அதிகார மையத்துக்கு எதிரான தோல்வியால் நிகழும் தற்கொலைகளை அர்த்தப்படுத்திக்கொள்வதில் முதன்மையான சிக்கலாக "தனிமனித குணாதிசயம் சார்ந்ததாக வரையறுத்தல்" என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கமான கருத்து.
இவ்வழக்கப்பட்ட கருத்தை எதிர்ப்போரில் அனைத்து மாற்றுச் சிந்தனையாளரும் அதற்கு எதிரான பக்கத்தில் நின்றுகொண்டு "வழக்கமான" கருத்தை வெளிப்படுத்தியவரோடு வாதிடுவது பாரம்பரியப்பட்டதல்ல. புதுமையானது.
நூறாண்டுகளுக்கு முன்னர், தன்னை மாய்த்துக்கொள்ளும் ஒருவரின் மரணத்தைப் பற்றிய உரையாடல்களில் "வழக்கமான" சிந்தனை முறையின் விகிதமே மேலோங்கியிருந்தது. ஆனால் இன்று அதன் சாத்தியங்கள் நவீனப்பட்டு விரிவடைந்திருக்கின்றன.
தனிப்பட்ட குணாதிசயங்களை குறிப்பிடுவோரின் கருத்துப்படி மரணித்தவர் குற்றமிழைத்தவராக புரிந்துகொள்ளப்படுகிறார். தடைகளை மீறி வாழ்வதற்கு முயற்சிக்காமல் கோழையாகவும், பொறுப்பற்றும் தன்னைத் தானே கொலை செய்துகொள்வது என்பது முட்டாள்தனமானது என்றும் அனைத்தையும் தாண்டி வாழ்பவரே முதிர்ச்சியானவர், கல்வி பயின்றவர் என்பதும் இவர்களுடைய சிந்தனை வடிவம்.
தற்கொலைக்கான காரணம் எதுவாக இருந்தாலும் முதலும் முடிவுமாக பாதிப்படைந்தவரே குற்றவாளி என்ற விதத்தில் யோசிக்கும் பொதுமனம் இவர்களுடையது.
இதற்கு எதிர்ப்புறமுள்ள மாற்று சிந்தனைக்காரர்கள் தற்கொலைக்கான காரணம் சமூக அரசியல் தொடர்பாக இல்லாத பட்சத்திலும் வேறு எந்த தனிமனித காரணங்களிலும்கூட "வழக்கமான" கருத்தியலாளர்களின் சிந்தனைப் போக்கை ஏற்றுக்கொள்வதில்லை.
அதாவது, ஒரு ஆண் அல்லது பெண் காதல் தோல்வி/கடன் தொல்லை/மானபங்கம்/இழிவுபடுத்துதல் போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொண்டாலும், தற்கொலை செய்துகொண்டவரையே குற்றவாளியாகப் பார்ப்பதில்லை. அதற்குப் பதிலாக துயரத்திலும் அதற்கான ஆறுதலிலும் பங்குகொள்கின்றது.
தற்கொலை சம்பவம் ஒரு சமூக அரசியல் பின்னணியில் நிகழும் பட்சத்தில் "வழக்கமான" சிந்தனைப்படி தற்கொலையாளனே குற்றவாளி என்பதை தீவிரமாக எதிர்ப்பதோடு தற்கொலைக்கான உண்மையான காரணங்களாக விளங்கும் அரசு இயந்திரம் அதனோடு சேர்ந்தியங்கும் முதலாளியம், சாதியம், நிலப்பிரபுத்துவம், உலகமயமாக்கம் போன்ற கருத்தியல்களை மிகவும் பலமாக எதிர்க்கின்றது.
சமூக-அரசியல் பின்னணியில் நிகழும் தற்கொலைச் சம்பவங்கள் பெரும்பாலும் மாற்றியமைக்கப்பட்ட கொலை என்பதே மாற்று சிந்தனையாளர்களின் ஆழமான நம்பிக்கை. மிகவும் சரியான நம்பிக்கையும் கூட.
அனிதாவின் இறப்பிற்கு முன்பிருந்து தற்கொலை வரை தற்கொலையின் இயக்கத்தை கீழுள்ளவாறு சொல்லிப்பார்க்கலாம்.
