும் விரக்தியில் தெய்வாங்கதன் சீறியெழுந்தடங்கிய நுரை பொழிந்த அலையைக் கண்டுகொண்டே மகனை எண்ணி மனம்
நோகியிருந்தார். அன்றிலிருந்து கடற்பயணத்தின் இரண்டாவது மாதத்தில்
கிழக்கெல்லையைக் கடந்து அங்கு இளைப்பாறவிருந்த தருணத்தில் தெய்வாங்கதன் ஒரு திடுக்கிடும் செய்தியை கடலில் துணைப்படகின் துடுப்பு வீசுபவனிடம் கேட்டறிந்தார். மூன்று தினங்களுக்கு முன் மேற்குப்
பக்கத்திலிருந்து வந்த பேரழகி அவள் தேசம் திரும்பிய கதையுடன் மாவணங்கு பெருவணிகனிடம் தொடங்கி முடித்து பெற்ற சேதியை
அவரிடம் வார்த்தையுடன் வார்த்தையாக சொல்லிக்கொண்டே வந்தான். அத்துடன் அதனால் வரும் நோய்க்குரிய உடல் மாற்றங்களையும், பிற விளைவுகளையும் சொல்லிமுடித்தான்.

உடன் பிரயத்தனமாக தான் இன்றுவரை அறிந்த அனைத்து நோய்களைப்
பற்றியும் அதன் தீர்வுகளைப்பற்றியும் குறிப்பெழுதி கடற்பயணத்தின் முடிவாகிய கரையடைந்தவுடன் தன்னையொத்த பல வைத்தியர்களிடத்தில்
பயணக்களைப்பிற்கான ஓய்வென்பதே இன்றி கலந்துரையாடலானார்.
அவர் தன் மகனைப் பீடித்த நோயுடன் இதை ஒப்பு நோக்குகையில் தராசின் வில்லை செங்குத்தாக நின்றது. அவர்களும் தெய்வாங்கதன் கூறிய அடையாளங்களை வைத்து பிணிக்குரிய மருந்தை தேடலாயினர். அதில் சிலருக்கு இது ஒரு பெரும் சவாலாக இருந்தது.

ஆய்வினிறுதியில் இது விலங்கிடமிருந்து, குறிப்பாக வாலுள்ள குரங்கினடமிருந்து மனித இனத்துக்குப் பரவக்கூடிய ஒரு விசித்திரமான நோய் என்றும் இதற்கு ஆகச் சிறந்த மருந்தாக கடலினாழத்தில் சந்திரகிரணங்களின் ஒளிபட்டு விளையும் ஒரு அரிய தாவரமும், பச்சைக்கண்ணுள்ள காட்டுப்பூனையின் உடலிலிருந்து கிடைக்கும் பச்சை நிறமாக இருக்கும் ஒரு திரவமும் கலந்த ஒரு வஸ்து எனவும் கண்டுபிடித்தனர். அப்பலதேசத்து மருத்துவ நிபுணர்கள் ஒன்றுகூடி
இவ்வரியதொரு கண்டுபிடிப்பு வரும் நூற்றாண்டுகளின் எதிர்காலத்தில் மானுட உலகிற்கு மிகவும் பயன்படுமென்றும் ஆராய்ந்தறிந்தனர் . இதை காலம் தாழ்த்தாமல் செயலாற்றுவதற்கு பலரை அணுகி அனுமதி வாங்கி கடலோட்டிகளின் உதவியுடன் அவ்வரிய தாவரத்தை பெற்றுக்கொண்டனர். வனசஞ்சாரிகளை அணுகி காட்டுப்பூனையிடமிருந்து பச்சை நிற திரவத்தை வாங்கி வர ஒரு சிறு குழு சென்றது. அவர்களும் சென்ற இருபதாவது நாளில் அதை ஒரு பளிங்குபுட்டியிலடைத்து எடுத்துவந்தனர். தற்போது மருத்துவக்குழு தாவரங்களின் சக்கையும் அதில் அப்பச்சைநிற திரவத்தையும் சேர்த்து தன் பூரண உழைப்பால் ஒரு அதிசய மருந்தை கண்டுகொண்டனர். இதன் பலன் தெரிய அதற்குரிய நோயால் அவதியிலுழலும் ஒரு நோயாளனாகிய தனது மகனையே ஆய்வுக்கு எடுத்துக்கொள்வதாகவும் அதில் முக்கியஸ்தராக தன் முழு முயற்சியை செலுத்திய அனைத்து மருத்துவர்களையும் தன்னுடன் சோழதேச பிரயாணத்திலிணைந்து கொண்டு தன் இல்லத்திற்கு வருகை புரியவும் தெய்வாங்கதன் அழைத்து முடித்த அடுத்த நேரத்தில் அனைவரும் மறுக்காமல் தங்கள் மருத்துவப்பணியின் ஆதர்ச நேரத்திற்கான இப்பணியில் தாங்களும் முழு சிரத்தையுடன் தங்களுடன் இணைவதாக அவர்கள் தெய்வாங்கதனிடம் அறிவித்தனர்.

