Pages

Sunday, August 6, 2023

நீலகேசியின் மறு உரையாடல்/சொற்களற்ற நூல்கள்....


அகசூனியத்தில்
ஸ்தூல வெளியின் கருமைப்பரப்பில்  மிதக்கும் நீலகேசி வனதியின் அரூப
பிம்பங்கள் சகிதமாக
ஓர் உன்மத்த சாயை - தாண்டவராயன்

இதுகாறும் காணக் கிடைக்கும் பத்திகள் சாராம்சமிக்க பிராரம்ப உசாவல்களாகவும், பாரம்பரிய சடங்கு வழியில் செய்யப்பட்ட கடன் தீர்க்கும் முறையிலும் தேங்கி நிற்கின்றன.  கேட்ட குரலையே மீளச் சொல்லும் பாங்கிலிருந்து விலகி மாற்று ஏற்பாடு செய்ய ஆசிரியரே முன் வருவது எத்தனை அபத்தம். ஒரு மொழியில் முயற்சிக்கப்பட்ட பிரதி தனக்கான இடத்தை உருவாக்கிக்கொள்வது அசாத்தியமான காரியம் என்ற சிந்தனையே அவலமானது, மேலும் ஒட்டுமொத்த கதாவாசக கும்பல்களிலிருந்து ஒரு விந்து முதற்பிரதியின் பாற்பட்ட ஸ்நேகத்தாலும் (ஒருவேளை பரிதாபத்தாலும் கூட) அதை அண்டி அன்போடு அணுகுவதென்பது போற்றத்தக்கதல்ல.

இப்போற்றத்தக்க நிலையிலிருந்துகொண்டுதான் ஒரு பிரதியை ஏற்றுக்கொள்வதை நீலகேசியும் முயல்கிறாள். நீலகேசி சிங்கள இனவாதம் தோன்றவியலாமலிருக்க எந்த சிரத்தையும் மேற்கொள்ளாத பௌத்தத்தை அன்றே மறுத்துவிட்டு சமணத்தை அங்கீகரித்தவள். அவள் வழிவந்த இவளும் சாமானிய வாசகி. அவள் அர்த்தங்களுக்கொப்ப சில வாசிப்புச் சாத்தியங்களை இப்புதிய பிரதிக்கு அளிக்க விரும்பினாள்.

நீலகேசியின் உசாவற்படி ஆயிரமாம் ஆயிரம் வருடங்களாய் அழிவின்றி இடைவிடாது ஓரிடத்திலிருந்து கிளம்பி அலைந்து பிரிவுற்று இறுதியில் கடல்புகும் நதியின் பரந்த அசைவைப் போன்ற இவ்வுலகக் கதைப்பரப்பில் எங்கோ நடுவில் ஓரிடத்திலிந்து இழுத்து எடுக்கப்பட்ட கதைத்தொகுப்புகள் சர்க்கங்களாய் விரிந்ததாகவும், பிரம்மாண்டப் பெருவெளியின் மூலையொன்றிலிருந்து பிரித்து உருவப்பட்ட சொற்களின் தொடர் சேர்க்கை இப்பிரதியின் பகுதிகளாய் மாறிப்போனதாகவும் சொல்லப்பட்ட இப்புதிய பிரதி ஓர் அர்த்தமற்ற பித்தத்தனத்தில் தனக்கேதனக்காய் பேசியவளின் செய்கைகளைக் கண்ணுற்றவர்கள் அவள் இடையின்றி மேலும் பேசுவதற்காக காத்திருந்தனர்.

அவசியமேயில்லாமல் பல இடங்களில் ஆசிரியப்பிரசன்னம் நிகழ்வதாக அவன் குறைபட்டுக்கொள்ள நீலகேசியோ அவன் ஊடுருவலின் முக்கியத்துவம் குறித்துப் பேசலானாள். 

புரட்சி என்ற சொல்லையே நீக்கியவள் எலினார் என்பதை வரலாற்றின் கடைசி வாசகனுக்குக் கடத்திவிட நினைப்பதும், தத்ரூபத்தின் முதிர்ச்சியின்மையைப் புரிய வைப்பதும் சாத்தியமாகாத ஒன்று. அதற்கு இப்பிரதியையும் தொழிலாக வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர ஊடறுத்தல் ஒருவித குறைபாடு என்ற மனோநிலை குறிப்பிட்ட இடத்தில் பொருந்தி வராது.

ஆமோதிப்போரின் நடுவில் உருவான வெற்றிடம் தன் காய்ந்து போகாத ஒற்றைப் பரிமாணமிழந்த சுயகேள்வியின் வெளிப்பாடாகும் என்பது நீலகேசியின் நம்பிக்கை. அவள் சலசலப்பான பேச்சுத்தொகைகளுக்கு சோரம் போகாத திண்ண உரையாடல்களை செறிவாக்குவதில் பயிற்சி செய்பவள். ஒரு சகவிந்து பார்ப்பனீய அம்சங்களின் முதன்மையை பூடகப்படுத்துவதை எதிர்கதையாடல் என்ற புரிதலின் சாரத்தை படர்த்துவதன் மூலம் ஆசிரியனற்ற பிரதி செயல்படும் சாரத்தை விளக்கினாள்.

ஒரு கண்ணாடியைப் போல
எதிர் எதிராக
இருவேறுபட்ட
எதிர்வுகளின்
நித்தியம் 
தாண்டவராயன், ஓர் எதிர் கதையாடல்


துயிலார் X நித்திரவார்:

துயிலார் இனத்தின் வேர் குடுகுடுப்பை சமூகம். ஒன்பது கம்பளத்தார்களில் "நித்திரவார்" குழு மட்டுமே குடுகுடுப்பைத் தொழிலில் ஈடுபடும்.

தொல்கதைகளின்படி "நித்திரவார்" என்பது உறக்கத்தினால் ஏற்பட்ட ஒரு பெயர்.  புலாலில் வலு பிரசித்தம் பெற்ற மாட்டிறைச்சியை மறுக்கிறார்கள் இவர்கள்.  தாழ்த்தப்பட்ட குழுக்களோடு பிற சமூகக்குழுக்களின் உறவெப்படியோ அதிலொரு எள்ளும் வேற்றுமையற்ற உறவு. சுருக்கமாக போலச்செய்தலின் உதாரண குழுக்களில் ஒன்றே நித்திரவாரும்.

பிரதியின் சூட்சுமம் இக்குறிப்பிட்ட தளத்தில் வெளிப்பட்டுவிடும் என்ற அர்த்தத்தில் நீலகேசி மேலும் எழுதியதாவது:

துயிலார் திரும்பச்செய்தல், போலச்செய்தலுக்குள் வரையறுக்கப்படாது தனித்திருக்கும் இனம். அவர்களின் முதற்பணியே தாழ்ந்த குழுவின் குலவீரன் பாடலை உச்சரிப்பது. உறங்கா சாபமேற்ற இரவுகளில் வாழும் அற்ப  ஸ்திதி பெற்ற உயிரிகள்.

துயிலாரும் நித்திரவாரும் விலகும் எண்ணற்ற இடங்கள் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் இணையும் இடங்கள்.

ஆந்திர நிலத்தை சேர்ந்த நித்திரவாரும், கர்நாடக எல்லையில் வசிக்கும் துயிலாரும் - குடுகுடுப்பை சமூகத்தை வேராகப் பெற்றிருக்கும் நித்திரவாரும், துயிலாரும் இணையும் புள்ளிகள் தர்க்க சாத்தியங்கள் உருப்பெறக்கூடிய தருணத்தில் பிரதியில் பொருந்தி வருகிறார்கள்.

சாரமான இந்த உரையாடல் புரிதலுக்காக உள்ளதோ அன்றி இதற்குள் சக விந்து சனங்களின் சொற்கள் நுழைய ஒரு இறுக்கமான வறட்டுச் சுவரை எழுப்பி வைக்கவில்லை - நீலகேசி. [சொற்களற்ற நூல் - பக் (73)]

பனுவல்களில் ஸ்தூல இருப்பும் ஏற்றமளித்தல் என்ற கோட்பாடும்:

ஆரம்பம் முதலே பனுவல்களில் 'இருப்பை' மறுத்து வந்திருக்கின்றனர். நடைமுறை உலகில் சமூகங்களுக்கிடையே கட்டமைக்கப்பட்ட உறவுமுறை பிரதிகளில் அச்சாகும் முறைமை தடுக்கப்பட்டு ஓரியல்பு மேலாண்மை நடைமுறையில் இருந்துள்ளது. கதைப்பாடல்கள் என்ற வகைமை மிகப் பிற்காலத்தில் சிறிய குழுவினரால் நிறுவனமயப்படாத எந்தவொரு ஆதரவுமற்ற சுவடிகளாக பாதுகாக்கப்பட்டு வந்திருக்கக்கூடிய சாத்தியங்களே அதிகம்.

நீலகேசியின் வசன அர்த்தங்களின்படி நாரதர் ருக்மணி தாயாரிடம் கதைத்து சுகர் பரீக்ச்சித்து ராஜனிடம் அறிவித்த சூத பௌராணிகர்களின் வழியே பிரம்மாண்ட தொகுப்பாய் விரியும் பாகவதமும், துயிலார்களின் கதையுலகமும் ஒரே நேர்கோட்டில் இருவேறு நிலைகளை சொல்லியிருப்பதனால் மேலுமொரு அகச்சான்றாக இதை பிராம்மணீய சாயல்களின் இருப்பின்மையை வலியுறுத்தி பிரதியின் புரிதலில் மாற்றத்தைக் கோரி நிற்கின்றது.

தாழிடுதலில் எந்தவொரு அசைவியக்கமும் நிகழாதபட்சத்தில் ஏன் காதுகளால் மட்டுமே கேட்டதை பிதிர் சஞ்சார மார்க்க போதினியில் இணைக்க வேண்டும்? அதை திப்புவின் நூலகத்திலிருந்து எடுப்பதற்கு உதவும் தேவை எங்கிருந்து வந்தது?

'எச்சில்' - என்றொரு சொல் உண்டு. மிகப்பிரமாதமான சொல். பிரதியாசிரியர் பிரதியை பற்பல மிக மென்மையான இழைகளால் இணைத்திருக்கும் அற்புதத்திற்கு சான்று  இது.

மாற்றுக்கருத்தின்றி இக்குறிப்பிட்ட இடத்தில் ஒன்றற கலக்கும் உவமையை நீலகேசி நினைவுறுத்துகின்றாள். சப்த ப்ரம்மம் நிசப்த ப்ரம்மத்தை பிரகாசிப்பிக்கிறது. என்னே ஒரு பொருத்தம். ஆஹா! பிரதியின் ஆசிரியன் சாமானியனல்லவா!

மீண்டுமொருமுறை,

சப்த ப்ரம்மம்
'நிசப்த'
ப்ரம்மத்தை
பிரகாசிப்பிக்கிறது...

நிசப்த ப்ரம்மம் செல்லியைப் போல, கோணய்யனைப் போல, ட்ரிஸ்டராமைப் போல, தாண்டவராயனைப் போல. வேறேதும் சொல்லாமல் வாசகரின் கவனத்துக்கே விட்டுவிடுகிறாள் நீலகேசி என்ற நீலகேசி வனதி.

மற்றொரு சக விந்தின் உரைகளின்படி நீலகேசியின் வசனங்கள் விரிவாக்கப்பட்டுள்ளன.

பாகவத கதைசொல்லிகளின் நிலையை துயிலாருக்கு அளித்தலும், நற்தூய தொகுப்பின் மதிப்பை (பாகவதம் போன்ற) பிதிர் சஞ்சார மார்க்க போதினியில் இணைந்த சர்க்கமொன்றிற்கு வழங்குதலும், சமூகக்குழுவொன்றின் தாழ்கள் அறுந்து 'எச்சில் பிரதியை' எழுதுதலும், அதை பாதுகாத்து கொணர வழி செய்தலும், 'எச்சில்' என்ற தூய்மையற்ற மொழிதல்கள் பிரதிபடுத்தப்படல் என்ற கருத்தாக்கத்துக்குள் நுழைதலும், சப்த ப்ரம்மத்தின் சமநிலையில் மொழிதல்கள் வைக்கப்படுதலும் என பல்வேறு ஏற்றங்கள் பிரதியில் உலாவுகின்றன போன்ற அர்த்த சாத்தியங்கள் அவ்விரிவின் மீச்சுருக்கமான விளக்கமாக இருக்கலாம்.

ஸ்தூல மறுப்பு பெற்ற சொற்கள் நிறுவனத்தின் எலும்புக்கூட்டை மட்டுமே அணிந்துகொண்டு நடைபாதையை அலங்கரிப்பது என்பது சாதாரண ஒன்றல்ல. புதினத்தின் அர்த்த பொருண்மைகளைவிட தனது வசன பூசண வாக்கியமொன்றில் பிரதியின்ஆசிரியர் இதனை நிகழ்த்தியிருக்கும் விதத்தையே மேலாக பாராட்டியிருக்கிறாள் நீலகேசி.