அனிதா --> உயிர்நிலை இயக்கம்
மருத்துவர் --> பண்பாட்டு மேலாண்மை நிலை
நீட் --> முதலாளிய அலகு
தற்கொலை --> உச்சபட்ச எதிர்ப்பு
உச்சபட்ச எதிர்ப்பின் முடுக்கம் --> அதிகார மையம்
உச்சபட்ச எதிர்ப்பின் முடுக்கம் --> அதிகார மையம்
இந்த தொடரியலில் அனிதாவின் ஒரே கனவாக இருந்த மருத்துவர் பட்டம் அதிகார மையத்தால் மறுக்கப்படுகிறது. மருத்துவர் என்ற பட்டத்தை அனிதாவின் கண்ணோட்டத்திலிருந்து வெறும் பொருளாதார மூலமாக (Economical source) மட்டுமே பார்க்க முடிவதில்லை. தன்னைச் சூழ்ந்திருக்கும் தன்னோடு சேர்ந்த சனங்களின் பண்பாட்டு உயர்வாகவே இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
முதலாளிய அலகுகளின் உலகளாவிய பண்பு உயிர்நிலை இயக்கங்களை கட்டுக்குள் வைத்துக்கொள்வதும் அபகரிப்பதுமேயாகும். இதை செயல்படுத்த மத்திய/மாநில அரசுகளின் தொடர்பு தேவைப்படுகிறது.
காடு, மலை, ஏரி, கடல், நதி, நிலம், மனிதன் போன்ற உயிர்நிலை இயக்கங்கள் எப்பொழுதும் முதலாளியத்தின் கட்டுக்கோப்பிற்குள் இருக்க வேண்டும் என்பதே அனைத்து அரசுகளின் ஒரே கடமை.
ஆகவே, முதலாளியத்திற்கு எதிராக போராடிய உயிர்நிலையை ஒடுக்கும்பொழுது முதலாளியத்திற்கு வெற்றி கிடைக்கின்றது.
இங்கு நீட் என்ற அலகு தன்னை எதிர்க்கவரும் உயிரியக்கத்தைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். இதனை இயக்கும் மத்திய அரசு முதலாளிய வன்முறையாக அனிதாவை படுகொலை செய்து தனது தடையின் முதல் சிறுகல்லை தூக்கி எறிகின்றது. அனிதாவின் பக்கத்திலிருந்து வெளிப்படும் உச்சபட்ச எதிர்ப்பாக உயிரியக்கத்தின் தொடர்நிலை முடிவுறுகின்றது. இதற்கான தூண்டுதல் அதிகார மையத்திலிருந்து அனிதாவிற்கு கடத்தப்படுகின்றது.
மேலும் தொடர்ந்த ஆய்வியல் தரவுகளிலிருந்து கண்டுகொள்ளப்படவேண்டிய துல்லியமான காரணங்களை, பொதுமனம் எளிதாக தற்கொலை செய்துகொண்டவரின் மீதே அனைத்து பழிகளையும் சுமத்துவதால் ஏற்படும் சிக்கல்கள் இரண்டு.
சமூக காரணங்களினால் தற்கொலை செய்துகொள்பவர்களை குறைகூறுபவர்களின் சிந்தனை வடிவத்தில் சாதியம்/முதலாளியம்/அதிகார பண்பு போன்றவையும் ஒன்றிணைந்திருப்பதினால்தான் பொதுமனத்தின் கருத்தினை எதிர்க்க நேரிடுகின்றது என்ற மாற்று மனத்தின் கருத்தியலை அறியாமல் இருப்பது முதல் சிக்கல்.
அதாவது அனிதாவின் தற்கொலையில் முதலாளியமும், அரசதிகாரமும், சாதியமும் நீட் என்ற வடிவில் தொடர்பில் இருந்து வந்திருப்பதால் அவருடைய மரணத்தில் அவரையே குற்றம் சாற்றுபவரும் அரசின், சாதியத்தின், முதலாளித்துவத்தின், நிலப்பிரபுத்துவத்தின் ஆதரவாளர்களாக மாறிவிடுகிறார்கள் என்ற உண்மையை உணராது போவது.
இரண்டாவதாக, அவர்களுடைய அறியாமையை அப்பாவித்தனம் என்று ஏற்றுக்கொண்டு விலக முடியாமல் போகும் மாற்று மனத்தின் தவிப்பு.
வழக்கமான மன அமைப்பு காலவெளியில் கலை இயக்கங்கள் சமூகங்களோடு தொடர்புகொள்ளும் விகிதாச்சாரம் உயரும்பொழுது தன்னை திருத்திக்கொள்ளும் என்பது என் நம்பிக்கை.
No comments:
Post a Comment