வாக்களித்தபடி தெய்வாங்கதனோடு அடங்கிய அத்தனிப்பெரும்
மருத்துவக்குழு அவர்கள் நாட்டை வந்ததையடுத்தும், தெய்வாங்கதன் அனுமதியில்லாமல் அரண்மனைக்குப் பணிக்கு வராதது குறித்தும் வியந்த மன்னர் அவனது இல்லத்துக்கே வரலானார். அப்போது மனுநீதிப்பரம்பரையாளனான மன்னனறிந்தால் தன் மகனைக் கொன்றுவிடுவானென்ற காரணத்தினால் இத்தனை நாட்கள் மறைத்ததை
இன்றும் வேறொரு காரணத்தைக் கூறி மறைத்தான். மேலும் மாவணங்கு
தான் சென்று வந்த காரியத்தையும், கிடைத்த தகவலையும் கவலையுற்ற
முகத்துடனும் அதே நேரத்தில் மெய்கூறாமைக்கு மன்னிக்கும்படியும் சொல்லி முடித்தான். அவர் குறுநகையுடன் தாமும் அச்சேதியறிந்ததை
மாவணங்கிடம் உரைத்தார். இவ்விடைவெளியில் அவர்களது கப்பல்
சுபமாக கரையடைந்ததையறிந்து மாவணங்கு தயாளனை அவனது தமக்கையினில்லத்திலிருந்து அழைத்துவர சென்றிருந்தான்.

இரவு கரையும் முதல் ஜாமத்தின் கடைசி நிமிடத்தில் போர்வையடக்கிய உடம்போடு குதிரை பூட்டப்பட்ட வண்டியில் மாவணங்குடன் தயாளன் அவனது வீட்டு வாசற்படியில் வந்திறங்கினான். அதைப் பார்த்த தகப்பனாரும், மற்ற வைத்தியர் பெரு மக்களும் அதிர்ச்சியில் விறைந்தனர். நோயின் வீரியத்தை எண்ணி இதை எக்காலத்திலும் கொடுக்கவிட்டுவிடக் -
கூடாது என்று அனைவரும் ஒரு நினைத்ததை அவர்களின் முகபாவம் தெரிவித்தது. நடைதளர்ந்த தயாளனை தோள்பிடித்து அழைத்து படுக்கையில் இருத்தினர். தயாளனது உடற்கோலத்தைக் கண்ட தெய்வாங்கதன் தனது மனப்பக்குவத்தையும் மீறி கண்களில் நீரழுந்த அழ ஆரம்பித்தார். மருத்துவர்கள் அவரைத் தேற்றினர். அவர் கண்டு மனமுடையுமளவுக்கு தயாளனின் உடற்சித்திரம் இருந்தது. ஊன் அழுத்தமாக உருகி எழும்புகள் புடைத்து வெளியில் தெரிந்தது. மாரெழும்புகள் அனைத்தும் ஒன்றொன்றாக எண்ணிக்கையிலடங்கும்படி கண்ணாடிப்பளிங்காக காணப்பட்டது. கன்னமொட்டி அதன் சதைகள் மறைந்துபோயிருந்தது. தலை மயிரிழந்து காணப்பட்டான். மொத்தத்தில் அவன் ஒரு அரூபியாக காட்சியளித்தான்.

இரவின் இரண்டாம் ஜாம முடிவில் வந்தவர்களனைவரும் தெய்வாங்கதனைத் தேற்றிவிட்டு கொண்டுவந்த அவ்வதிசய மருந்தினை திரைகட்டிய சூடு கொப்பளிக்கும் பாலில் கலந்து தயாளனுக்கு கொடுத்தனர்.
இதேமுறையில் மருந்தை குறைந்தது ஒரு மாத காலமாவது அவனுக்கு அளிக்கப்படவேண்டுமென்று மருத்துவர்களும் தெய்வாங்கதனும் நினைத்தனர். மேலும் அதன் வீரியம் குறையாமலிருப்பதற்கு அதை ஒரு மண்கலத்தில் வைத்து பாதுகாக்கவேண்டுமென்றும் அனுமானித்தனர்.
மேலும் அவனது ஆரோக்கிய உயர்வையும், நமது கூட்டு முயற்சியினது பலனையும் கண்டால் நிச்சயம் தெரியப்படுத்தும்படியும் மருத்துவர்கள் தெயவாங்கதனைக் கேட்டுக்கொண்டு கிழக்கே தங்களது தேசத்தை
நோக்கி கப்பலேறினர்.

                                                                                                                                                     5


இவ்வாறு மருந்தளித்த நேரத்திலிருந்து ஒவ்வொரு நாளும் அவனுடலில்
தீவிர தேற்றம் தெரிந்தது. அவனுக்கு பசி கிட்டியது. அசுரனாக மாற ஆரம்பித்தான். மருத்துவர்கள் ஊர் திரும்பிய இரண்டாவது மாதத்தில் மருந்து தீராத கணத்திலேயே தயாளன் பழைய நிலைக்கு வந்துவிட்டான். அவனுடல் கொழுத்த ஒரு பொருக்காக ஆயிற்று. கன்னத்தசைகள் உயிர்பெற்று அவன் அழகைக்கூட்டின. மிளிரும் கேசம் அவனுக்கு வந்தது. குறிப்பாக நெஞ்சம் விடைத்து பெரும் வீரனாக பழைய தோற்றத்தை அடைந்துவிட்டான் தயாளன். இக்காட்சிகளை முறையே நாள் குறித்து ஒவ்வொரு முறை
அவன் முன்னேறிவருவதை கண்ட தெய்வாங்கதனும்,மாவணங்கும் பெருத்த மகிழ்ச்சியிலாழ்ந்தனர். வெகு முக்கியமாக தான் இதுவரை அறிந்திராத
வருங்காலத்தை வதைக்கப்போகும் இவ்வதிசய பெருநோயின் அடையாளங்களையும், அதற்கான பதில் மருந்தையும் தெய்வாங்கதன்
கண்டுபிடித்ததை எண்ணி மேலும் தானொரு மைல்கல்லை எட்டிவிட்டதாக தீராத சந்தோஷத்தில் திளைத்தத்தோடு மட்டுமில்லாமல் இதனை உடனே தனக்கு உதவி புரிந்த மருத்துவர்களிடம் தெரிவிக்குமாறு மாவணங்கை கிழக்கு நோக்கி கடற்பயணம் மேற்கொள்ள வைத்தார். அரசரிடம் தன் மகன் குணமான சேதியை மட்டும் சொல்லிவிட்டு ஒரு ரகசிய கண்டுபிடிப்புக்கான மகிழ்வை பெருவிருந்தொன்றுக்கு தயார்செய்து அதில் படரவிட்டார். அடுத்த சிலவினங்களை நினையாமல் தன் மகனுக்கு கட்டுக்கோப்பான முறையில் மணமுடிக்க ஆயத்தமானார். இம்முறை அவனும் தந்தையின் சொல்லுக்கு ஒப்புக்கொண்டான். மாவணங்கின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கும் வேளையில் பெண் தேட ஆரம்பித்தார் தெய்வாங்கதன்.