எலினாரின் கதையுலகில்; சோங்ஹாவின் பாடல்களில்;

தன் கண்களில் அதீத கருமை படர்ந்த பிறகே அவள் மெச்சத்தகுந்த பாடல்களைப் பாடினாள் என்று 'பன்சோரி' என்ற பாடல்களின் மூலம் கதை சொல்லும் கொரிய நாட்டுப்புறக் கலையை கேட்டறிந்த சமயத்தில் நீலகேசி சிறிய குறிப்பாக விட்டுச்சென்றதை சக விந்தின் துணையுடன் அறிதல்.. எலினாரின் கதை சொல்லல் முறைமையோடு ஒத்துப்போகின்றதாக நவீன விந்தின் வாசகங்கள் தெரிவிக்கின்றன.

சோங்ஹாவும் எலினாரும் ஒரே பிரதிமையின் இருவேறு பக்கங்கள். 'எலினாரின் வெண்ணந்தகம் - சோங்ஹாவின் கரும்பரப்பு' என்ற படிமம் வாழ்வின் நெடிய சாராம்சம் என்பதே நீலகேசியின் கருத்து. காமத்தை அதன் இடையூறை வலியுறுத்தி ஆகச்சிறந்த படைப்பொன்றை சாத்தியப்படுத்திவிட ஏங்கும் இரு கலைஞர்களின் நிறைவேறிய லட்சியம். ஆதலால்தான் எலினாரின் கதை பெரும்பரப்பில் பல தர்க்க சம்பாஷணைகளுடன் விளிம்பின் எளிய வாழ்வை விவரிக்கின்றது. ஆதலால்தான்  சோங்ஹாவின் பாடல்கள் பிரபஞ்ச லயத்தில் ஒன்றுகலக்கும் பிசிறற்ற பாடல்கள்;  பாமர வாழ்க்கையாய் வெளிப்படுகின்றது.

இயற்கையின், அரூப சிதைவின் துல்லியங்கள் இசைந்து வர காமம் துறந்த எலினாரும், சோங்ஹாவும் பிரதிஆசிரியரின் தூண்டுதலற்று வாசகனிடத்தில் வந்து சேருகிறார்கள்.

அனுபவம்/நிரூபணம் - உடல் - குறித்த உரையாடல்களில் முடிவுறும் தாண்டவராயன் சரித்திரம் எலினாரின் கதைகளுக்குள் உலவும் மனிதனின் தேடலின் வழியே சரித்திரத்தின்  ஆரம்பமான அபௌருஷேயமான நாட்டார் பாடலில் துவங்குகின்றது என்பதாக நீலகேசியின் கடைசி வசன பூஷண வரிகள் நமக்குச் சொல்கின்றன. ஏன் என்றுதான் கேட்பாரில்லை.

வனமோகினி - எலினார் - செல்லி -
நீலகேசியாகிய நீலகேசி வனதி-
சக விந்தணுக்கள்



ஆதியின் முகமையில்
வேருண்ட நிலம்
பதுங்குகுழியில்...

சருகு மரம் விதை
சுழற்சியில் யாவும்

அந்திம கால கருணையாய்
மனம்
ஓர் அரூப யுவதியை இம்மண்ணில்
ஜனித்து எடுக்கிறது...

(வசன பூசணம் நிறைவுப்பாடல்.)

---------------------------------------------

நா.வானமாமலை தொகுத்த கூத்துப்பாடல்களுள் காத்தவராயன் கூத்துப் பிரதி முக்கியமானது. அவர் அந்த  கூத்துப்பிரதியில் ஏற்கனவே உருவாகியிருக்கும் சில கருத்துப்பேதங்களை மறுதலிக்கிறார். வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கும் முன்னுரை ஒரு கூத்துப்பிரதியின் பிரதான செயல்பாடு எவ்வாறு அமையவேண்டும்; படைப்பின் நோக்கம் எதைக்குறித்தது போன்ற கேள்விகளுக்கு மறைமுகமான வழிமுறைகளைத் தாங்கியிருக்கும்.

சமூகக்குழுக்கள் தங்களுள் உருவான சாமானிய ஆளுமைகளின் வழிபாட்டு வடிவங்களைப் பிரதிபடுத்துகையில் கையாளவேண்டிய கவனத்தை நா.வானமாமலையின் இக்குறிப்பிட்ட கூத்துப் பாடல் தெளிவாக்குகின்றது.

இதை மையப்படுத்தி தாண்டவராயன் கூத்தினை அணுகும்போது நா.வானமாமலையின் கூத்து குறித்த சிந்தனைகளோடு ஒன்றிப்போகிறதெனலாம்.

கோணய்யன் மறைவும், உடற்பாகங்களால் ஊர்களை எரிக்கும் கதைப்பாடல் பகுதியும் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கூத்துப்பாடலும் புனைவின் நிழலோடு நாட்டார் மொழியை மெருகேற்றிய விதத்தில் ஆதார கூத்துப் பாடல்களைவிட தனித்திருக்கச் செய்ய, சுவிசேஷ வசனங்களின் இணைப்பு கதைப் பகுதியின் உபவிளக்கமாய் தொடர்ந்து வர, 'மேலோட்ட விவரணப்படி' எலினாரின் கண் நோய்க்கான மருந்தினை தேடி அடைவதை சிக்கலில்லாமல் விலக்கி வைக்கும் உயிரோட்டம் 'புதின - நாட்டார்' மொழியும், சிந்தனை சக்தியும்.

இதை வெளிப்படையாக இல்லையென்றாலும்  நண்பர்களிடத்தில் பேச்சுப்போக்கிலாவது ஒப்புக்கொண்டே தீர வேண்டும்.

தமிழில் அத்தகைய முதிர்ச்சியான நிலை இந்நாள் வரை உருவாகவில்லை.

(தாண்டவராயன் சரிதத்தை புதிய பிரதியென்றே உச்சரிக்கும் நீலகேசியின் "சொற்களற்ற நூல்" அல்லது அவள் தன் இறுதி காலத்தில் அவசர அவசரமாக எழுதிய "வசன பூசண வாக்கிய கதை" என்ற வெளிவராத புத்தகத்தின் சில பகுதிகளிலிருந்து)

இந்த ஜீவன், சக விந்தணு நீலகேசியின் "வசன பூசண வாக்கிய கதை" - யின் மீத பகுதியின் தேடலில்...

Sunday, July 23, 2023

புனைகதையுருவாக்கம்

முதலில் காட்சியுரு செய்த ஒன்றை மொழியின் வடிவில் பார்ப்பது ஒருவகைப்பாடு. 

மொழியை மட்டுமே பிரக்ஞையாக வைத்து எழுதுவது மற்றொரு வகை.

சொல்ல வந்ததை சாதாரண மொழிக்குள் வைத்துவிட்டு ஆங்காங்கே அசாத்திய தருணங்கள் தன்னியல்பாக உருவாகி வருவது இன்னுமொரு வகை.

புதுமையான சொல்முறை உத்தியில் கதைகளாக்குவது, தன்னனுபவ கதைசொல்லல், மேட்டிமை வெளிப்பாட்டு புனைவெழுத்து, வாசிப்பின் தாக்கங்களில் பிரதிபலித்தலாக அல்லாமல் முழுமையாகவே போலச்செய்தல் முறை, நூலாக்க/ எழுத்தாள பிம்ப ஏக்கத்தோடு ஆர்வமிகுதியில் எழுதப்படும் படைப்பு என அனைத்து சிந்தனை நோக்கோடு எழுதப்படும் படைப்புகளும் மேற்கூறிய ஏதேனுமொரு கூறுமுறையைப் பின்பற்றி படைக்கப்படும். இதில் சில விடுபடல்களும் இருக்கலாம்.

நவீன தமிழ் இலக்கிய உலகில் பல படைப்புகளும் வாசிக்கப்படாமல் தாமதமாக கவனம் பெறுவதும், எழுதப்பட்ட ஆரம்ப நிலையிலேயே பரவலாக கவனம் பெற வைக்க அனைத்து முயற்சிகளும் நடைபெறுவதுமாக இருவகை வாசிப்பியல்புகள் உள்ளன.

முழுமுற்றாக எழுத்தாளரின் எழுத்து நேர்மையால் உந்தப்பட்டு தீவிரமான கலையாக்கத்தைக் கொண்டாடுவதும், நட்புவட்ட எழுத்தின் மீது விமர்சனமற்ற பார்வையோடு அணுகுவதும், போற்றுதல் மூலம் தன்னெழுத்தை முன்னிறுத்த முனைவதுமாக படைப்பைக் கொண்டு சேர்ப்பதில் பலவகைகள்..



கூட்டு நனவலி அச்சம்

அநேக துர்நிகழ்வுகளின் கூட்டு நனவிலி உளவியல் நுட்பமான பயத்தை விநோத வடிவில் கொண்டுள்ளது.

 எல்லா நேரங்களிலும் அதிகாரத்தின் வட்டத்துக்குள் மிகவும் வசதியாகவும் அனைத்து விதங்களிலும் சிறப்பாகவே இருப்பர். இத்தகைய வாழ்வியலில் வெறுப்புணர்வின் வழி உருவான பயம், அழித்தொழிப்பை கண்மூடித்தனமாக வரவேற்கும்.

பெரும்பாலான இனப்படுகொலைகள், சாதிய வன்கொடூரங்களின் காரணங்களுள் ஒன்றாக நனவிலி மனதிலுள்ள பயம் என்ற உளவியல் உள்ளது.

காலனியா? சேரிப்பகுதியா? வேற்று மதத்தவர் வசிக்கும் பகுதியா? அரசுக் குடியிருப்பா? இவ்விடங்களின் ஒவ்வாமை உருவாக இதே அச்சவுணர்வும் ஒரு காரணம்.

காலகாலமாக பழக்கப்பட்டு உருவாக்கப்பட்டதால் ஆழ்மனதில் சேகரிக்கப்பட்டு ஒவ்வாமையாகவும் , வெறுப்புணர்வாகவும் வெளிப்படுகிறது.

அதிலிருந்தே கருத்தியலும் கட்டமைக்கப்படுகிறது. 

அப்பட்டமாக வெளிப்படுவதைவிட,  பதியப்பட்டு ஒளிவுத்தன்மையோடு இருப்பதாலேயே நனவிலி அச்சம் ஒரே நேரத்தில் ஆபத்தானதாகவும், சிந்தனையின்மையோடும் செயல்படக்கூடியது. 

பல உதாரணங்கள் சொல்லலாம். சமீபத்திய மணிப்பூர் இனப்படுகொலைகள் நிகழ்வதில் நனவிலி அச்சம் பெரும்பங்கு வகிக்கிறது. 

 சட்டமுறைமையோடு கையாளப்படவேண்டிய நிலமும் அதன் உரிமையும் கலவரமாக வடிவம் பெற பாசிசம் உருவாக்கிய கூட்டு சமூக அச்சம் அசாதாரணமானது.

நீண்ட கால வரலாற்றில் அடிப்படைவாதம் உள்நுழைந்தால் இத்தகைய பேராபத்துகளே நிகழும்; என்றென்றைக்குமான உண்மை.

நனவிலி அச்சம் காரணிகளுள் ஒன்றுதான், தீவிர உரையாடலுக்குள் கொண்டுவரவேண்டியது. பார்ப்போம்....

Wednesday, July 19, 2023

யதார்த்தவாத கதையாடல்

புனைகதைகளை மாய யதார்த்தவாத,  பின்நவீனத்துவ கோட்பாடுகளாக அதன் பின்னணியிலிருந்து உரையாடல்களை விரிவாக்குவது ஒருபுறமிருக்க அதே படைப்புகளை யதார்த்த பரிமாணங்களுக்குள் கொண்டு வருவதும் பிழையல்ல. பா.வெங்கடேசனின் கதைத்தொகுப்புகள் கோட்பாட்டுவாதங்களுக்குள் விமர்சகனை எளிதாக சிக்க வைப்பதை அங்கொன்று இங்கொன்றாக எழுதப்படும் கட்டுரைகளின் மூலம் கிடைத்தாலும் படைப்புக்குள் நேராக, சூட்சும லாவகத்தோடு எழுதப்பட்டு வாசிக்கப்படும் யதார்த்தங்களை வாசிப்பின்போதே பிடிபட நேர்வதும், உருவாகிக்கொண்டிருக்கும் தருணங்களும் ஏராளமானது. பாகீரதியை அவரது உறவினர் வசைபாடி வீட்டிற்குள் சேர்க்காமல் துரத்திவிடுவார். உறங்காப்புளியோடு வெளியேறும் பாகீரதிக்கு வேறொரு காலத்தில் கனவுகளுக்குள் யதார்த்தம் படிந்து ஒருவித எதிரியக்கத்தை ஏற்படுத்திவிடும். பௌதீக இன்மையும் பாகீரதியின் இருப்பும் ஒரே யதார்த்த உலகில் நிகழும் இருவேறு மாயங்களாக இல்லாமல் காலப்பின்னியக்கமாகவும் வரலாற்றை நிகழ்த்திக்கொண்டிக்கும் தற்தருண யதார்த்தப் பிரக்ஞைக்குள் உலவும் மனிதர்களின் பிறழ்பட்ட நிகழ்வுகளாகவும் மாறிவிடுகிறது.
இங்கு மனிதர்கள் பிறழ்வதில்லை, அவர்களுடைய யதார்த்தங்கள் சிக்கலாகி பிறழ்ந்துவிடுகிறது. கனவாக ஒன்றை அனுபவிப்பவர்  முரண்களையே  யதாத்தங்களின் பெருமகிழ்ச்சியாக்கி ரசிக்கிறார். 


