Pages

Tuesday, December 17, 2019

                     ஆனாலும்
உனக்குள்
கரைந்து
தேங்கியிருக்கும்
அன்பை

உணர்ந்துவிட
முடிகிறதுதான்

################
#####################

ஒரு இரவுக்குள்
இன்னொரு இரவை வைப்பதை 
விட
சுலபமானதும்
குரூரமானதும்
ஒரு இரவை
இரவாகவே நீட்டிப்பது#####################


ஏதோ ஒரு 
நிலை 

ஏதோ ஒரு
புள்ளி 

ஏதோ ஒரு
ஒளி

அவள் முகம் 
அந்த முகத்தில் 
வேகமாக...

கைகளின்
பாழடைந்த ரேகை 
ரத்தம் 
பிணச்சாம்பல் 
அருள் மாடம் 

கலங்கிய நிறவெளிக்குள் 
ஆகாயம் 
கீறல்களாய் மழைக்கோடு
கேவல் ஒலிர்க்கும் 
நீள மின்னல்
கூதலில் நடுங்கி
மேகம் கலைந்து
தோற்றம் பால் வெளி
சாமி மாதிரி
கருவறையெங்கும் 
அருவச்சுரோனிதம் 
தாயாரவள்
சுடர் தீவிளக்கு
கருத்து மின்னும் 
அம்பாளே என்பார் சிலர்
கழுத்து உடைந்த
சிலை
எச்சமிடும் பறவையின்
புராதன வாசனை 
பாடிய பாணன் 
உண்ணும் உமிழ்நீர்
பண்டாரப் பிச்சை
களைத்த கால்கள்
பூசை 
புகை
பித்தில் பூதேவி
பரண் மேல்
போதைப் பிரக்ஞை
பறை வெடித்துப்
புவி உதிர  
பேதையே உயிராகி
ஊன் விழுங்கிய சுக்கிலம் 
தோற்று 
புரியாத மனவொலி 
பிதற்றும் மனோபாஷை 
ஒருவனுக்குள் 
அத்தெய்வம் 
புக 
புக
உள்ளுள் உள் 
உன்மத்தம் 
அதற்குள்
ஒருவன்
அவனுக்குள் 
இவன்
இவன் என்பதோர்
அவன்
அவனே யான்
யான்
என்
சித்தம்
ரணம் 
அவள் 

#################

உன் முகத்தால் 
ஆனது 
அமைதி 

மலைக்கிராமத்தில் 
தேவாலயம் 
வசிக்கிறது 

உச்சி வெய்யிலின் 
கீழ்
பாசிகளாலான
பழைய கோயில்

எங்கள் கிராமத்தில் 
குட்டிக் குட்டிப் பிறைக் கூம்பின் 
வழி கசியும் 
இறைவனின் பள்ளியும்தான் 
அது

மேலும் 
அவ்வமைதி 

போர்களைக்
கூத்தாக்கி 
இரவெங்கும் 
கேலி செய்வது

பிணங்களை
உந்தியின் 
நீரசைவுக்குள் திரும்பவும் 
நீந்தவிடுவது 

பிறழ்வை 
கொஞ்சம் நேர்படுத்திப்
பார்ப்பது

கடினமான 
உடலிலிருந்து 
கடினமற்ற
மனதை
உதறி இழுப்பது 

###################
என்றும்
எக்கணமும்
எச்சூழலிலும்
எந்த இடத்தில் நான் உறங்கினாலும்
எப்படிப்பட்ட பயணக்களைப்பிலும்
பகல் நேரத்திலும்
வந்த 
கனவுகளில்
புணர்தலின் நிமித்தமாய்
அவள் 
வருகை 
நிகழ்ந்ததில்லை

கனவெனும் 
அப்பாற்பட்ட நிலத்தில்
ஒளிரும்
பிரக்ஞைச்சுடர்

##############

மலை
அதீத குளிர்மையை 
என்றால்
தகிக்கும் அனலில் 
மரம் நிழலைப் பெயர்த்து
நிலவு ஒளியை உருவி
மழை தன் ஈரத்தை உறிஞ்சி 
ஆகாயம்
நீலத்தை ஒழுகவிட்டு 
அவள் சவம் குளிர் சாதனப் பெட்டியில் இன்னும் 
இன்னும் 
வாழ்ந்துவிட

நீர்மையின் அன்பு
இப்பூதங்களின் பேய்த்தன்மை.

########

ஈசலின்
நிச்சயமற்ற 
பறத்தல்
எனக்குள்
நின்றிருக்கும் 
நீ
உடனான
என் சந்திப்பு.

###########

உன்னை 
உடலாக நான் 
கண்டதில்லை 
மனமாகவே
காண்கிறேன்

##########

ஏதோ சொல்ல 
வேண்டும் 
ஆனால் 
சொல் என்பதே
நிராதரவாக
நிற்க 

############


அவளது
நிழல் 
என் 
பூத உடல்

#########


அன்பை
வீசி அடிக்கும் 
மழையைப் போல
சூறலிடுகிறேன் 

யோசித்தால் 
அதன்
ஈரத்தைக்கூட 
உன்னிடம் 
நான்
உணரவில்லை 

இருள் 
என்றால் 
பார்வையற்றவர்
கைகளால் 
தேடும் 
வெளிச்சம்

பின்னந்தலையை
யாரோ இழுத்து 
நீர்ச்சுழல் 
வழி படித்துறையில்
அலறுவதே
நதி

வந்து பின் செல்லும்
அலைகள்
சிறுமியை 
மேலும் மேலும்
கரைமணலில் ஒதுக்க 
வேடிக்கைப் பார்க்கும்
கடலாக

அன்பு
என்னிடம் எப்பொழுதும் 
அனாதையாகவே 
கிடக்கிறது

நாதியற்ற
அசட்டையாக ஓடி
சாலையில் நசுங்கும் 
நாயாகவே 
உள்ளது