இறுதியில் பழையாறு என்னும் ஊரில் தயாளனுக்கு பெண் கிட்டியது.
அவனது பிதாமகர் திருமணத்திற்கான ஏற்பாட்டினை வெகு ஆடம்பரமாக செய்து கொண்டிருந்தார். தயாளனோ , மாவணங்கு திரும்பட்டும் எனவும்
அவனில்லாமல் திருமணம் நடப்பது அசூயையாக இருக்கும் எனவும் தந்தையிடம் தெரிவித்தான். திருமணத்திற்கான நாள் கடந்து மாதங்களாயின.
மாவணங்கு ஊர் திரும்பவில்லை. தெய்வாங்கதனோ, அவன் வந்தவுடன் ஒரு விழாவினை வைத்துக்கொள்ளலாமென்றும், அதற்கு முன் வைதீக சடங்குகளடங்கிய நிகழ்வினை முடித்துக்கொள்ளலாமென்றும் தயாளனிடம் கூறினார். மேலும் அதற்கு ஒரு வைதிகரையும் தேட ஆரம்பித்தார்.
மாவணங்கில்லாத குறையை அவனுக்கும் எனக்கும் நண்பனாகிய காய்ச்சினவேந்தன் இருப்பான் என்றும், அனைத்து வைதிக கார்யங்களை அவனே முன்னிருந்து நடத்த வேண்டுமென்றும் தந்தையிடம்
கட்டளையிட்டான் தயாளன்.

அவன் கூறிபடி காய்ச்சினவேந்தன் வரவழைக்கப்பட்டான், பல ஊர் மக்கள்
கூட, அனைத்து வாத்திய ஒலிகள் ஒலிக்க தயாளனின் திருமணம் காய்ச்சினவேந்தனின் மந்திரோபதேசங்களுடன், அரசனின் முன்னிலையில்
கடவுளின் ஆசீர்வாதத்துடன் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.

தற்போது எட்டு மாதங்களாகியிருந்தன தயாளனுக்கு மணம் முடிந்து. இன்னமும் மாவணங்கு ஊர் திரும்பவில்லை. அப்போது ஒரு சமயத்தில்
தயாளனின் பத்தினி ஒரு காட்சியைக் கண்டாள்.

இரவில் தலை போர்த்திய ஒரு உருவம் நடந்து தன் வீட்டையடைவதையும், அது வாசலை தவிர்த்து புறக்கடை வழியாக தனது அறையை அடைவதையும்
பயந்துகொள்ளாமல் கண்டாள். அது தயாளன் தான் என்பதை மாற்றின்றி கண்டுகொண்டவள் அவனிடம் அதைப்பற்றிய பேச்சே எடுக்கவில்லை.

அடுத்த நாள் சாயந்தர நேரமொன்றில் தனது மாமனாரான தெய்வாங்கதனிடம் அனைத்தையும் தெரிவித்தாள்.

அவர் கேள்வியுற்ற அடுத்த நாள் அவரது மதியூகத்தால் அவன் சென்று வரும்
இடத்தை அறிந்து பேரிடி விழுந்ததுபோல் உணர்ந்தார்.

அது "நிசுளாபுரி, விராலகிரியின் மாளிகை.!"

முதல் வேலையாக தயாளனை வரவழைத்து எச்சரிக்க ஆரம்பித்தார்.

அவன் இசைகேடாக எதுவும் நடந்துவிடவில்லை என தன்னுடைய தவறினை மறைத்தான்.

அவர், அவனுடைய செயலை ஆதாரங்களுடன் விவரிக்க முற்படும் நேரம் வந்துவிட, அதற்கு அவன் ,"மாற்று மருந்துதான் நம்மிடம் இருக்கிறதே!
பிறகு எதற்கு கவலைப்படுகிறீர்" என்று பேசிவிட தெய்வாங்கதனின் கண்ணின் நிறம் மாறியது, காதோரங்கள் சூடானது. உக்கிரமான கோபத்துடன்
பரளினிடைகழியில் செருகப்பட்ட மரஉருளையின் மேல் வைக்கப்பட்டிருந்த அம்மருந்துக்கலயத்தை தரையிலடித்து உடைத்தார்.