Monday, September 11, 2017

தமிழ் தேசியம் நிகழ்ந்த பின்னரும் சாதியமைப்பு இருக்கவே செய்யும். தற்போதைய சூழல் அப்பேற்பட்டது. மறுபக்கம், சாதியை ஒழித்தல் என்ற செயல்பாட்டு முறை நீண்ட காலநிலையைக் கொண்டது. நாளையோ இன்னொரு மூன்று மாதங்கள் கழித்தோ சாதி அழிந்துவிடாது. உலகம் பெருவெடிப்பிலிருந்து சிதறி உயிரியல் தன்மையுள்ள ஒரு புதிய கோளாக மாறியதைப் போல மிக நீண்ட தொடரியக்கத்தை தன்னிடையே கொண்டது. முழுமையாக முடிவுற ஓரிரு நூற்றாண்டுகளைக் கடக்க வேண்டியிருக்கும்.

காரணம், சாதியம் ஒற்றைப் படிநிலையான கருத்தியலல்ல. பல நுண் அலகுகளை தனக்குள்ளே சேர்த்துக் கொள்ளும் தன்மையுடையது என்பதால் மிகக் கடுமையாக எதிர்க்கப்படவேண்டிய ஒன்று. முதலாளியம், லிங்கமையவாதம், பேரினவாதம், நிலப்பிரபுத்துவம் போன்றவற்றை மேலும் வலுப்படுத்தக்கூடிய கருத்தியலாக சாதியம் தன்னை வெளிப்படுத்திக்கொள்கின்றது.

சாதியை ஒழிப்பதற்கான செயலூக்கம் வழிவகையாக/சுழலாக (மீள நிகழ்த்துதலின் வினை நகர்வு) சமூக உரையாடலின் பதிவுகளில் நினைவூட்டப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

அந்த நினைவுபடுத்துதலினூடே சாதி ஒழிப்பிற்கும், சாதிய உணர்வின் அழுத்தம் ஒன்றுமில்லாமல்போகவும் செய்யக்கூடிய சாத்தியங்கள் பிறக்கக்கூடும். சாதியதன்மையிலிருக்கக்கூடிய உளவியலில் சமூக உரையாடல்களில் நிகழும் ஒலிக்குறிகள் அதாவது சிந்தனைகளாக பண்பு மாற்றமடையக்கூடிய கருத்தியல்கள் (சாதியம் குறித்த உரையாடல்கள் / கருத்துப்பகிர்வுகள்) பதிவுறும்பொழுது முழுக்க முழுக்க அது சாதி ஒழிப்பைப் பற்றியவாறு நிகழுமாறு பார்த்துக்கொள்ளுதல் அவசியம்.

ஏனெனில், ஒலிக்குறிகளே நிகழ்நிலை சப்தங்களாக உருவாகி உரையாடல்களில் பதிவடையும். உரையாடல்கள் சம்பவங்களாக உருப்பெற வைக்கக்கூடிய கருத்தியல்களின் விதைப்பகுதி. இவ்விதைப்பகுதியில் நிகழும் நுண்மையான மாற்றமே படிநிலைகளாக இயங்கிவரும் அனைத்து சமூகங்களின் சிந்தனையாக்கத்தில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தும். 

அயோத்திதாசர், அம்பேத்கர் போன்ற சிந்தனையாளர்களாலும், சோ.தருமன், பூமணி போன்ற புனைவெழுத்தாளர்களாலும், டி.தருமராஜ், ஸ்டாலின் ராஜாங்கம் வரையிலான கட்டுரை எழுத்தாளர்களாலும் இத்தகைய ஒலிக்குறிகளே மேலும் மேலும் சமூக உரையாடல்களில் வெவ்வேறு காலகட்டங்களில் சேர்க்கப்படுகின்றது.  இதன் நீட்சியே ரஞ்சித்தும். 

மேலோட்டமாக இதை தலித் அரசியல் என்ற சொல்லாடலால் அழைக்கப்பட்டு வந்தாலும் கருத்தியல்களால் பிளவுறக்கூடிய மக்களின் நடுவில் சிந்தனை மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியங்களை இத்தகைய ஒலிக்குறிகள் ஏற்படுத்துகின்றன.

இதனூடாக தமிழ் தேசியத்தைப் புரிந்துகொள்ளுகையில் சாதியோடுகூடிய தேசியத்தையே அது முன்வைக்கிறதென்ற உணர்வு தோன்றுவதைத் தவிர்க்க முடிவதில்லை.
ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறக்கும் ஒவ்வொருவரின் பேராசையாக மாற்றப்பட்டுவிட்ட சாதி இந்துக்களிடமிருந்து வெளிப்படக்கூடிய தலித் அரசியல் ஒரு வகையில் நிகழாதபட்சத்தாலும் ஒவ்வொருமுறையும் அக்குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே பேசவேண்டிய கட்டாயத்தினாலும் தலித் அடையாளத்திலிருந்து விடுபடாமல் சமூகப்பிரச்சினைகளில் அதில் ஒன்றான சாதியத்தைப் பற்றியும் நினைவூட்டவேண்டியதாகிவிடுகிறது. 

இதன் பின்னணியில் சாதி ஒழிப்பு குறித்த தொடர்ந்த உளவியலியக்கமான மீள நிகழ்த்துதலின் வினை நகர்வு மட்டுமே செயல்படுகின்றது என்பது நுண்மையாக மறைந்துள்ள காரணம். இங்கு மீண்டும் பலமுறை வலியுறுத்தப்படும்போது அதற்கான குரல் ஓங்காதபட்சத்தில் எதிர்நிலை கருத்தியலால் சாதியம் எப்பொழுதும்போல தன் இருப்பை தக்கவைத்துக்கொள்ளும்.

ஆதலால், சாதியற்ற தமிழ் தேசியம் கடினமானது. அதிகபட்சம் கா.சிவத்தம்பி யாழ்ப்பாண சமூகத்தை ஆராய்ந்து அதன் சமூக அமைப்பிலுள்ளபடி கட்டுப்பாடுள்ள சாதிகள் (Bound Caste) , கட்டுப்பாடற்ற சாதிகள் (Unbound Caste) [யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் - பக்: 16] போன்ற ஒருவகை பிரிவு (Type)  வேண்டுமானாலும்  ஏற்படலாமே தவிர தமிழ் தேசியத்தால் சாதியத்தை ஒழிப்பதென்பது யதார்த்தமானதல்ல.

சாதி ஒழிப்பு சார்ந்த சிந்தனைப்போக்குகள் முதலில் சாதி இந்துக்களிடமிருந்தே உருவாக வேண்டும். அதுவே சாதி ஒழிப்பின் முதல் படியும், ஆக்கப்பூர்வமான நகர்வும். இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பட்ட சமூக அவநம்பிக்கைகளின் தொடர் உரையாடல்களில் சாதியத்தையும் இணைத்தே பேச வேண்டும். சமூகத்தில் இதன் பதிவுகள் கடத்தப்படும்பொழுதுதான் சாதியத்தை முழுமையாக தகர்த்தெறிய வாய்ப்பு ஏற்படும்.

அதற்கான நம்பிக்கை தற்போதுவரை  இல்லை என்பது பெரும்பாலானவர் அறிந்திராத ஒன்று.

Saturday, September 2, 2017

அதிகார மையத்துக்கு எதிரான தோல்வியால் நிகழும் தற்கொலைகளை அர்த்தப்படுத்திக்கொள்வதில் முதன்மையான சிக்கலாக "தனிமனித குணாதிசயம் சார்ந்ததாக வரையறுத்தல்" என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கமான கருத்து.

இவ்வழக்கப்பட்ட கருத்தை எதிர்ப்போரில் அனைத்து மாற்றுச் சிந்தனையாளரும் அதற்கு எதிரான பக்கத்தில் நின்றுகொண்டு "வழக்கமான" கருத்தை வெளிப்படுத்தியவரோடு வாதிடுவது பாரம்பரியப்பட்டதல்ல. புதுமையானது.

நூறாண்டுகளுக்கு முன்னர், தன்னை மாய்த்துக்கொள்ளும் ஒருவரின் மரணத்தைப் பற்றிய உரையாடல்களில் "வழக்கமான" சிந்தனை முறையின் விகிதமே மேலோங்கியிருந்தது. ஆனால் இன்று அதன் சாத்தியங்கள் நவீனப்பட்டு விரிவடைந்திருக்கின்றன.

தனிப்பட்ட குணாதிசயங்களை குறிப்பிடுவோரின் கருத்துப்படி மரணித்தவர் குற்றமிழைத்தவராக புரிந்துகொள்ளப்படுகிறார். தடைகளை மீறி வாழ்வதற்கு முயற்சிக்காமல் கோழையாகவும், பொறுப்பற்றும் தன்னைத் தானே கொலை செய்துகொள்வது என்பது முட்டாள்தனமானது என்றும் அனைத்தையும் தாண்டி வாழ்பவரே முதிர்ச்சியானவர், கல்வி பயின்றவர் என்பதும் இவர்களுடைய சிந்தனை வடிவம்.

தற்கொலைக்கான காரணம் எதுவாக இருந்தாலும் முதலும் முடிவுமாக பாதிப்படைந்தவரே குற்றவாளி என்ற விதத்தில் யோசிக்கும் பொதுமனம் இவர்களுடையது.

இதற்கு எதிர்ப்புறமுள்ள மாற்று சிந்தனைக்காரர்கள் தற்கொலைக்கான காரணம் சமூக அரசியல் தொடர்பாக இல்லாத பட்சத்திலும் வேறு எந்த தனிமனித காரணங்களிலும்கூட "வழக்கமான" கருத்தியலாளர்களின் சிந்தனைப் போக்கை ஏற்றுக்கொள்வதில்லை. 

அதாவது, ஒரு ஆண் அல்லது பெண் காதல் தோல்வி/கடன் தொல்லை/மானபங்கம்/இழிவுபடுத்துதல் போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொண்டாலும், தற்கொலை செய்துகொண்டவரையே குற்றவாளியாகப் பார்ப்பதில்லை. அதற்குப் பதிலாக துயரத்திலும் அதற்கான ஆறுதலிலும் பங்குகொள்கின்றது.

தற்கொலை சம்பவம் ஒரு சமூக அரசியல் பின்னணியில் நிகழும் பட்சத்தில் "வழக்கமான" சிந்தனைப்படி தற்கொலையாளனே குற்றவாளி என்பதை தீவிரமாக எதிர்ப்பதோடு தற்கொலைக்கான உண்மையான காரணங்களாக விளங்கும் அரசு இயந்திரம் அதனோடு சேர்ந்தியங்கும் முதலாளியம், சாதியம், நிலப்பிரபுத்துவம், உலகமயமாக்கம் போன்ற கருத்தியல்களை மிகவும் பலமாக எதிர்க்கின்றது.

சமூக-அரசியல் பின்னணியில் நிகழும் தற்கொலைச் சம்பவங்கள் பெரும்பாலும் மாற்றியமைக்கப்பட்ட கொலை என்பதே மாற்று சிந்தனையாளர்களின் ஆழமான நம்பிக்கை. மிகவும் சரியான நம்பிக்கையும் கூட. 

அனிதாவின்  இறப்பிற்கு முன்பிருந்து தற்கொலை வரை தற்கொலையின் இயக்கத்தை கீழுள்ளவாறு சொல்லிப்பார்க்கலாம்.

அனிதா --> உயிர்நிலை இயக்கம் 

மருத்துவர் --> பண்பாட்டு மேலாண்மை நிலை 

நீட் --> முதலாளிய அலகு

தற்கொலை --> உச்சபட்ச எதிர்ப்பு

உச்சபட்ச எதிர்ப்பின் முடுக்கம் --> அதிகார மையம்

இந்த தொடரியலில் அனிதாவின் ஒரே கனவாக இருந்த மருத்துவர் பட்டம் அதிகார மையத்தால் மறுக்கப்படுகிறது. மருத்துவர் என்ற பட்டத்தை அனிதாவின் கண்ணோட்டத்திலிருந்து வெறும் பொருளாதார மூலமாக (Economical source)  மட்டுமே பார்க்க முடிவதில்லை. தன்னைச் சூழ்ந்திருக்கும் தன்னோடு சேர்ந்த சனங்களின் பண்பாட்டு உயர்வாகவே இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

முதலாளிய அலகுகளின் உலகளாவிய பண்பு உயிர்நிலை இயக்கங்களை கட்டுக்குள் வைத்துக்கொள்வதும் அபகரிப்பதுமேயாகும். இதை செயல்படுத்த மத்திய/மாநில அரசுகளின் தொடர்பு தேவைப்படுகிறது. 

காடு, மலை, ஏரி, கடல், நதி, நிலம், மனிதன் போன்ற உயிர்நிலை இயக்கங்கள் எப்பொழுதும் முதலாளியத்தின் கட்டுக்கோப்பிற்குள் இருக்க வேண்டும் என்பதே அனைத்து அரசுகளின் ஒரே கடமை.

ஆகவே, முதலாளியத்திற்கு எதிராக போராடிய உயிர்நிலையை ஒடுக்கும்பொழுது முதலாளியத்திற்கு வெற்றி கிடைக்கின்றது. 