அத்துடன் "இனி நீ என்னுடன் எக்காலும் பேசக்கூடாது, இப்படியே
தொலைந்து போ , இனி எனக்கு மகனென்று ஒருவனிருப்பின் அது மாவணங்கு மட்டுமே" என்று சபித்துவிட்டு யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அன்றிரவே மாவணங்கைத் தேட கடற்பயணம் மேற்கொண்டு கிழக்கு நோக்கி புறப்பட்டார்.
ஆனால் அவனோ!

செம்பினாலியன்ற பாவையை தண்டனையாக தழுவுவேனோ இல்லையோ தற்போது இயல்பான இயற்கைப்பாவையைத் தழுவுவதை இன்றைய நாட்களில் விட முடியாது. அந்நோய் மீண்டும் வருமென்பதற்காக அதற்கான
அருமருந்தை பெறவே தனது தகப்பனார் சென்றிருப்பதாக நினைத்தான். அவனது யூகத்தினடிப்படையில் தெய்வாங்கதன் திரும்ப வந்து -
கொண்டிருப்பதாகவும், மீண்டும் அம்மருந்தை கொண்டுவருவதாகவும் நினைத்துக்கொண்டு, பலமுறை அவ்வியாதியுடன் மனைவியிடம்
மட்டுமில்லாது வேசிகளோடும் கூடினான்.

அம்மண்டலத்தின் முதற்சுற்றில் இப்படி இருந்தான்.

கதவு சாற்றப்பட்ட அறையிலிருந்து வெளுத்துப் போய் வெளியில் வந்தான். சளித்து சளித்து விரயமாக்கிய எதிர்காலத்தை அங்கே ஒரு குறிப்பிட்ட இடத்தில் விட்டு விட்டு வெதும்பி சிறிய துக்கத்துடன் உடல் சந்தோசத்துடன் தன்னை ஆக்கிரமணம் செய்த ப்ரக்ருதியை நினைத்தவாறு தன் நோயினறிவையும் எண்ணிக்கொண்டே தனது மனையை நோக்கி விரைந்தான்.

அதற்கு முந்தைய நாள் இரவின் விளிம்பில் மாலையில் துளிரிய புஷ்பத்தை மோந்த தருணத்தில் திரியொளியும் ஓரணுவும் தானும் ப்ராணத்தியாகிக்க ஆயத்தப்பட்டதை அவ்விரவு முழுதும் சப்தமித்த முனகலினொலி வரிந்துகொண்டு காட்டியது. அது நிசப்தம் களைந்த முழு இரவு.

அன்றிலிருந்து சில நாட்களில் அத்தகைய இரவொன்றின் இரண்டாம் ஜாமத்தில் தயாளன் மீண்டும் அந்நோய் முற்றிப்போய் படுக்கையில் வீழ்ந்து இறந்துபோனான்.

காத்து அடக்கி ரகசியமாய் வைத்த இச்செய்தி, அக்குடும்பத்தினரின்
மர்மமான தொடர் மரணங்கள் மட்டுமின்றி வேசிகள் சிலரின்
மரணங்களும் கண்டு அதிர்ச்சியுற்ற ஊர் மக்களுக்கு
அப்பெருவணிகன் மூலம் தகவல் பரவியது.

அந்நோயைப்பற்றியும், அதிலிருந்து காத்துக்கொள்ளும் வழியினையும்,
நோயின் விளைவுகளையும் பிரசங்கிகள் மூலம் மன்னருக்குப் பிறகு வந்த அரசாங்கத்தால் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

தெய்வாங்கதன்,மாவணங்கு,மற்றவர்களைப் பற்றிய செய்திகள் மந்த வெளியில் சூன்யமாக இருப்பதினால் அவர்களை ஆழிப்பயணம்
விழுங்கியதா அல்லது கொடிய பிராணிகளால் தாக்கப்பட்டார்களா
அல்லது வேறு ஏதாவது என்று பல ரூபத்தில் உலாவ ஆரம்பித்தது.

இருந்தபோதிலும்,

தயாளன் மீண்டும் அந்நோய் முற்றி உயிர் துறந்ததும், அந்நோய் இந்நூற்றாண்டில் பலரையும் ஆட்கொண்டுவிட்டதும் தெய்வாங்கதனும்,
மாவணங்கும் அவர்களைத் தேடச்சென்ற மற்றவர்களும் இவ்வுலோக காலத்தின் இன்றைய நாள் வரை ஊர் திரும்பவில்லை மட்டுமே என்ற ஒரு காரணம் அந்நோய் கண்டவர்களைப் பார்க்க நேரும்போது கண் முன்னும்
மனத்திலும் ஒரு வலியாக தோன்றி மறைகிறது.

நன்றி: சிறுகதைகள்.காம்

Saturday, April 14, 2012

ஓசூர் கவிதையுரையாடல் நிகழ்வு (08/04/2012)


கடந்த வாரம் 8-ஆம் தேதியன்று ஓசூரில் நடந்து முடிந்த
கவிதைகளுக்கான கட்டுரை வாசிப்பு நிகழ்வில் கலந்துகொண்டேன்.

புது எழுத்து, தமுஎகச இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் பல
கவிஞர்களும் எழுத்தாளர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர்.

                                 

ரியாஸ் குரானா மற்றும் சாகிப் கிரான் ஆகியோரது கவிதைத்
தொகுப்புகளுக்கான கட்டுரையை முறையே வா.மணிகண்டன்,பீர் முகம்மது,சம்பு ஆகியோர் வாசித்தனர்.சமயவேல் அவர்களது கட்டுரையை முகிலன் வாசித்தார்.நண்பர் மணிகண்டன் ஒரு புதிய முறையில் தனது கட்டுரையை வாசித்தார்.

விரிவான ஒரு கட்டுரையில் பத்திகளை இடை நிறுத்தம் செய்து அதற்குரிய
தகவல்களை அவர் விவரித்த விதம் அனைவரையும் கவர்ந்ததாக இருந்தது

                             

மேலும் பா.வெங்கடேசன்,மனோன்மணி மற்றும் ஆதவன் தீட்சண்யா ஆகியோரின் விளக்கங்களும் கவிதைக்கான பன்முகத்தை வெளிப்படுத்தியது என்றே சொல்லலாம்.

இந்நிகழ்வில் பங்குகொண்ட அனைவரும் ஒரு நிலையில் வாசகர்கள் தான், இருப்பினும் அடையாளமே ஒரு வாசகனாக இருந்து பங்குபெறுவது என்பது அலாதியான அனுபவம். இதன் காரணத்தினாலேயே முடிந்தவரை நண்பர்கள் நடத்தும் இத்தகைய இலக்கிய நிகழ்வுகளுக்கு சென்றுவிடுவது வழக்கம்.அதில் பல திறப்புகள் கிடைக்கும்போதும் கவிஞன் அவனது மதிபலத்தினால் உள்ளார்ந்து செயல்பட்டு அளவுகோலில்லாமல்
வாசகனை கடத்திவிடும்போதும் இலக்கிய நண்பர்களுடனான தனிப்பட்ட உரையாடலின்போதும் மனதில் ஒருவித உண்மை நிலையும்,சந்தோசமும் குடிகொள்வதை உணர்ந்துகொண்டிருக்கிறேன்.

Saturday, March 31, 2012

"3" - திரையின் சில துறைகள் வழியிலும், சில தகவல்களுடனும்



"எனக்குப் பிடிச்சிருக்கு சார். உங்களுக்கு எப்படியோ தெரியல!" என்று சொல்லி தப்பிப்பவர்களில் நானும் ஒருவன்.இதற்கு இப்படத்திற்கு கிடைத்த மதிப்பீடுகளே காரணம். எனவே இப்படத்தைப்பற்றிய சில தகவல்களை மட்டும் இங்கு திரையின் சில துறையில் இருக்கும் நுணுக்கங்களை தொழில் நுட்ப வார்த்தைகளை பயன்படுத்தாமல் சொல்கிறேன்.

இப்படத்தின் கருத்தை மொத்தமான மெளனங்களின் மரணம் என்று சொல்வதை விட மெளனத்தினால் மரணம் என்று வைத்துக்கொள்ளலாம்.  ஒருவித சிக்கலான கதையுடன் கருத்தினை வலியுறுத்தும் திரைப்படங்கள் உருவாகிவருகிறது. இப்படத்தைப் பொருத்தவரை காதலை அதிகப்படுத்தி ஒரு சிறிய தகவலை தந்துவிட முயற்சி செய்துள்ளார்கள்.

ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1) திரைக்கதையமைப்பு:

பார்வையாளனைக் குறைத்து மதிப்பிடாமல் அவனது கண்ணோட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் பகுதி இது. அவனாக புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்பதே இத்துறையின் நோக்கம். இதன் ஒரு பிரிவில் காட்சிகளே வசனமில்லாமல் அதை விவரிக்க முற்படும். இதில் பார்வையாளனின் புரிதல் என்கிற ஒன்று அத்தியாவசியமாகிப்போகிறது. இது பார்வையாளனுக்குறிய சவால். படைப்பாளிக்கு,சினிமாவில் இந்தப்பகுதியில் சிக்கலை ஏற்படுத்தினால் படம் பார்வையாளனைக் குழப்பி ஒரு வழியாக்கிவிடும். எனவே அவன் இங்கு முழுச்சிரத்தையுடன் இயங்குவது முக்கியம்.
திரைக்கதையமைப்பின் படி ஓரளவிற்கு அம்சமாக வந்துவிட்டது. இதை முழுமையாக அலசி விவரிக்காமல் சில இடத்தை மட்டும் சொல்கிறேன்.

a) கதாநாயகி கதாநாயகனின் நன்பணது பெற்றோரின் காலில் விழுவது போன்ற ஒரு காட்சியை வைத்துவிட்டு அதற்கடுத்த காட்சியில் கதாநாயகனின் நண்பனை அவன் தங்கியிருக்கும் விடுதியில் சந்திப்பது போல் உடனே வரும். இது உபகுறியீட்டுக்காட்சி. இது நிசப்த நகர்வு.
பெரும்பாலும் இத்தகைய உபகுறியீட்டுக்காட்சிகள் பல திரைப்படங்களில் இடம்பெறுவதுண்டு. (முக்கியமாக அயல் தேச திரைப்படங்களில்).இதை பார்வையாளன் எவ்வாறு அணுகுகிறான் என்பதே இங்கு முக்கியம். இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், இவ்வுபகுறியீட்டுக்காட்சி அல்லது
கிளைகாட்சிக்கு ஒரு தலைக்குறியீட்டுக்காட்சி நிச்சயம்  தேவை. இங்கு இத்தலைக்குறியீட்டுக்காட்சி, அதற்கு முன்னரே நண்பணின் பெற்றோரை கதாநாயகி சந்திப்பது போன்ற உரையாடல் நிமித்தமான காட்சியாக வைத்துவிடுவார்கள்.இது சப்த நகர்வு. மிக்க கவனமான இந்த முற்சேற்க்கை இல்லாவிடில், பார்வையாளன் ஒரே நொடியில் 'ப்ச்' என்று சொல்லிவிடுவான்.