இங்கு நீட் என்ற அலகு தன்னை எதிர்க்கவரும் உயிரியக்கத்தைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். இதனை இயக்கும் மத்திய அரசு முதலாளிய வன்முறையாக அனிதாவை படுகொலை செய்து தனது தடையின் முதல் சிறுகல்லை தூக்கி எறிகின்றது. அனிதாவின் பக்கத்திலிருந்து வெளிப்படும் உச்சபட்ச எதிர்ப்பாக உயிரியக்கத்தின் தொடர்நிலை முடிவுறுகின்றது. இதற்கான தூண்டுதல் அதிகார மையத்திலிருந்து அனிதாவிற்கு கடத்தப்படுகின்றது.

மேலும் தொடர்ந்த ஆய்வியல் தரவுகளிலிருந்து கண்டுகொள்ளப்படவேண்டிய துல்லியமான காரணங்களை,  பொதுமனம் எளிதாக தற்கொலை செய்துகொண்டவரின் மீதே அனைத்து பழிகளையும் சுமத்துவதால் ஏற்படும் சிக்கல்கள் இரண்டு.

சமூக காரணங்களினால் தற்கொலை செய்துகொள்பவர்களை குறைகூறுபவர்களின் சிந்தனை வடிவத்தில் சாதியம்/முதலாளியம்/அதிகார பண்பு போன்றவையும் ஒன்றிணைந்திருப்பதினால்தான் பொதுமனத்தின் கருத்தினை எதிர்க்க நேரிடுகின்றது என்ற மாற்று மனத்தின் கருத்தியலை அறியாமல் இருப்பது முதல் சிக்கல்.

அதாவது அனிதாவின் தற்கொலையில் முதலாளியமும், அரசதிகாரமும், சாதியமும் நீட் என்ற வடிவில் தொடர்பில் இருந்து வந்திருப்பதால் அவருடைய மரணத்தில் அவரையே குற்றம் சாற்றுபவரும் அரசின், சாதியத்தின், முதலாளித்துவத்தின், நிலப்பிரபுத்துவத்தின் ஆதரவாளர்களாக மாறிவிடுகிறார்கள் என்ற உண்மையை உணராது போவது.

இரண்டாவதாக, அவர்களுடைய அறியாமையை அப்பாவித்தனம் என்று ஏற்றுக்கொண்டு விலக முடியாமல் போகும்  மாற்று மனத்தின் தவிப்பு. 

வழக்கமான மன அமைப்பு காலவெளியில் கலை இயக்கங்கள் சமூகங்களோடு தொடர்புகொள்ளும் விகிதாச்சாரம் உயரும்பொழுது தன்னை திருத்திக்கொள்ளும் என்பது என் நம்பிக்கை.

Sunday, June 4, 2017

வே.நி.சூர்யா, வெங்கட் (நிழல்), திரு (சீனுலதா) - கவிதைகள்

"சில சமயங்களில் புதியவர்கள் எழுதும் கவிதைகள் தொகுப்பாக வெளிவந்த கவிதைகளை விட சிறப்பாக அமைந்துவிடுகின்றன. அப்படிப்பட்டவற்றை மாபெரும் கவிதை சந்தையிலிருந்து அடையாளம் காண்பதென்பது அரியதொரு செயல்"

1)  வே.நி.சூர்யா 

இருப்பிற்கும், இன்மைக்கும் இடைப்பட்ட வெளியை பரிசோதிக்கும் முயற்சிகளும், சமூகத்தின் ஒற்றைச் சாய்வு முறைமையின் மறுபக்கத்திற்கான சொற்களும் கவிதைகளாக மாறும் சமயம் நினைவிருத்த வேண்டிய பகுதிகளின் பயிற்சியே சூர்யாவின் கவிதைகள். 

மாறாமலிருக்கும் இவ்வுலக சௌந்தர்யரத்தின் மேலான சொத்தை அடியாக சில கவிதைகள் தேங்கி நிற்கின்றன என்பதே மேலும் சிறிது காலம் கழித்து எழுதப்பட வேண்டிய கவிதைகள் அவையென்பதை வாசகனுக்கு உணர்த்துவதோடு எந்த குறையையும் தன்னுள் கொள்ளவில்லை. 

சூர்யாவின் கவிதைகள் அவர் வரிகளுக்கு மாற்றாக காலங்களில் பேசப்படலாம். 

http://suryavn.blogspot.in/

வறுமை ஒழிக்க ஒரே வழி
------------------------------------------
நாமெல்லாம் இன்னொருவரின் கற்பனையாக இருக்கலாம்
அப்படி இருந்தோம் எனில்
அந்த இன்னொருவர் இன்னொருவரின் கற்பனையாய் இருக்கலாம்
இது தொடர்வரிசை.
முடிந்தால் ஒன்று செய்யவோம்
என்னை உங்கள் கற்பனையில் பயன்படுத்த பணம் என்று அந்த இன்னொருவரிடம் இருந்து வசூலிப்போம்
இப்படியாவது இந்த முதலாளித்துவ உலகில் பணக்காரன் ஆகிவிடுவோம். 

***

பிளந்தாயிற்று
----------------------

புலம்பிகொண்டே இருக்கும்
நாக்கை அறுத்தாயிற்று 
கிறுக்கிக்கொண்டே இருக்கும்
கையை அறுத்தாயிற்று
நடந்து கொண்டே இருக்கும்
காலை வெட்டியாயிற்று
மூச்சு விட்டு கொண்டே இருக்கும்
இதயத்தை பிளந்தாயிற்று.
அமைதியாகவே இருக்கும் மீதியை
என்ன செய்வதென்றே தெரியவில்லை

***

கடிகாரம் சொன்ன கதை 
--------------------------------------

புதியதாக கட்டிய வீடு
வீட்டின் சுவர் எல்லாம் கடந்த காலம்
வீட்டின் சன்னல் எல்லாம் எதிர்காலம்
வீட்டின் உள்ளே எல்லாம் நிகழ்காலம்
வெளியில் இருந்து பார்த்தால் வீடு
கண்ணுக்கு தெரியாது
அந்த இடத்தில் அடையாளத்திற்கு
வேப்பமரம் நட்டுவைத்து திரும்பி பார்த்தேன்
பயங்கரமான மரமாக வளர்ந்திருந்தது
யாரை பொறுத்த வரைக்கும் அங்கு வீடு இல்லை
ஆனால் என் கடிகாரத்திடம் கேட்டால் சொல்லும் டிக் டிக் என திகிலுட்டிக்கொண்டே அந்த வீடு கட்டப்பட்ட கதையை
தேர்ந்த கதைசொல்லி என் கடிகாரம்
ஆம்
உன் கடிகாரமும்
உன் கடிகாரத்தை கொடு
என்ன கதை என கேட்போம்
வா நண்பா

***

2) வெங்கட் (நிழல்)

முழுமையாக அழகியலின் பாற்பட்டு அதன்மேல் தீராத நம்பிக்கையுள்ள ஒருவரின் கவிதைகள் இவை. முதல் ஒலியில் கரையும் இசை, பார்த்த பொழுதில் நிகழும் இராசாயன இரகசியம், அதீதமில்லா கவர்ச்சி என்பதே வெங்கட் கவிதைகளின் அடிப்படை. அதில் கவிஞனின் ஆன்மா செயலுறும் பாங்கு இயற்கையோடு தோய்ந்த வரிகளை மீட்டெடுக்கின்றன.

தானாக சுலபமற்று நிகழும் அரிய தருணங்களின் காட்சிப் பிரதிகளாய் இருக்கின்றன இவரது கவிதைகள்.  அழகான இசை, ஓவியம், இயற்கையின் நிச்சயமில்லா காட்சிப்புலன்கள் என்பதோடு குழந்தைகளை ஒத்த வாழ்வோடு எழுதப்படும் கவிதைகளோடு இன்னமும் சில புதிய குரல்களை வரவழைப்பது ஒன்றே வெங்கட் அவருடைய கவிதைகளின் பூரணத்தை நிறைவுபடுத்தக்கூடிய வழியாக இருக்கும்.

குழந்தைகளோடு ஒருமித்து வாழும் படைப்பாளிக்கு, குழந்தைகளுக்கும் கவிதைகளுக்கும் இடைப்பட்ட வேற்றுமையை அளவிடுவது அத்தனை சுலபமல்ல. 

http://sollinnizhal.blogspot.in/

கார்கால நிறத்து ஆகாயத்திற்கருகில்
விருட்சமொன்று
ஒரு நுறு பட்சிகளை அணைத்தபடி
மிதக்கிறது.
நின்ற கணத்திலிருந்து அசைந்த கணம்
திசையெங்கும் சிதறுகிறது மரத்தின் நிழல்.
என் இருதயத்தின் தொலைதூரத்து
சொற்களெல்லாம்
கூடுகட்டத் திரும்புகிறது
படபடத்து இப்போது.

*** 
எந்த அறிகுறியுமற்று
ஏதோவொன்றாக விடிந்துவிடுகிறது 
சில பொழுது. 
இசையாக
காற்றில் மிதந்து செல்கிறது உடல் 
இலேசாகவும் கனமாகவும் இல்லாது. 
ஒரு சிக்னல் தேவைப்படுகிறது,
அந்த நிறுத்தத்தில் 
அருகிலொரு வாகனம் தேவைப்படுகிறது, 
அதில் ஒரு சின்னஞ்சிறு சிறுமியின்
ஏதாவது இரண்டு சொல் தேவைப்படுகிறது 
இந்த நாளை அநாதையாக்காமல்  
தொட்டுத்தூக்க.

***

மேசைமேல் நின்று
படபடக்கும் புத்தகத்தை
இந்தப்பக்கமிருந்தும் அந்தப்பக்கமிருந்துமாக
இருவர் வாசிக்கிறார்கள்.
ஒரே கணத்தில் ஒரே சொல்லை
இருவரும் சொல்லும் பொழுது
கவிதை மறைந்து
புத்தகம் தொலைந்து
கண்ணாடியாகிறார்கள்
இவனுக்கு அவனும்
அவனுக்கு இவனும்.

***

ஹிட்லர்
பழைய தூரிகைப் பெட்டிக்குள்
பிரியம் நிறைத்து ஒரு துப்பாக்கி வைத்திருந்தார்.
நாள் தவறாமல்
அந்தத் துப்பாக்கியை இதமாகத் துடைத்துவிடுவார்.
வைக்கும் நொடிக்குமுன்
யாரும் கண்டுவிடாதபடி கண்களை சுழற்றிவிட்டு
அன்பொழுக அழுத்தி முத்தமிடுவார்.
ஸ்பரிசம் கிட்டாத ஏக்கத்தில்
கண்ணாடி சன்னல் வழியே
எச்சில் ஒழுக்கிக்கொண்டிருக்கும் வளர்ப்பு நாய்கள்.
ஈரக்காற்றாலான தருணம் ஒன்று
எங்கிருந்தோ பீடிக்க
சிலநேரம் மிரண்டு
திசைகாணாது தூக்கி எறிவார்.
அவரது செல்லமான நாய்க்குட்டிகளோ
இளைப்பெடுக்க பற்றிவரும்
அவருக்கு நேராகத் துள்ளிக்கொண்டு.
தோட்டாக்கள் இழகும் காலமொன்றில்
தூரிகையால் அழுத்திக்குழைத்து
தன்உடலில் துப்பாக்கியை வரைந்துவிட்டு
உறங்கப்போனார்.

***


3) திரு (சீனுலதா)


திரு சுவாரசியமான கவிஞர். புதுமை, மாற்று சொல்லாடல், ஒரே நிறத்தை வேறொரு வடிவில் கவிதையாக்கல் போன்ற முயற்சிகளை முதிர்ச்சியோடு வெளிப்படுத்துபவர். 

சமூக அவலங்களையும், வன்மமிக்க அரசியல் நெறிகளின் தூய தர்மங்களையும் பகடி செய்யும் கவிதைகள் மறுபக்கம் ஆண்Xபெண் உறவு மையத்தின் இணைக்க முடியாத சரடுகளை தீராத அன்பின் எளிய வழிகளில் முன்னிறுத்தும் கவிதைகளும் எழுதப்பட்டிருக்கின்றன.

தத்ரூபற்ற தன்மைகளால் நிறையும் முக்கியமான கவிதைகள் செம்மையைக் கோரும் தருணங்களை வாசகன் கடப்பது தவிர்க்கவியலாத ஒன்றாகிவிடுவது முதிர்ச்சியின் பலமின்மையில் விழும் ஓட்டை சரிபாதி கவிதைகளே சமன் செய்கின்றன.

யோசித்து, பொறுமையாக செயல்படும் திருவின் கவிதைகள் தொகுப்பாக வெளிவரும் காலத்தில் அவை தனித்து நிற்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.