b) முதல் பாதியில் நகைச்சுவை கதாபாத்திரத்தை வைத்துவிட்டு அடுத்த அரைபாதியில் அக்குறிப்பிட்ட கதாபாத்திரம் வெளிநாட்டுக்கு செல்வது போல் கதாநாயகனின் வாயிலாகவே சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்க விஷயம். ஏனெனில் இடைவேளைக்குப் பிறகான நிகழ்வுகளனைத்தும் உணர்ச்சிக்
காட்சிகள். அக்கதாபாத்திரம் இருந்தால் செயற்கையாகிவிடும். அதை மாற்றியிருப்பதும் திரைக்கதையைக்கையாண்டதில் கவனிக்க வேண்டியாதாகும்.

c) கதாநாயகனின் தகப்பனாரும்,தாயாரும் பற்றுதலில்லாத இடங்களை மட்டும் காட்சிப்படுத்தியிருப்பது அவனின் வீழ்ச்சிக்கு அடிப்படையான ஒன்றாக அமைவதில் முக்கிய பங்குவகிக்கும் என்ற படக்குழுவினரின் அவதானிப்பு சிறப்பாக பலனளித்துள்ளது. படத்தில் கதாநாயகியின் தாயாருடைய கதாபாத்திரத்தினுடைய பருமனில் கால் பங்கு கூட கதாநாயகனின் தாயாருடைய கதாபாத்திரத்திற்கு தராமல் தவிர்த்ததே
இதற்கு உதாரணம்.

d) காலம்&களம்:

மிகவும் கவனிக்க வேண்டிய பகுதி இது. காலத்தை அனுமானித்து கவனமாக கதைபோக்குக்கு ஏற்ப அனைத்து கதாப்பாத்திரங்கள் மட்டுமின்றி களத்தையும் தெரிவு செய்து காட்சி எழுதுவது சிரமமென்றாலும் அதுவே இப்பகுதியின் முதன்மைத்தன்மையாகும். கதாநாயகன் மாணவனாக இருப்பது,
அவனுக்கு குறுந்தாடியுடன் தோற்றமளித்து வயதை சிறிது கூட்டுவது, பிறகு கொஞ்சம் அடர்த்தியான மீசையுடன் ஒரு தொழில்வல்லுனர் என்று காலத்துடன் அவன் பங்கேற்கும், கடந்து செல்லும் களத்தையும் சரியாக தேர்ந்தெடுப்பது திரைக்கதையமைப்பின் வலுவான பகுதியாகும்.
இத்தகைய செயல்களனைத்தும் இதில் சிறப்பாக அமைந்திருப்பதாக தோன்றுகிறது. *இப்பகுதியை அடுத்ததாக வரும் படத்தொகுப்பு பகுதியுடன் சேர்த்துப்படித்துக்கொள்ளவும்.

இதை மேலும் விவரித்தால் கடுந்தேள் கொட்டட்டும் என்று என்னை சபிப்பீர்கள் என்று தெரியும்.

இதனால் அடுத்த பகுதிக்கு செல்வோம்.

2) ஒலி&ஒளி:

அவ்வளவு பரிச்சயப்படாத விஷயத்தைப் பற்றி பேசுவதற்கு பயம் இருந்தாலும் தெரிந்துகொண்ட வரையில் சொல்லப்போனால் உலகப்புகழ் பெற்றுவிட்ட பாடலை விட மற்ற சில பாடல்களும் அதை விட நன்றாகவே இருக்கிறது. ஒரு நொடி பிம்பங்களாக மனதில் புகுந்து நினைவுகளை அகலக்கரைப்பதே இசையின் முக்கிய பங்கு. மறுபதிவுகளின்பொழுது காட்சிகளுக்கேற்றபடி இசையினைக்கொடுப்பது சினிமாவின் வரலாறு. நகைச்சுவைக்கும்,அந்தரங்கத்துக்கும்,காதலுக்கும்,சோகத்துக்கும் தனித்தனி
இசைக்கருவிகள் உபயோகிப்பது வழக்கம். குறிப்பாக இடைக்கால சினிமாக்களில் பாடல் இடம்பெற சில காட்சிகள் அல்லது சில நிமிடங்களுக்கு முன் அதன் ராகத்தை மட்டும் இசைத்து பாடல் வரப்போகிறது என்பதை தெரியப்படுத்துவது ஒரு உத்தியாக இருந்தது. அது ஒரு எச்சரிக்கை
என்று கூட சொல்லலாம். அக்கலாச்சாரம் முழுமையாக இல்லாமல் ஓரளவுக்கு காலாவதியாகி தற்போது காட்சியுடன் காட்சியாக பாட்டு பாடிவிட்டு செல்கிறார்கள்.

இத்திரைப்படத்திலும் ஒரு பின்னணி இசை மட்டும் கடைசி காட்சி முடிந்து கீழிருந்து மேலாக எழுத்தோடும் போதும் தொடர்வது நிம்மதியான ஒன்று. அதில் வர்ணங்கள் இதமாக்கும் புகைப்படங்களுடன் திரையிலொலிப்பது கடைசி காட்சியினுடைய உணர்வின் நீட்சியை பிரதிபலித்துக்கொண்டே இருப்பது போல் இருக்கிறது.