என்ன வண்ணமோ மனசுல....
------------------------------------------------------


இப்பெருநகரத்தின் நெரிசலான நடைபாதையில்
அமர்ந்தபடி குரலெடுத்தால்
ஒரே பாடல், குமிழ்களாய் மோதி
வர்ணங்களாய் உடைந்தொழுகுகிறது
வானத்துக் கருமை
கால்களிலிருந்து சொட்டியபோது
நட்சத்திரங்களை போல் மின்னி மறைவுற்றார்கள்
மாம்பூ வர்ணத்தின் இளகிய தசை
புளித்த இனிப்பை கண்களுக்கு வழங்கிச்சென்றது
களிநடை பயின்ற கத்திரிப்பூ வர்ணத்திற்க்கும்
கணுக்காலில் சிவந்தொழுகும் செம்பருத்திப்பூ தருணத்திற்க்கும்
கொலுசு செய்து தோற்றுப்போவதில்
என் பாடல்கள் முனைப்புகாட்டுகின்றன
பாதசாரிப் பெண்டீர்களின்
வனப்பான கால்களும் வண்ணவண்ணக் கால்சாராய்களும்
கண்களைப் பறிக்கும் பொழுதுகளில் – என்னையறியாமல்
ஒரு அபஸ்வரத்தை மீட்டித்தொலைக்கின்றேன்
இந்நகரத்தின் எல்லா நடைபாதையிலும் அமர்ந்தாயிற்று
நெஞ்சிலெழும் அப்பாடலைச் சொல்லி எந்த குற்றமுமில்லை
அது என் குருட்டு மனைவிக்கு பிடித்தமான பாடல்
எனக்கும் அவளுக்குமான அந்தரங்க பொழுதுகள்
வர்ணங்களின் விநாடிமுள்ளில் துடித்துக்கொண்டிருப்பதாக
நம்பிக்கை கொண்ட ஒரு நாளில்
பழுப்புநிற பஞ்சுப்பொதி காலொன்று
பேரிரைச்சலின் கூட்டிசைப்பாக
அபஸ்வரத்தை மீட்டித்தொலைத்தது
அதிர்நடையிட்ட செம்பழுப்புத் தொடைச்சதைகள்
பிரியாணிப் பொட்டலமாய் உதிர்ந்து விழுந்தபோது
வறண்ட தொண்டையும் இருண்ட கண்களுமாய்
நான் ஒரு லெக்பீஸை கடித்து முடித்திருந்தேன்
துடித்தடங்கிய பழுப்பு வர்ணம்
மனைவியின் பொட்டைக் கண்களை நினைவூட்டியபோது
ஒவ்வாமையின் காரம் கண்ணீராக வழிந்தூறியது
கறிச்சதைகள் நீக்கம் பெற்ற லெக்பீஸ்துண்டு
என் போலியோ கால்களை அப்பட்டமாக நினைவூட்டியபோது
கசிந்துகொண்டிருந்த இசையின் நாண்புடை படீரென அறுப்பட்டது

***

உனக்கும் எனக்குமான வெற்றிடத்தில்
ஒரு உறவை கட்டியெழுப்பியாக வேண்டும்
வெற்றிடத்தை வெளிப்பூச்சுக்கொண்டு மறைக்கும் கலையை
உன் பாணியில் நீயும் என் பாணியில் நானும்
மற்றெல்லோரைப் போலவும் கற்றுத் தேர்ந்திருந்தோம்
காற்று புகாத வெற்றிடத்தில் நீரையும் நெருப்பையும்
நாம் சமைத்தாக வேண்டும்
சீரில்லாத அலைவரிசையில் இருவரின் கைகளும் துழாவி ஒய்ந்தன
இன்னதென்றில்லாத ஒழுங்கில் உறவு எழும்பினாலும்
வடிவங்கள் குலைவது வெற்றிடத்தின் இயல்பு
குணவதியே
என்னிடம் ஆணி இருக்கும்
உன்னிடம் அன்பு இருக்கும் தானே
குலைந்த சட்டகத்தில் இடம் பார்த்து ஆணியை வைக்கிறேன்
அன்பு கொண்டு ஓங்கி அறை
ஆணிக்கூர்மையின் மினுப்பு ஆழமாய் இறங்கட்டும்.

***

உன் கரங்களை இறுக பற்றிக்கொள்கிறேன்
நம்மை சுற்றிலும் இருள் படர்ந்தாகிவிட்டது
இனி செய்வதற்கு ஒன்றுமில்லை
நாம் எடுத்துவைக்கும் அடுத்த அடி இழுத்துக் கொள்ளும் அதல பாதாளமோ
புதைச்சுழியின் பெருமணலோ
யாரறிவார்
உன் கரங்களை இறுக பற்றிக்கொள்கிறேன்
இவ்வுலகில் யாருக்கும் யாரும் துணையில்லாத போதும்
பாசாங்கு செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம் -உன்
கரங்களை இறுக பற்றிக்கொள்கிறேன்
நடுங்கும் என் விரலுக்கு
மெலிதான முத்தம் போதுமானதாக இல்லை – ஆயுள் ரேகையென
மூச்சுக் காற்றை கைகளுக்கு நடுவில் பதித்துவை – உன்
கரங்களை இறுக பற்றிக்கொள்கிறேன்

***

முசலுக்குட்டி நஸ்ரியா மூஞ்சூறு அஞ்சலி

---------------------------------------------------------------------

என் அறைகளில் வலுக்கட்டயாமாக புகுந்துகொண்ட
மூஞ்சூறுவை வெளியேற்ற முடியாமல்
தோற்றப்போது அது பழிப்புகாட்டிச் சென்றது
இடுக்குகளிலிருந்து சின்னஞ்சிறிய தலையை
எட்டிக்காட்டி தன்கூம்பு வாயை குவிக்கும்போது
அறையை முழுவதுமாக வியாபிக்கிறது
நாவை ஒழுங்குசெய்து இடதுகண்ணை சிமிட்டும்
இமை உரசலில் தீ அறையில் பரவி தகிக்கிறது
பசித்திருக்கும் தனிமையை அது சாப்பிட்டபோது
அறையை பகிர்ந்துகொள்ள முசலுக்குட்டி ஒன்று
வம்படியாய் வந்துவிட்டது
பசிதாங்காத நானும் முசலுக்குட்டியும்
சுடச்சுடப் பாலை காய்ச்சிப் பருகினோம்
முசலுக்குட்டி பாலின் வெப்பம்தாளாமல் சாம்பல் ஆனது
சாம்பலிலிருந்து வெளியேறிய மூஞ்சூறுவின் வெப்பமூச்சு
பாலை மீண்டும் சூடாக்கிப் முசலுக்குட்டியை வெளியேதள்ளியது
மாறிமாறிப் பசியாறிய இச்சங்கிலித்தொடர் மயக்கத்தில்
சாம்பல்வடிவ மூஞ்சுறுவை
முசலுக்குட்டி என அழைத்துவிட்டேன்
தன் உடலை மாற்றியதற்காக முசலுக்குட்டி
அறையில் இருந்து கோவித்துக்கொண்டு வெளியேறியது.
பின் ஒருநாள் மூஞ்சூறுவும் அறைபிடிக்காமல்
வெறுத்துப்போய் தானாக வெளியேறிவிட்டது
தகிக்கும் சாம்பலும் அதில் காய்ந்துகொண்டிருக்கும் பாலும்
குறும்பு கொப்பளிக்கும் கண்களும் மட்டும்
அறையில் மிச்சம் இருக்கிறது.
அத்தை பொண்ணு ஆண்ட்ரியா…
தொண்டையில் கூழாங்கற்களை அதக்கியிருக்கும்
என் அத்தை பெண்ணின் குரல்
அடைத்துக் கொண்டு வரும்
செப்புக்குழல் மின்சாரமென பாயும்
ஆகப்பெரிய கலகக்குரலில் அவள்
மாமாக்களின் டவுசரை
அவிழ்த்து சீட்டியடிப்பாள்
டவுசரை பிடித்தபடி
அலறிக்கொண்டு ஓடும் மாமாக்களை
சில சமயம் மஞ்சுவிரட்வது போல்
ஆராவரத்துடனும்
சில சமயம் மஞ்சத்தண்ணீர் ஊற்றுவதுபோல்
ஆசையுடனும்
அவள் குரல் விரட்டித் துரத்தும்
மத்யம சஞ்சாரத்தில்
‘மா’ ‘மா’ என விதவிதமாக
ஆலாபித்து அழைக்கும் அத்தைமகள்
ஓரிடத்தில் பெருங்குரலெடுத்து
மாம்ம்மா என அழுத்தம் கொடுத்து
விரட்டி விளையாடுவாள்
கெளுத்தி முள்ளின் அழுத்தமென
கண்களில் நீர் விட்டு
உச்சம் தொடும் அவ்விடம்
வெறும் குரல் மட்டுமல்ல
என் சக மாமா பயல்களே…
ஐட்டம் சாங் எனும் பிரேதப் பாடல்:
கால்களின் குதியாட்டத்தில்
பிரேதங்களை தனித்தனியாக
பிரித்து கண்களுக்கு
பரிசோதிக்கத் தரும் அவள்
இன்று தன்இடையை
உடலோடு சேர்த்து அந்தரத்தில்
கால் உயர்த்தி ஆடுகிறாள்
இரத்தம் சொட்டும் உதட்டுச்சாயத்தில்
மையிட்டொழுகிய கண்களை வெளியிட்டு
தன் அகாலத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறாள்
காதலியொருவள்:
எனதன்பு காதலியொருவள்
குருவி போன்ற அடக்கமான நீள்வட்ட முகத்தில்
ரேவதியின் சாயலில் சிரிப்பாள்
எனதன்பு காதலியொருவள்
கண்ணாடியணிவித்த மாதவியின் சாயலில்
நெடுநெடுவென தோகை விரிப்பால்
எனதன்பு காதலியொருவள்
வெள்ளை நிறச் சரிகாவென
வட்டமுகச் சாயலில் மூக்கை சிணுக்குவாள்
எனதன்பு காதலியொருவள்
மெலிதாகத் துருத்தும்
அஞ்சலித் தொப்பையில்
சாயலைக் கூட்டுவாள்

எவ்விதச்சாயலும் கலக்காத
தனித்துவ நடிகனாக
அவர்களின் முன்னே
நடிக்க முயன்றுகொண்டிருக்கும் என்னிடம்
பேரன்பும் பெருமழகும் கொண்ட
அனைத்துக் காதலிகளும் ஒற்றைச்சாயலில்
ஒருங்கே இணைகிறார்கள்
உலக நடிகர்களின் வழக்கம் மாறாது
வசனம் மறந்து
கனாக் காலங்களில்
உறைந்து கொண்டிருக்கிறேன்.

எளிதன்றோ…
அஃதெனினும் இனிதன்றோ!
நடிகனாக இருப்பதைவிட
எப்போதும் தள்ளி நிற்கும்
ரசிகனாகவே இருப்பது.

சன்னி லியோனும் சமையல் சாமானும்…
--------------------------------------------------------------------

வறண்டு கிடக்கும் இப்பாலை பிரதேசத்தில்
சன்னி லியோன் சமைந்துகொண்டிருக்கிறாள்
சமைத்துக்கொள்ளும் முன்னமே தன்னை
பரிமாறிக்கொள்ளும் கலையரசி அவள்
நதியில் செல்லும் அன்னப்பட்சி போல்
கால்களை பின்னிப் பின்னி இப்பாலை நிலத்தில்
நீந்தியபடி சமைந்துகொண்டிருக்கிறாள்
சொருகும் அவள் கண்களிலிருந்து விரியும் உடல்
ஆலிவ் இலையை தூவும் பறவையின்
சிறகென அசைகிறது
தூவப்பெற்ற ஆலிவ் இலைகள்
பொய்க்கோப முனிவர்களின் சடாமுடியில்
எச்சமென வீழ்கிறது.
கொதிக்கும் அவள் பாலை உடம்பின்
தளும்பும் மணற்மேட்டின்
அந்தகார நிழலில் இளைப்பாறுகிறேன்
உருகிக் கசியும் அவளின் சமையல் மணத்தில்
புதைமணலையும் சுழிக்காற்றையும்
அவசர அவசரமாகக் கடந்து
சமைந்துகொண்டிருக்கும் அப்பரதேவதையின்
குடவரை கோயில் வாயிலில்
ஆதியந்தம் தொலைத்த அந்தர்யாமியாய்
பசிமறந்து தியானித்துக்கிடக்கிறேன்

***

 

 


Friday, February 24, 2017

இறந்தவர்களை அலங்கரிப்பவன் - மனித அன்பின் முற்றுப்பெறா வெளி


ஆகச் சுருக்கமாக குழந்தைகளாலும், இயற்கையாலும் ஆன கவிதைகள். வெள்ளந்தியும் மென்மையுமாய் சமூக சிதைவு/அசிதைவுகளின் பிரக்ஞையற்று நகரும் குழந்தைப் பருவத்தின் மேல் ஏவப்பட்ட இரக்கமற்ற துரோகத்தை இக்கவிதைகள் நமக்கு உணர்த்துகின்றன. 

........
பதிலீடு செய்வதைக் குறித்து 
நாம் 
இன்னம்கூட அதிகமாக 
பேசித் தொலைக்கலாம் 

என்ற சிறிய கோபத்தின் மூலம் இக்கவிதை மொத்த தொகுப்பையும் விவரித்துவிட எத்தனிக்கிறது. கவிதை எத்தனிக்கையில் தன் கால்களுக்கடியில் தெளித்து வீசப்பட்ட எண்ணைப் படலத்தின் மீது கால் பதிய முடியாமல் தவிக்கிறது. அது ஆட்டிசம் பாதித்த சிறுமியின் மேலுள்ள கருணை, அவள் நித்ய சிறுமியாய் நிலைக்க நிகழ்த்தும் "வேறு வழியற்ற" பிரார்த்தனையின் வடிவம். பிரார்த்தனையின் ஆதி சொற்கள் சிறுமியை மீட்டுவிட வேண்டி அல்ல; அதற்கப்பாற்பட்ட ஓர் வேண்டுகோள் மட்டுமே. அவ்வேண்டுகோளே சிறந்த விடுதலையாகவும்..

கவிதை செயலாற்றும் குழந்தைகளின் உலகமும் நிலையாமையை இருப்பாக பெற்றுள்ள இயற்கையும் தொகுப்பின் மூலப்பேசுபொருள்கள்.

இயற்கையின் மீதுள்ள பிரியத்தை கவிஞன் எப்போதும் கவிதை உருவாக்கும் ஓர் மனப்பிரதிமையிலிருந்தே கண்டுகொள்கிறான். ஓவியங்களும், புனைவுகளும் இன்னபிற கலைகளும் ஆக்கித்தரும் அனுபவத்தைவிட அதன் சப்தத்தை கேட்டுணர கவிதையே சௌகரியமானது என்பதாலோ  என்னவோ அவன் சூழலின் மேல் விடுக்கும் குரூரத்தை அறியாத ஓர் வழிப்போக்கனைக் கொண்டு அறிமுகம் செய்கிறான். அதற்காகவே புனைவின் நீண்ட வரலாற்றிலிருந்து ஒரு கொத்து இசங்களை உருவாமல் எளிய கதையாடலில் அதை உரைக்கிறான். 

சிறார்களே யதார்த்த மொழியின் வடிவங்கள். அப்பேற்பட்ட ஒன்றுமறியாத அம்மொழியின் மீதான நோய்க்கூறுகள்,  பிறழ்வுகள் போன்ற இயற்கைச் சிதைவுகளை இயற்கை X சிறார் உலகம் என்ற இருமையின் எதிர்வுகளாக்கி இக்கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. அவ்வகையில் கவிஞனுக்கே அறியாமல்  நிகழும் எதிர்வுகளின் தாக்கம் சூழலியலின் மேலுள்ள ஆக்கிரமிப்பு (உணவுச்சங்கிலி, புற(ம்) 400, ஒலி மீட்புப் பறவை, பார்வையாளன்,..) என்ற அருவ அறிவியல் தொகுப்பின் ஊடாக இயங்குவதாக நினைக்கிறேன்.

யதார்த்தத்தில் அர்த்தமற்ற ஒன்றை கவிதை ஒரு ஊமைச் செயலைப் போல அல்லது வெறும் பாவனை செய்தலாக பிரதியில் அமைத்து வைக்கிறது. குழந்தைகளின் இழப்பு வெறும் இழப்பல்ல; பேரழிவு என்பதும் பேரிழப்பு என்பதும் பிரதியின் செயல் வலியுறுத்தும் கருத்தின் பின்னணி. இந்த இழை பிரதியில் முரணியக்கத்தோடு நேரடியான, எதிர் கருத்துள்ள இரு மையங்களுடன் ஊடாடும்.

குழந்தை உலகின் நோய்மையும், இயற்கையின் சரிவும் நேரடியான சமூகவியல் படிமங்களேயானாலும், பிரதியின் செயல் என்ற இழை குற்றவுணர்வுகளற்ற இயற்கையின் மீதான தாக்குதலை வெளிப்படுத்துவதின் வாயிலாக அதற்கு நிகரான சிறார் உலகின் குறைபாடுகளை சமன் செய்வதாக உள்ளது. ஈடு செய்தல் அல்லது இணை செய்தல் என்பதன் மூலமாக கவிதை தன்னிறைவையும், திருப்தியையும் அடைவதாக எடுத்துக்கொள்ளலாம். 

அதாவது நிகழ்காலத்தில் மனிதனின் பறத்தல்வாழ்வியலோடு ஒத்திசைந்த பார்வை ஒருபுறமிருந்து எதிர்வின் நேர்கோட்டுத்தன்மையை பிரதிபலித்தால் மறுபக்கமிருந்து கடவுளின் வெற்றிடம், பிரார்த்தனையின் தோல்வி, இயற்கையின் மரணம் போன்ற பண்புநிலைகளோடு உயிர்பெற்ற அறிவியக்கம் குழந்தைகளின் பக்கமாய் நின்றுகொண்டு அவர்களை அரவணைத்து உலகத்தைக் கசக்கி எறியும் சிந்தனை நீரோட்டத்தைத் தாங்கியுள்ள பிரதியாகவும் வாசிக்கப்படும் வாய்ப்பு தற்செயலாகவே இத்தொகுப்பில் உருவாகியுள்ளது. ஒரு தராசைப்போல வடிவமைக்கப்பட்ட ஸ்தூலப் பிரதியிலிருந்து உருவாக்கப்படும் சூக்குமப் பிரதி.

இந்த ஒரே ஒரு தன்மையே இறந்தவர்களை அலங்கரிப்பவன் தொகுப்பின் கவிதைகளின் இரட்டைக் குழந்தைகளை வாசகனிடம் அறிமுகம் செய்து கையளிக்கின்றது. சிறார்களின் மேல் ஏவப்படும் வன்முறை, இயற்கையின் மேல் நிகழும் வன்முறை என்பவை முதலில் வெளிவந்த நேரடியான "அர்த்தவசதியுள்ள" ஸ்தூலக்குழந்தையாகவும் இரண்டும் சமதளத்தில் நிற்கும் சமயம் ஏதுமற்று தன் பருவத்தைக் கடந்திட நம்பியிருக்கும் பிஞ்சுக்கூட்டத்தை நோக்கி இயற்கையும் அதன் சகல காரணிகளும் பிரயோகிக்கும் வன்முறையின் மீதான பழிதீர்த்தல் மற்றுமொரு "அர்த்தசாத்தியமுள்ள" சூக்குமக்குழந்தையாகவும் உருப்பெறச் செய்துள்ள சூக்குமத்தின் பிரதியே இறந்தவர்களை அலங்கரிப்பவன் என்ற வார்த்தைகளின் அர்த்ததளமும் மனித அன்பின் முற்றுப்பெறா வெளியும்.  

Friday, February 10, 2017

இரண்டு பெண்கள்
இரண்டு மொழிகளில் பேசியபடி
நூறு நூறு
ரூபாய்களைக் கொடுக்கிறார்கள்
(அவர்களின் நிழல் அசைவுகள்
முத்தமிட்டுப் புணர்வது போல
தரையில் நெளிவதை அவன் கவனித்தான்)

நேரெதிரே
முதியவரின்
கிழட்டு கைத்தடி
மெல்ல அசைந்து மீன் வண்டியை
விட்டு நகர்கிறது

வெறுமையான மதியத்தின்
தெருவில்
நூறு ரூபாய் தாள்களோடு நிற்கும்
மீன் வியாபாரி
விருப்பமற்று வளர்த்த தாடிக்குள்
சில்லரையைத் தேடுகிறான்

சடலங்களைப் போல
வாய் பிளந்து கிடக்கும் மீன்களின்
மீதிருந்த
ஈக்களை விரட்டுகிறான்

சுவாசமற்ற
அதன்
வெறித்த கண்களில்
மழை மேகங்கள்
எவ்வொரு சலனமுமின்றி
படர்ந்து செல்கின்றன

#########################

என் மகளைப் 
புணர்வதற்கு ஒப்பானது
உன்னிடம்
என்
காதலைச் சொல்வது
என்பது

சொற்களின் குவியல்களில் 
ஒரு சொல்
ஒலிக்கும்
முன்
ரத்தம் சீற 
என் நாவறுத்து வீசுவேன்
எப்பொழுதும் போல
விடியவில்லை நேற்றைய
காலை
காகங்கள் கும்பலாக
கரைந்து
சூழ
வெட்டு ஓடுகளினின்று
ஊசிகளாய் இறங்கிய
மங்கலான வெளிச்சம்
துடைப்பமிடா அலைந்தோடும்
புள்ளித் துகள்களுள்
படரத் துடித்தன
அழைப்பு மணியின்
பித்தானுக்கு சுவர்க்கோழி
பதில் சொன்னது
இராசி பலன் சொல்லிகள்
தேவையற்றுப் போனார்கள்
நீண்டு வந்த இரயில்
வண்டியின் குரல் அடங்கிப்போயிருக்க
காலையில் அபூர்வமாய்
வரவுற்ற
பிச்சைக்காரன் மட்டும்
நிரந்தரமாக வீட்டுக்குள் தங்கிவிட்டான்
சிறுவர்கள்  கூட்டமாக முற்றத்திலிட்ட கோலத்தின் மேல்
பீய்ச்சி அடித்த
பெருநீரின் நாற்றம்
அகாலத்தின் கனவொன்றில்
வந்து போனது
என் நம்பிக்கை சரிதான் அங்கு
அவள் கோலமிழந்த காட்சியில்
ஒரு நடிகையைப் போலவே
இல்லை வழக்கம் போல்
இவன் விரல்கள் சூப்பிக்கொண்டு
தவழ்ந்துகொண்டிருந்தான்
புனித சிலுவை அணிந்து
கண்ணாடிப் பெட்டிக்குள் வாழும்
என் கண்களில் இலை முனை வழி சொட்டும் நீரென விழ ஆரம்பித்த
நேரத்தில்
பிச்சைக்காரன் கையளித்து
என்னை
அழைத்துச் செல்கிறான்
மீள இயலா கனவொன்றிற்கு

Tuesday, December 6, 2016

காற்றலையும்
பறவைகள்  ஈக்களென
நெளிந்து
இன்மையின் பிரதியை
வெண்படலக் கித்தானில்
ஓவியமாக்கின

அதன் விரிசல் கோடுகள்
உன்மத்தத்தின் பிடி தாங்கியவை
எட்டவியலாத காண்பதற்கரிய
தொலைவில்
தீட்டப்பட்டவை
வெளியில்
மிதக்கும்
அரூபக்குழைவு 

ஓவியத்தின் நீளும் உருவம்
மின்னலைக்குள்
பாய்ந்து நிலத்தில் விழும் காக்கையைக் கண்டது போல
மூதாதை மரத்தின்
இலைக்கூட்டங்களைப் 
பதற வைக்கிறது

ஆதி காலத்தின் சுழற்சியான 
அரூப ஓவியத்தில்
எங்கோ ஓரிடம்
கான்கிரீட் கோபுரத்தின்
அஸ்திவார நிழலின் பிசுபிசுப்பு
கருமையாய் படிவதைக் கண்ணுற்ற
வௌவால் குஞ்சு தன்
உடலைச் சிலுப்பி
இரவின் குருதியை எரியும் சிதை மேல்
பீய்ச்சி அடித்தது.

Thursday, December 1, 2016

வெள்ளி நிலா
வெள்ளிப் பால்சோறு
வெள்ளிக் கிண்ணம்
குழந்தைக்கு குளிர் ஜுரம்
வெள்ளி நிலா
வெள்ளிப் பால்சோற்றோடு
வெள்ளிக் கிண்ணத்தில்
சரணடைகிறது

****

நூருஜா
வயது 10
அவள்
ஊதிப் பரப்பிய நீர் முட்டைகளை
வண்ணாத்திப்பூச்சிகளுக்குப் பரிசளிக்கையில்
அவளுடைய பாத மேடுகள்
உதிர்ந்த பூக்களாய் ஈர மணலில்
விழுந்திருந்தன
அவள் நினைத்திராத கணப்பொழுதில்
உடைந்த நீர் முட்டைகளையும்
இழந்த பாத மேடுகளையும்
பற்றி
கூன் சரிந்த பாட்டியின் கதையொன்றில்

கேள்வியுற்றாள்

அதோ
நிம்மதியற்ற துண்டு மேகம்
வானப்பரப்பில்
சுழல்கின்றதே  
அதுவாகவும் இருக்கலாம்
அது மறைத்துப் பெய்த மழையாகவும் இருக்கலாம்

****

விபத்தில் காலிழந்த
ஆதிகேசனின் கடையில் இன்று
வியாபாரம் அபாரம்

பச்சை நிற சொகுசு பஸ்
கடையை அள்ளிப்போட்டுக்கொண்டு
சென்றது

பின்னால் தலை கலைந்து முகம் நிறைய
சாம்பல் பூசிய சிறுவன் கடைக்கு வந்தான்

தாகத்திற்காக
வைத்திருந்த போத்தலை பையனின் கைகளில்
திணித்தார் ஆதிகேசன்

அச்சாம்பல் பூசிய சிறுவன் தொடர்பில்லாமல்
ஆதிகேசனிடம்
போர்சூழ் உலகிலிருந்து புறப்பட்டு
நம்பிக்கைசூழ் உலகுக்குச் செல்லும் பஸ்ஸைப் பற்றி
வினவினான்

ஆதிகேசன் சற்றும் யோசிக்காமல் தன் கைத்தடியையும்
மூன்றுசக்கர வாகனத்தையும்
பெட்ரோல் ஊற்றிக்
கொழுத்தலானார்.