அதை முக்கியமான இடங்களில் பயன்படுத்தியிருப்பது நன்கு பொருந்தி வந்திருக்கிறது.

ஒளியினை விளக்கினாலும் என்னை நையப்புடைப்பீர்கள் என்பதால் ஒரு புதுமை கண்ட ஒளியமைப்பு இதில் கையாளப்பட்டுள்ளது. கதாநாயகியின் கழுத்திலிருக்கும் தாலியை தாயின் கண்ணோட்டத்தில் முழுக்க ஊடு கண்ணால் பார்ப்பதாக எடுத்திருப்பது ஓர் உதாரணம். இத்தகைய பல இடங்கள் இதில் உண்டு. என்றாலும் போதும்.

3) படத்தொகுப்பு:

பல்லாயிரம் அடிகொண்ட சுருளில் சூட்சும முடிச்சுகளை அவிழ்த்து தெளிவாக்கி கொடுப்பது இத்துறையின் முக்கிய வேலை. இதில் பற்பல இடைஞ்சல்கள் ஒரு தொகுப்பாளருக்கு வந்து சேரும். இத்திரைப்படைத்தை பொருத்தமட்டில் படத்தொகுப்பு முதல் பாதியில் கையளவு பின் தங்கியிருப்பதாக நினைக்கிறேன். காட்சிகள் அடுத்தடுத்து ஓர்
இணைவில்லாமல் ஒட்டப்பட்டிருபதாக தோன்றுகிறது.

a) சிறப்பு வகுப்பு செல்வது போன்ற ஒரு காட்சிக்கு அடுத்து யாருமற்ற சாலையில் காத்திருப்பது போன்ற காட்சி. மீண்டும் வகுப்பு, அதே காத்திருப்பு. இது கதைக்காக என்பதால் சகித்துக்கொள்ளலாம். மற்றபடி இத்தகைய காட்சிகள் பின்னடைவே தரும்.

b) தொடர்ச்சியாக நகரும் சம்பவங்களின் கோவையில் ஒரு இழை ஒளிந்து அதை நகர்த்த வேண்டும்.அவ்விழைப் பகுதி இதில் எங்கோ ஒரு இடத்தில் இல்லாமலிருப்பதே முதல்பாதியின் படத்தொகுப்பில் கதையினை வந்தடையாத ஃப்ளாஷ்பேக்குக்குகள் மறுபாதியின் உண்மைக்கதையின்
தாக்கத்தைக் கொணரவில்லை.

c)*முதல் பாதியில் படத்தொகுப்பினால் காலம் முழுமையாக முரண்படாமலிருந்தாலும் அதன் அதிவிரைவான தன்மையால் சிறிது கதையோட்டத்துடன் ஒன்றாமல் முரண்பட்டிருப்பது தெரிகிறது.

இதை அடுத்த பாதியில் சமனளித்து படத்தைத் தொகுத்திருப்பது ஆறுதலளித்தது.

4) தகவல் கட்டமைப்பு:

திரைப்படங்களில் தவிர்க்க இயலாத பகுதி இது. உங்களை ஆயாசம் கொள்ள செய்யாது என்ற நம்பிக்கையில் சிறிது விரிவுபடுத்துகிறேன்.

ஒரு படம் முழுவதும் கருத்துக்குவியலாக மெனக்கெடுதல் இருக்கவேண்டுமென்று 50,60 களில் ஒரு விதிமுறையிருந்தது. அதை தவிர்த்து படங்களெடுக்கப்பட்டு அது வெற்றியும் பெற்றதுண்டு. ஆனால் மேற்கத்திய திரைச்சித்திரங்களில் மறைமுகப்படுத்துதல் என்ற ஒரு சித்தாந்தம் உண்டு. அதாவது சொல்லவந்த கருத்தினை நேரடியாக வெளிப்படுத்தாமல் காட்சிகளுடன் கொடியாக படரவிடுவது. அது படம் முடியும்பொழுது முழுமைபெற்று கருத்தாக மலர்ந்துவிடுவதை உணரலாம். இம்முறை தற்பொழுது நமது இந்தியத் திரைப்படங்களிலும்
புகுந்துகொண்டதை அறுதியிட்டு சொல்லலாம். அதையே காலம் காலமாக நம் தமிழ்ப்படங்களிலும் தொடர்ந்துவருகிறது. ஆனால் கொடி பரவப்பட்ட படம் முடிந்தும் கூட அப்புரிதலுக்கு ஒரு வாசகம் திரையில் தேவைப்படுவதை மட்டும் தவிர்க்க இயலாதது நாம் பின்னங்கால் வைப்பதாக தெரிகிறது. இதையே அரவானும் செய்தார். நல்ல படம், பகிரங்கப்படுத்தாத கருத்து ஒன்று என்று வலுவாக செல்லும்போது இறுதியில் அதைப் பிரகடனப்படுத்த ஒரு வாக்கியம் அமைப்பது அம்மொத்த படத்தையும் அறிந்துகொள்வதற்கு உதவும் என்பது படைப்பாளி,பார்வையாளன் இருவரது கூட்டு பலவீனமென்றே சொல்லலாம்.

மேலும் இதற்கு விதிவிலக்காக கைதேர்ந்த படைப்பாளிகளால்
உருவாக்கப்படும் "விருமாண்டி", "The Life Of Gale" போன்ற திரைப்படங்களிருப்பது இங்கு நமது கதையுருவாக்கத்துக்கும்,
திரையாடலுக்கும் செலுத்த வேண்டிய உழைப்பை அறிவிப்பாக சொல்லிவிடுகிறது.

'3' இப்படத்துக்கு ஏன் இந்த தலைப்பு என்று முதலில் சொல்லிவிடுகிறேன்.
ஒருவன் நாயகன்,ஒருத்தி நாயகி மற்றொரு நபர் நாயகனுக்கு தாமதமாக பழக்கமாகும் நாயகிக்கு பழக்கமே ஆகாதவர். இம்மூவரின் கதை என்பதால் படத்தின் பெயர் காரணம் '3'.

படத்தின் கதாபாத்திரங்கள் பற்றி சொல்ல முனையும்போது , கதாநாயகன் அடுத்த சில படங்களில் இதே மாதிரியான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுப்பதை தவிர்க்கலாம். இல்லையென்றால் பெரும் நடிகர்கள் குறுஞ்செய்தித் தாக்குதலுக்கு ஆளாகி தவிப்பதுபோல் ஆகிவிடுவார். இருந்தாலும் இப்படத்தைப் பொறுத்தவரையில் அவருடைய செய்கைகள் படத்துடன் அனைத்திடங்களிலும் ஒன்றிவந்துள்ளது முக்கியமாக இறுதிக் காட்சியில்.

கதாநாயகி சில இடங்களில் இயற்கையான செய்கையுடனும், சில இடங்களில் அவரது செயற்கைத்தனமும் தெரிகிறது.

நகைச்சுவை கதாப்பாத்திரத்தை மிகவும் அளவாக, லேசாக இருந்தும் இருக்காததுபோல் பயன்படுத்தியிருப்பது படத்தின் சாரத்துடன் ஒத்துப்போகிறது.

கதாநாயகனின் நண்பன் கதாபாத்திரம் ஒரு பாலம் என்று சொல்லலாம்.
கதாநாயகியின் தகப்பானாரிடம் கதாநாயகன் அறை வாங்குமிடத்தில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தை தோழமைக்கு வைக்காமல் பாலமமைக்கும் கதாப்பாத்திரத்தை அங்கு வைத்திருப்பது திரைக்கதையினை
மேலும் செழிப்பாக்கியுள்ளது.

மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் நிலைத்துவிடுகிறது. நல்ல தேர்வு.

ஆனாலும் அளவுக்கு மீறிய யதார்த்தங்களில்லாமல் அமைந்த காட்சிப்பொருத்தம் ஒரு வகையில் இதமாக இருந்தாலும் சில இடங்களில் தொய்வடைவது பார்வையாளனின் பொறுமையிழத்தலிலிருந்து
தெரிந்தது.

ஒருவர் இறந்தது தெரிந்துவிட்டலும், அவர் காதலின் காரணமாக இறந்திருப்பார் என்று பயந்து பயந்து நான் படத்தைப் பார்க்கும்பொழுது
அதற்கு வேறொரு காரணம் புகுத்தப்பட்டதை பார்த்துவிட்டு
நிம்மதியடைந்தேன். படத்தின் முக்கிய பலமும் இதுவே. இதை தாண்டியும் பார்வையாளனின் ஏவல்களுடன் படம் விடைபெற்றது சோகமளித்தது.

மனிதன் அவன் இவன் என்று ஆரம்பித்து சொல்லுமளவுக்கு
பக்குவமில்லாததால் படத்திலிருக்கும் மையப்பகுதியை இங்கு
சொல்கிறேன். மற்றவர்களைப் புரிந்துகொள்வது மட்டுமில்லாமல் ஒரு அன்யோன்யமான புரிதல் முக்கியம். தனிமையில்லாத முடிந்தவரை அரவணைத்து வரும் புரிதல். உறவினர்கள்,நண்பர்களை சொரிந்துகொண்டிருக்க வேண்டும்.அவர்களை வட்டமிட வேண்டும். வடிகாலாக மட்டுமல்ல அவர்களுடைய பேச்சைக்கேட்கும் ஒரு வெளியாகவும்.அதற்கான வெளியமைத்துத் தரவேண்டும். அரவணைப்பு தவறிவிடுமிடங்களில் இது போன்ற மூன்றாவது நபர் தோன்றிவிடுகிறார்.
மூன்றை வராமல் பார்த்துக்கொள்வது அவசியம். மேலும் மெளனம் கொடுக்கும் இடைவெளி புது அர்த்தம் கொள்ள வைக்கும்.
அர்த்தத்தை இடம் மாற்றும், பல அர்த்தங்களைப் பிரித்து பிறழ வைக்கும். எதையெதையோ யோசிக்க வைக்கும்.அதன் வலிமை உயிரையும் தீர்ப்பது. இது சம்பந்தப்பட்டவர்களின் முகத்தில் பட்டவர்த்தனமாக தெரியும்போது
கப்பென்று பிடித்துக்கொள்ளுங்கள். அது போதும்.


இப்படி சொல்லிவிட பல ஆரோக்கியமான மெளனங்களும், சொல்லிவிடமுடியாத இடங்களை நிரப்பக்கூடிய சப்தங்களும்
மனதிலடைந்துவிடும்போது மெளனங்களின் மரணமாக இல்லாமல், மெளனத்தினால் மரணம் என்கிறது இப்படம்.