(உறங்கும் நொடிக்கு ஒரு நொடி முன் கனவில் வந்து இதை எழுதச் செய்த அலெப்போ நகர மக்களுக்காக)

Wednesday, November 30, 2016

சப்தங்கள்
மௌனத்தை அமௌனமாக்குகின்றன

சப்தங்கள்
அமௌனத்தை மௌனமாக்குகின்றன

****

நாட்களின் முடிவை
மரம் பிளக்கும் இடியோடு
முடித்தான்
ஒலியெழுப்பும் பலூன்களை
விற்பவன்

****

நீங்கள்
அவள்
அவள் வயிற்றிலிருக்கும் குழந்தை
நான்
நாமடங்கிய கிராமம்
கிராமங்களைப் போர்த்தியிருக்கும்
நகரம்
நகரங்களின் மேலுள்ள நாடு
பல நாடுகளைக் கொண்ட உலகம்
பல உலகங்களைக் கொண்ட பால் வெளி
பற்பல பால்வெளியை மூடியிருக்கும் பேரண்டம்
பேரண்டங்களைப் பற்றியிருக்கும் பிரபஞ்சம்
பிரபஞ்சம் போல் மற்றெல்லா பெரும் பெரும்
பிரபஞ்சங்களும்
பூசைச்சிறுமணியொன்றின் ஒலித்துணுக்கில்

அழியும்

(இக்கவிதை Kaul - என்ற மராத்தி படத்தின் விளைவாக)

Sunday, October 9, 2016

வல்லாங்கின் தீர்க்கமான சி்ல
கணங்கள் 
கூர்மையின் நிழல் 
வட்டமிடுவதை 
ஓங்காரம் செய்தன
பெரியகாட்டு இசக்கியோ
பார்வையற்றவள்
பதிமதியாள்
பல் உடல்காரி
நரநாக்கின் ஆவேச மூர்க்கம்
வெயிலாய் கொதிக்கையில்
மூச்சடையாமல் கொலைபோல
போகிக்கின்றான்
சம்போகம் 
நீட்சியின் நித்திய சூட்சுமம்
செயலாய் இருந்ததன்
முந்தைய
கணத்தில்
தன் பாகத்தின் ஸ்தூல சரீரம்
ரத்தமாகிப் பிளந்து கிடந்ததை
இசக்கியின் மருண்ட முகத்தில்
பூசிய 
வியர்வையில் கண்டான்

வீசியது ரத்த வாடை

Friday, April 1, 2016

தலித்தியலில் பொருளாதாரம்

மேற்கோப்பு பாதிப்பினால் அமையும்  அடித்தளத்தில்  பொருள் சார்ந்த பகுதிகளின் கனத்தை வலுப்படுத்தவேண்டிய கட்டாயம் தலித் வகுப்பினருள் உருவாகியுள்ளது. தான் செயல்படுத்தியவற்றால் இனமேன்மையடையும் உணர்வு அறிவுடைமையற்றதென்ற பிரக்ஞைபூர்வ அர்த்ததளங்களை  பிற்படுத்தப்பட்ட இடைநிலை சாதிகளுக்குள்  உருவாக்க வேண்டிய கடப்பாடுகளையும் இப்போது உணரமுடிகிறது. இவ்விரண்டும் ஒரு இருநூறாண்டுகால செயல்திட்டம் என்ற மேம்போக்கான அரசியல் வரையறைகளாக வறித்துக்கொள்ளாமல் சமூக இயக்கங்களின் அறிவுக்கூறுகளுக்குள்ளிருந்து துவங்குவது பொறுப்புமிக்க செயல்முறையாக அமையும்.
 
இந்தியா என்ற தேசமும் அதன் கல்வியும் வரலாற்றை நமக்கு மதப்பின்னணியின் அடிப்படையில் அறிமுகம் செய்கிறது. சுதந்திரப் போராட்ட கதைகளும் கதை வீரர்களினது வரலாறும் சாதி மத அடிப்படையில் உள்ளன. "சோசலிஷ நாடு" என்ற எளிய புரிதலுக்குள் அடங்காத ஜப்பான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் மட்டுப்படுத்தப்பட்ட அல்லது முக்கியத்துவம் கொடுக்கப்படாத இத்தகைய சமய தத்துவ சிந்தனைகள் நாட்டின் கருப்பொருளிலிருந்து சற்று விலக்கிவைக்கப்பட அங்கு நேர்ந்த தலைமை ஒரு காரணம்.
 
நிலைமை இப்படி இருக்க,  கொடிகட்டிப் பறக்காத எந்தவொரு அமைப்புக்கும் இங்கு கடைசி இடம் அளிக்கப்படுகிறது. தற்போதுள்ள கதியில், இங்கு சாதியை வேரோடு சாய்த்து, சாதீயத்தை ஒழித்து சமத்துவம் நிலைநாட்ட செய்யப்படுகின்றவை உபயோகமானதாக இல்லை.  அதற்கு கொடிப்புண்ணியம் தேவை. கொடி விசாலமாக காற்றில் பறப்பது அவசியம்.
 
இவைகளை மறுத்தே செயல்பட்ட பெரியார் போன்றவர்கள் ,  தங்களுடைய காலத்தில் சமூக அந்தஸ்து ஒன்றினை மட்டுமே அதிகமாக முன்மொழிந்தனர்.  பொருளாதார அறிவியலில் உயர்ச்சி அப்போதைக்கு தேவையாக இருக்கவில்லை.
 
பறையனான  தாத்தா, சம மரியாதையோடு, நாகரிகமாக நடத்தப்படுவது இன்றைய தலித் பேரனின் பெருமையாக உள்ளது. பெரியார் இதில் கன மாற்றங்களுடன் வெற்றி கண்டவர். அவரளவில், அப்போதைய சமூக அபத்தங்களை வைத்துப் பார்க்கும்போது இது ஒரு மிகப்பெரிய தலித்திய விடுதலையாக எடுத்துக்கொள்ளலாம்.
 
இதற்கு மிக நெருக்கமான  பிந்தைய அரசியல் நிறுவனங்களில், இன அமைப்பை ஒட்டிய வாக்கு அமைப்பு பூதாகரமாக உருவானது. முற்றிலும் சமூக அந்தஸ்து மட்டுமற்று பொருளியல் ரீதியிலமைந்த இடத்தைக் கணக்கில் வைத்தும் இது நிர்ணயிக்கப்பட்டதால் இந்திய குணாம்சங்களுடன் கூடிய சோஷலிசம் ஏற்படவில்லை.

இதன் கண்ணியாக நூற்றுக்கும் மேற்பட்ட தலித் கொலைகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
 
என்னளவில், அண்மையில்  நிகழ்ந்த மாணவர் சங்கரின் கொலை சிந்தனைக்குட்பட்ட பலத்த அதிர்ச்சி உணர்வை சமூக உளவியலில்  உருவாக்கவல்லது.
 
தொலைக்காட்சிகளின் பொது நிகழ்ச்சிகளிலும், தினசரிகளிலும் சம்பவம் நிகழ்ந்து வெளிக்கொணரப்படும் பாதிப்பு நிலைக்கும் நேரலை போன்ற பதிவிற்கும் அனேக வேறுபாடுகள் உள்ளன. ஓரிரண்டு நாட்களில் மறந்துவிடக்கூடியதாக கைவிடப்படும் வகையில் சிறப்பாக தகவல் தொழில்நுட்பம் அமைந்திருப்பதை மீறி இதை மேற்கொண்டு பேசி இதை ஒரு கயிறுபோல் பற்றியிருக்க வேண்டும்.
 
பொருளாதாரத்தில் பின் தங்கிய சங்கரின் குடும்ப அமைப்பு, சாதி வன்முறையால் பாதிக்கக்கூடிய சூழலில் இருப்பினும் , முற்பட்ட  வரலாற்று மாற்று தகவமைப்பு பிரச்சினைகளை ஓரளவுக்காவது முடிக்கும் சக்திகொண்டதாக இருந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். தீர்வின் வன்மை அதை அழுத்தமாக சுட்டிக் காட்டுகிறது. பெண்ணின் தந்தையானவர் அகமண முறையை ஆழ்மனத்தில் வறட்டுத்தனப்படுத்திக் கொண்ட விதத்தின் வழியாக அவர் கொடுக்க நினைத்த 10 லட்சங்கள் என்பது உளவியல் அடுக்கில் குறிப்பிட்ட இனத்தின் பொருளாதார பலவீனம்.  இதன் ஆதி சரீரமாக சுதந்திரத்துக்குப் பிறகான முதல் மற்றும் அடுத்தடுத்த தலைமுறைகளின் அரசியல் செயல்பாடுகளைக்  கூறலாம்.
 
கிராம்சியின் 'பண்பாட்டு மேலாதிக்க அரசியல்' வரையறைகளில், அரசு இயந்திரங்களில் பெரிய பதவிகளில், தாழ்த்தப்பட்ட ஒரு மனிதனின் பங்கு என்பது இன்றியமையாததாக சொல்லப்பட்டுள்ளன. இவை முறையே இந்திய குணாம்சமடங்காத ஐரோப்பிய சோசலிசமென்ற தவறான புரிதலின் தொடச்சியால்  நாடு முழுவதும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களுள் உயர்குடி மக்களின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதால் இங்கு செல்லுபடியின்றி தோல்வியைத் தழுவியது. கிராம்சியின் கருத்தாக்கம் மிக முக்கியமான அதிலும் இந்தியா போன்ற நாடுகளுக்குள் இயங்கியிருக்க வேண்டிய ஒன்று. ஆனால், பண்பாட்டு மேலாதிக்கம் எதிர்தளத்தில் அதனினும் சிறந்து இயங்கிற்று / இயங்கியும் வருகிறது.
 
ஒரு கூற்றுக்கு, இன்றைய தலித் வகுப்பில்  பெரும்பான்மையினர் மத்தியில் கலாச்சார மேலாதிக்கமும், பொருளாதார மேலாதிக்கமும் உருவாகியிருந்தால் பெரியாரின் செயல்பாடுகளுடைய தொடர்ச்சியாக அவை இருந்திருக்கலாம். இவை, சமீபத்திய மூன்று தலித் இளைஞர்களின் உயிர்காப்புப் பொருளாக மாறியிருக்க சாத்தியங்களுண்டு.
 
அதே மாதிரி, தற்போதைய நிகழ்வுக்குப் பின் பழிச்சொல்லாகவும், தூற்றுவது போலவும் 'ஆதிக்க சாதி' - யென பொதுமைப்படுத்தப்படும்  வரையறைக்குள் படுகொலை நிகழ்த்தும் சாதிகள் அடங்கிவிடாது. தனிப்பட்ட - குடும்ப வட்டத்திற்குள்ளிருந்து திட்டமிடப்படும் கொலைகள் என்பதற்கு மேலாக அதில் எதுவுமில்லை. தேசிய ரீதியாக அவர்களெல்லாம் எவ்வளவு தூரம் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பது ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் முடிவுகளிலிருந்து அறியலாம். (பார்க்க: சாதி, வர்க்கம், மரபணு, பக்கம் -46). இதனோடு Dr. சந்தோஷ் கோயலின் ஆய்வுமுடிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளல் வேண்டும். ஒரு குறிப்பிட்ட இனம் ஒடுக்கப்படுவது என்பது அதன் சமூக அந்தஸ்து, உடைமை பலம், பிறப்பாலான வகுப்புப்பிரிவு போன்ற பல காரணிகளால் அமையும். இதில் அம்பேத்காரும், பெரியாரும் தொட்ட இயங்குதளங்கள் கச்சித முழுமையடைதலை நோக்கி செல்லாவிட்டாலும் அவர்களுடைய தொடக்கம் சமூகப்புரிதலை அடுத்த தலைமுறையினருக்கு அளித்தது உண்மை.
 
ஏனெனில், இப்படிப்பட்ட கட்டுமானம் அடிவேரிலிருந்து ஏறி பல ஆண்டுகளாக மனித மனதில் ஆழமாகப் பதிந்தவை. வேரோடு சாய்ப்போம், மாய்ப்போம் என்பதெல்லாம் நிஜப் புரட்சியாளர்களாலேயே இயலாத காரியம். சமகாலத்தில் அய்யன் காளி, சியாம் சுந்தர், பெரியார் போன்றோருடைய கூட்டுச் செயல்பாடுகள்தான் சாதீயப்பிடி மக்களிடையே நழுவ சட்டமியற்றிருக்கும். அப்படியான வழித்தோன்றல்கள் உருவாகாத நிலமாக இந்திய சமூகம் வாழ்ந்ததால் அதை அழிப்பதும், ஒழிப்பதும் கடினம்.
 
இன்றைக்கு சினிமா வளர்ந்த விதத்தில் சாதீயத்துக்கும் பங்கு உண்டு. அதற்கு முழுமையான சாதீய சுதந்திரத்தை சினிமாக்கதைகளில் பின்பற்றியதே காரணம். அவ்வாறு ஒருமுகப்பட்ட  சார்பு கொள்கைகளின்  சந்தர்ப்பங்களினால் கூட, சினிமாவில் சாதீய சுதந்திரம் மலிந்து காணப்படுவதில் ஆச்சர்யமில்லை. ஒப்புக்கு இதை சொல்கிறேன்.  ஒரு குடிசைவாழ் பெண்மணியைப் பிடிக்க வடிவேலு குழாம் திட்டமிடும். அங்கு சென்றவுடன் அவள் கூறுகின்ற வசைமொழியால் திக்கித் திணறுவர். முதலில் ஒரு போலீசை அனுப்புவார்கள். அவர் பேயறைந்ததுபோல் வரவும் வடிவேலுவே செல்வார். குடிசைக்குள் அந்தப் பெண்மணி அம்மணமாக நிற்பதைப் பார்த்தவுடன் பிடிப்பதுபோன்று பாவலா செய்து அவளது  அம்மணத்தை நின்று  ரசிப்பதால் அந்தப் பெண் குடிசையின் பின்பக்கமாக ஓடிவிடுவாள்.
 
ஒரு பார்வையில் இதுதான் இன்றைய போலீசுகளின் முகம் என்று நகைச்சுவையோடு இவர்கள் வற்புறுத்த முயற்சிசெய்தாலும், வெளிப்படுத்த எடுத்துக்கொள்ளப்படும் பிராந்தியம் அடித்தட்டு சாதியைச் சேர்ந்த மக்களின் வாழ் நிலமாக உள்ளது.
 
நமக்கு சினிமா அறிமுகமாகுகையில் தெய்வபக்தியே மேலோங்கி நின்றது. நாள்தோறும் வீடுகளில் இறுக்கமான சமய மரபுகளைப் பேணிக் காத்து வருவதே அப்போதைய சினிமாக்களின் கடமையாக இருந்தன.  (ஸ்ரீவள்ளி, சிந்தாமணி போல) பின்பு, தத்துவங்களும், மன்னர்களும் அவ்விடத்தைப் பிடித்தனர். [தூக்கு தூக்கி, மருத நாட்டு இளவரசி போல] அதற்கும் பின்பாக, ஜனரஞ்சக இந்தி சினிமாவின் தாக்கத்தால் பல வர்ணங்கள் திரையில் ஜொலித்து கண்களை ஆய்ந்தன. இதன் பின்னரே சாதி அடிப்படையிலான படங்கள் உள்வந்தன.
 
அவையனைத்தும் பண வசதியாலும், பூரண அந்தஸ்தினாலும் ஏற்றமடைந்த வகுப்பு மக்களைப் பெருமைப்படுத்துவதாகவே அமைந்தன. அவையும் நேர்த்தியற்ற, லாபமிக்க அரசியல் தன்மை பெற்றவை.  இக்கட்டத்தில் வெளிவந்த, ஒருசில தமிழ்ப்படங்களில் மட்டும் தட்டையான முற்போக்கு அம்சங்கள் பேசப்பட்டன.
 
இதே காலகட்டத்தில் வேறு சில இந்தியப்படங்கள் தலித் மக்களின் வாழ்வியலை நேர்மையோடும், நுட்பமாகவும் பேசிற்று. (சாஜி.என்.கருணின் வானப்பிரஸ்தம்,சத்யஜித் ரே-யின் சத்கதி, ஷ்யாம் பெனகலின் அங்கூர்,  மிருணாள் சென்னின் காஹ்ரிஜ், பி.வி.காரந்தின் சோமன துதி போன்ற மகத்தான படங்களும் வெளிவந்துகொண்டுதான் இருந்தன)
 
பொதுசனத் திரளில் வலிமையான பிம்பத்தை உருவாக்குவதினால், சினிமாக்கள் எப்போதும் மிகவும் கவனமாக எடுக்கப்படவேண்டியவை. கதைகளில் அதி உணர்வுபூர்வமான கருத்தாக்கங்களைச் சேர்ப்பதில் முற்போக்கு அரசியல் தெளிவும், நேர்மையையும் கடைபிடிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே இயங்குவது சிறப்பாக அமையும். ஆனால், மனிதப் பிரிவினை சார்ந்த சிக்கலான கருத்தியல்கள்  கொண்ட கதைகளை சினிமாவாக எடுக்கும்பொழுது வணிக நோக்கிற்காகவும், தெளிவற்றும் மேலும் வகுப்புவாத பிரிவினையை வளர்க்கும் முயற்சியை மட்டுமே மேற்கொள்கிறார்கள்.
 
பொதுவாக இத்தகைய சினிமா என்பது கதையாடல்களின் தொகுப்பு என்பதால் இக்கதையாடல்களைப் பிரதிபலிப்பதில் மாற்றங்கள் கொண்டுவருவதை குறியியக்க கோட்பாடுகள் கொண்டு விளக்கலாம். குறியியக்கத்திலுள்ள   பிரதிமம், தொன்மம், சின்னம் இவற்றில் முக்கியமானதாக பிரதிமமே மேலோங்கி நிற்கிறது. மற்ற இரண்டும் எல்லா தளங்களிலும் நிலைக்காத பட்சத்தில் அதன் இருப்பின்மை பிரதிமத்தை பாதிக்காது என்பதன் அடிப்படையில் சாதியின் குறியியக்க கூட்டுருவாக்கம் செயல்படுகின்றது.

பிரதிமத் தத்துவம் கதையாடல்களை முன் வைத்து நகர்கிறது. அந்தந்த தெய்வங்களுள், அது குறிக்கும் சாதிகள் அடங்கியிருப்பதாலும், அத்தெய்வங்கள் வைத்திருக்கும் தொல்கதைகளின் மறுகட்டமைப்பினாலும் சாதீய உணர்வு குறைக்க வழிப்படுத்தலாம் என்பது பிரதிமத்தின் கருத்து.
 
புரிதலுக்காக - திருப்பாணாழ்வார் என்பவர் பாணர் குலத்தைச் சேர்ந்தவர். பாணர் தாழ்த்தப்பட்ட இனமாக கருதப்படுகின்றது. தாழ்ந்த சாதியில் பிறந்ததால் அவர் ஒதுக்கிவைக்கப்படவில்லை. மாறாக அவர் ஏற்றுக்கொண்ட பக்தி இயக்கம் அவரை முன்னிறுத்தி வணங்கிற்று. மிஷனரி செயல்பாடென்ற ஒற்றைப் பரிமாணத்தை மீறி  இது குறிக்கும் வரலாற்றுப்பார்வையை கவனிக்க வேண்டும்.
 
பாணர் குலம் இசைக்குப் பேர் போனது. ஆழ்வார் ஆகும் முன் அவர் இசை இசைத்து வாழ்வு நடத்தியவர். பக்தி மார்க்கம் தழுவியதன் மூலம்  அவர் தன் கீழ்சாதியிலிருந்து உயர்ந்துவிட்டார் என்று மத விற்பன்னர்களால் இன்று சொல்லப்படும் கூற்று  உவப்பானதல்ல.  ஒரு சிறந்த இசைக் கலைஞனின் தோற்றமே அவருடைய வளர்ப்பினால் குறிக்கப்பட்ட அடையாளத்தை மேன்மை செய்வதாக புரிந்துகொள்ளல் வேண்டும். இதற்கு எதிர்மறையாக  உயர் குலத்தில் பிறந்த ஒருவர் குற்றவாளியாகும்போது தன் பிறப்படையாளத்தை விட்டு பெரியவர்களால் வளர்க்கப்பட்டதை எண்ணும்போது சாதி அடையாளம் இரண்டு அல்லது மூன்றாம்பட்சத்திற்குத் தள்ளப்படுவதாக பிரதிம விளக்கங்கள் கூறுகின்றன.
 
இதனால், தன் குலத்தை எண்ணி தாழ்மையுணர்ச்சி கொள்ள வேண்டிய அவசியம் திருப்பாணாழ்வாருக்கு இல்லை எனவும் அல்லது இசை மேதைமையை ஆணவத்திற்குள் கொண்டு வராமல் இருப்பதாகவும், குற்றவாளியின் பூர்வீக வளர்ப்புப்பார்வை சமூக கூட்டுமனம் உணர வழிசெய்தலே சாதீயம் உதிர்தலின் ஆரம்ப நிலை.
 
இதே போக்கு வீரன் சுந்தரலிங்கம், இமானுவேல் சேகரன் போன்றவர்களிடம் பிற்காலத்தில் உருவாக்கலாம்.
 
தற்போதைய நிலவரப்படி சுவடில்லா சாதீயத்தின் சாத்தியங்கள் குறைவு. சாதீயம் இருக்கும். அதன் அடையாளங்களும் நம்மிடையில் உலவும். தவிர வன்முறைப்படுத்தப்படத் தேவையான உணர்வுப் பெருக்கின் வீச்சில் மாற்றங்கள் ஏற்படலாம். இதுவே சாதீய அழிவின் தொடக்க நிலையாக இருக்கும்.
 
சாதி ஒழிப்பு மிக நீண்ட செயல்பாடு என்பதால் (Very long process) அதன் ஆரம்பத்திலிருந்து மக்களிடையே  கலை உணர்வை அதிகரிப்பது முக்கியமான ஒன்று. அதிகரிக்க வேண்டுமென்பதைவிட அதற்கான இயங்குவெளியும் , பிறப்பின் மூலமான அடையாளப் புரிதலாவதை சிறு வயதில் விவரமேற்படும் பருவத்திலிருந்தே  சாதீய அலகுகளின் அடிப்படையற்று  குழந்தைகளை வளர்ப்பதும்  முக்கியமானது.
 
கலை என்றால் மொத்தமும் ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் அகப்புரிதலுக்கு ஏற்றவொன்றாக இருப்பதற்காக அதை சம்பாத்திய அடிப்படையில் ஏற்படுத்தும் நிலையை வலியுறுத்துவது. காரணம், கிரிக்கெட்டில் சோபிக்கும் நிலை வரை செல்வது நடுத்தர , அடித்தட்டு யதார்த்ததுக்கு ஒவ்வாததால் வேறொரு மாற்று இயக்கம் நோக்கி துணிபு கொள்வது தமிழ்ச்சமூகத்தின்  கட்டுமானப்படி அவை பொருளாதாரத்தின் நிறைவை ஒட்டியே தீர்மானிப்பதாக அமையும். சொன்னபடி , கவிதை எழுதுதலும், ஓவியம் வரைதலும் மட்டுமல்ல இங்கு சொல்லப்படும் கலை. டி.வி. பெட்டியை சரி பார்ப்பதும், மர வேலைக்குள் நாட்டமிருப்பதும்கூட கலைச்செயல்பாடுகளே.  அவை பொருளீட்டின் பொருட்டு முழுமையாக வரும் பொழுது சிக்கலான பல கண்ணிகள் கொண்ட இந்திய உளவியலுக்கு உகந்த கலைச் செயல்பாடுகள் என அர்த்தப்படும்.   மார்க்சிய அடிப்படைகளோடு கூடிய கல்விப்  புலம்  பரவலாக நிகழுகையில் மேற்கூறிய செயல்களில் ஏற்றம் (Improvement) அமையும்.
 
சாதி வாரியான தொழில்களில் கூலிப் பட்டுவாடாவில் நெருக்கடி என்பது காலங்காலமான ஒன்று. ஆனால் கூலி அடிப்படையிலான  பொருளீட்டில் ஏற்றத்தாழ்வுகளும் உண்டு. (உ-ம்) தெற்கில் பள்ளர் இனத்தினர் நடுகைச் சடங்குகளில் ஈடுபடுகிறார்கள். நடுகை நிகழ்வு தொழில் என்பதை மீறிய பொழுது கழிப்பாக உள்ளது. அதில்,  அவர்களிடையேயான நடுகைக் குழுக்களில் இருக்கும் மதினி முறை குழுக்களை விட பணம் சேர்க்கும் தாய், மகள் குழுக்கள் குறைவு; உடல் சம்பந்தப்பட்ட நிகழ்வென்பதாலும் அதன் சொற்ப வருவாய் பெருத்த மாற்றங்கள் கொணராதென்பதாலும் இவற்றை எதிர்மறைக்குள் செலுத்த இயலாது எனினும் சமகால கீழ்வகுப்பு பொருளாதாரத்தின்படி இக்குழுக்களுக்குள்ளும் பெருக்கம் அவசியப்படுகிறது. முதலீட்டிய நெருக்கடி அவசியம்  என்பதை மீறி அவர்களின் கூலிப் பட்டுவாடாவில்  பெரிய மாற்றங்கள் தராமல் போனாலும் ஒரு வகையில் பொருளாதார சமநிலைக்கு உதவலாம்.
 
நடுகை நிகழ்வுக்கு முன்பு நடுகை சடங்கில் நிலத்தின் வடகிழக்கில் நடைபெறும் நாற்றுப்பயிர்களின் திருமண முறைகளில் கடைசியாக பாலியல் சொற்களால் ஒருவரையொருவர் வசை பாடும் நிகழ்வு நடக்கும். முதலாளித்துவ பேருக்கு அதிக போகம் தர வேண்டும் என்றாலும்கூட அவை சாதீயத்தின் அடையாளங்களாக அடித்தளங்களில் படிந்துள்ளன. அவை பார்வைக்குப் படாதிருத்தலே சமூக அவலம்தான்...
 
தலித் இனக்குழுக்களில் மார்க்சிய அடித்தள கருத்தியல்களுக்கு வலுசேர்க்கும்பொழுது தலித் மக்களின் பொருளீட்டு முறையில் நிகழும் மாற்றங்கள் இனப்படுகொலைகளையும் இன்னபிறவற்றையும் தவிர்க்குமென்றால் பொதுவான கல்வியியலிலிருந்துதான் அது துவங்கும். அதற்குரிய பாரிய மாற்றங்கள் ஏதும் நிகழாதுபோகும் ஆகச்சிறந்த சூழலில் இக்கட்டுரை வனையப்படுகிறது.
 
---------------*****---------------
 
உதவிய நூல்கள் :
 
அல்தூசரின் சித்தாந்தம் - இன்னும் சில கட்டுரைகள் - வெங்கடேசன் 
சாதியில் குறியியக்கம் - கட்டுரை - ராஜன் குறை .
இஸ்லாம் - மார்க்சியம் - கட்டுரை - ஹெச்.ஜி.ரசூல்.
சாதி , வர்க்கம், மரபணு - ப.கு.ராஜன்.